உலகில், 192 நாடுகளில் தபால் நிலையங்கள் உள்ளன. ஆசியா - ஐரோப்பா கண்டங்களை உள்ளடக்கிய ரஷ்யா பகுதியில், 1589ம் ஆண்டிலே தபால் நிலையம் இயங்கியதாக வரலாறு கூறுகிறது.
ஐரோப்பிய நாடான அயர்லாந்து டப்ளின் நகரில், 1818 முதல், தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. வட அமெரிக்க நாடான, கனடா டொராண்டோ நகரில், 1833 முதல், செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, நியூயார்க் நகரில் உள்ள பார்லி தபால் நிலையம் மிகப்பெரியது.
இந்தியாவில், 1 லட்சத்து, 54 ஆயிரத்து, 725 தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில், பல லட்சம் பேர் பணி புரிகின்றனர்.
இந்தியாவில் மிகப்பெரியது, மும்பை பொது தபால் நிலையம். இது, 1913ல் துவங்கிய கட்டடத்திலே இன்றும் இயங்குகிறது. இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக, 'லிப்ட்' இயங்கி வருகிறது. போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், அதில் பயணம் செய்து தான், அலுவலக அறைக்கு செல்வார்.
பெண்கள் மட்டும் பணிபுரியும் தபால் நிலையங்கள் டில்லி, மும்பை நகரங்களில் உள்ளன. தபால் தலைகளை பயன்படுத்துவது, 1840ல் துவங்கியது. தபால் தலைகள், சதுரம், முக்கோணம், வட்டம், என பல வடிவங்களில் உண்டு.
இனி, உலகின் வித்தியாசமான தபால் நிலையங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...
இமயமலை எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள டிங்கிரி பகுதியில், கடல் மட்டத்திலிருந்து, 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் தபால் நிலையம் இயங்குகிறது. உலகின் மிக உயரத்தில் இயங்கும் தபால் நிலையம் இது தான்.
ஆஸ்திரேலியா கண்ட பகுதியில் உள்ள வானுவாடு தீவில் கடலுக்கு அடியில், ஏழு மீட்டர் ஆழத்தில் ஒரு தாபல் நிலையம் உள்ளது. இங்கு செல்ல, 'ஸ்கூபா டைவிங்' தெரிந்திருக்க வேண்டும். கடிதம் எழுத, 'வாட்டர் ப்ரூப் போஸ்ட் கார்டு' கிடைக்கும்.
சுற்றுலா பயணிகள் இங்கு தபால் கார்டு வாங்கி கடிதம் எழுதுகின்றனர்.
அண்டார்டிகா, ஸ்க்ரெய்ஜ் என்ற இடத்தில், ஒரு தபால் அலுவலகம் உள்ளது. ஆனால், அண்டார்டிகாவில் முதன்முதலில் தபால் நிலையம் துவங்கிய பெருமை, இந்தியாவுக்கே உண்டு. இங்குள்ள இந்திய ஆய்வு நிலையமான, தட்சிண கங்கோத்ரியில் இது இயங்கியது. கடந்த, 1990ல் மூடப்பட்டது.
அமெரிக்கா, ஹவாய் தீவு, மோலகாய் பகுதியில், தேங்காய் அனுப்பும் தபால் நிலையம் இயங்குகிறது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள், ஒரு தேங்காயை மட்டையுடன் வாங்கி அதில், 'ஸ்டிக்கர்' ஒட்டி, ஓவியம் வரைந்து, அனுப்புகின்றனர்.
இரண்டு வாரத்தில் அது உரியவரிடம் சேரும். இந்த சேவை அமெரிக்காவிற்குள் மட்டும் கிடைக்கும். மகிழ்ச்சிக்காக பலர் இதை அனுப்புகின்றனர்.
- ராஜிராதா