மின்மினிப் பூச்சி, கொலியோபெட்ரின் என்ற உயிரின குடும்பத்தை சேர்ந்தது. தமிழ் நிகண்டு மின்மினியை, நிசாமணி, ஞவல், நுளம்பு, கத்தியோதம், அலகு, கசோதம், அலத்தி என்ற பெயர்களில் குறிப்பிடுகிறது. இதை ஆங்கிலத்தில் 'பயர்பிளை' என்பர். அதாவது, பறக்கும் நெருப்பு பூச்சி. வண்டு இனத்தை சேர்ந்தது. ஒளிர்ந்தபடி இரவில் பறந்து மனம் கவரும்.
இந்த பூச்சி எப்படி ஒளிர்கிறது என்பதற்கு உரிய விடையை தேடுவோம்...
மின்மினியில் உலகம் முழுதும், 2,000 இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் முட்டை, புழு, முதிர்ந்த வண்டு என எல்லாமே ஒளிரும் திறன் உடையவை.
இதன் ஒளிக்கு எரிபொருளாகப் பயன்படுவது, 'லுாசிபெரின்' என்ற ரசாயன கூட்டுப் பொருள். இதில், 'லுாசிபெரெஸ்' என்ற என்சைம், 'ஏடிபி' என்ற ரசாயனம், ஆக்சிஜன், உயிரணு மற்றும் மக்னீஷியம் கலந்து உள்ளன. இவை, சேரும்போது ஒளி உண்டாகிறது.
இந்த பொருட்கள் மின்மினி பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் நிறைந்துள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் ஒளி உருவாகாது.
மின்மினிப் பூச்சியின் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்பு, விட்டு விட்டு துாண்டப்படுவதால் ஒளிர்வதும் விட்டு விட்டு நடக்கிறது. இப்படி தான், மின்மினிப் பூச்சி இரவில் மினுக்கி வியப்பில் ஆழ்த்துகிறது.
பெண் மின்மினி மண்ணில் முட்டையிடும். நான்கு வாரத்தில் முட்டையில் இருந்து புழுக்கள் வெளிவரும். புழுக்கள் கோடை காலத்தில் நன்கு சாப்பிட்டு, குளிர் காலத்தில் மண்ணுக்கடியில் பதுங்கிவிடும். பெரும்பாலும், மண்புழு மற்றும் நத்தையே இவற்றுக்கு உணவாகின்றன.
மின்மினியின் லார்வா புழு இரையைப் பிடித்துத் தின்னும் விதம் அலாதியானது. இரையைக் கண்டதும் முதலில் அதை மயங்க வைக்கும். இதற்கென்றே இதன் முகத்தில் பிரத்தியேகமாக அரிவாள் போன்ற கொடுக்கு உள்ளது. அதை வைத்து இரையாகும் உயிரினத்தின் மீது ரசாயன பொருளை செலுத்தி மயக்கமடையச் செய்யும்.
பின், அதன் மீது செரிமான நொதியை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையாகும் உயிரினத்தின் உடல் கூழாக மாறிவிடும். உடனே, மின்மினி லார்வாக்கள் அதை சூழ்ந்து உறிஞ்சி குடிக்கும்.
சில பறவைகள், இரவு ஒளிக்காக, இந்த புழுவை கூட்டில் வைத்திருப்பதும் உண்டு. சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இது பற்றி கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளே... இயற்கையின் இயக்கத்தை அதன் விந்தை செயல்களில் இருந்து கற்று பாதுகாப்போம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.