தருமையில் வசித்து வந்தார் ஒரு வாழைப்பழ வியாபாரி. தினமும் கூடையில் வாழைப்பழம் எடுத்து சென்று, நகரில் வியாபாரம் செய்து வந்தார். மாலையில் வீடு திரும்பும் போது, நகர எல்லையில் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, அன்றைய கணக்கை சரி பார்ப்பார்.
அன்று, ஆலமரத்தில் வசித்த இரண்டு குரங்குகள் அவரை உற்றுப் பார்த்தன. மீதமிருந்த, வாழைப் பழங்களை அவற்றுக்கு உண்ண கொடுத்தார்.
இதனால், குரங்குகள் தினமும் வியாபாரியை எதிர்ப்பார்க்க ஆரம்பித்தன.
ஒருநாள் வாழைப்பழம் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. வெறும் கூடையுடன் திரும்பினார் வியாபாரி. குரங்குகள் ஏங்கி ஏமாந்ததை கண்டார். பின், தினமும், 10 பழங்களை எடுத்து வர ஆரம்பித்தார்.
இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடின.
வியாபாரியுடன் குரங்குகள் அன்னியோன்யமாகி விட்டன.
சில நாட்களாக, வாழைப்பழ வியாபாரி, அந்த இடத்திற்கு வரவில்லை; அவருக்காக காத்திருந்த குரங்குகள், 'எப்படியும் வியாபாரி வந்து விடுவார்' என்று நம்பின.
மாதங்கள் கடந்தன.
வியாபாரியை எதிர்பார்த்து காத்திருந்த குரங்குகள், கவலையோடு இடம் பெயர்ந்தன; மரத்துக்கு மரம் தாவி, கால் போன போக்கில் நடந்த போதும், வியாபாரி நினைவு வாட்டியது.
சில நாட்களுக்கு பின் -
எப்போதும் போல வியாபாரி வாழைப்பழம் விற்க நகருக்கு சென்றிருந்தார். சந்தையில் அபாரமாக கூட்டம் கூடியிருந்தது; நெரிசலில் சில திருடர்கள் சந்தைக்கு வந்த பெண்களின் நகைகளை திருடி விட்டனர்.
அதைப் பார்த்தவர்கள், திருடர்களை பிடிக்க விரட்டினர். பயத்தில் ஓடிய போது வியாபாரியின் கூடையில், நகைகளை போட்டு மறைந்து விட்டனர் திருடர்கள்.
துரத்தி பிடிக்க வந்தவர்கள், 'வியாபாரிக்கும், அந்த திருடர்களுக்கும் தொடர்பு இருக்கிறது; அதனால் தான், நகைகளை இந்த கூடையில் போட்டு சென்றுள்ளனர்...' என்று குற்றம் சாட்டி, அரண்மனை காவலரிடம் ஒப்படைத்தனர்.
வியாபாரியிடம் உண்மையை கேட்காமல், நகருக்கு வெளியில் சிறையில் அடைத்தார் மன்னர்.
குரங்குகள் இரண்டும் மரங்களில் தாவி அந்த பகுதிக்கு வந்தன. கைதியாய் அடைக்கப்பட்டிருந்த வியாபாரியை பார்த்தன.
இருந்தும் என்ன பயன்; குரங்குகளால் என்ன செய்ய முடியும். சிறைக்குள்ளிருந்த வியாபாரியை சுற்றி சுற்றி வந்து கண்ணீர் வடித்தன; இந்த நிகழ்வை பார்த்த சிறைக் காவலர்கள், அந்த குரங்குகளை விரட்டி அடித்தனர். அவ்விடத்தை விட்டு அவை அகல மறுத்தன.
கண்ணீர் வடிய சிறை கம்பிகளை பற்றி அரற்றின; இதை கண்ட காவலர்கள், செய்தியை மன்னரிடம் தெரிவித்தனர். மன்னர் வந்து ஆய்வு செய்தார்.
குரங்குகள் நெகிழும் காட்சியைக் கண்டதும், 'அந்த வியாபாரியை விடுதலை செய்யுங்கள்; ஐந்தறிவு படைத்த விலங்குகள் அவருக்காக கண்ணீர் வடிக்கின்றன என்றால், தவறு இழைத்திருக்க மாட்டார்; அவரை அரண்மனைக்கு அழைத்து சென்று, வெகுமதி கொடுத்து அனுப்புங்கள்...' என்றார் மன்னர்.
குரங்குகள் ஆனந்தத்தில் கூத்தாடின.
குழந்தைகளே... உயிரினங்களிடம் காட்டும் அன்பு, எந்த ரூபத்திலாவது வந்து துயர் துடைக்கும் என உணருங்கள்!
- ரா.பொன்னாண்டான்