அன்புள்ள ஆன்டி...
என் வயது, 15; அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்...
மின்சாரம், அலைபேசி, விமானம் இல்லாத காலத்தில், வாழ்ந்த மனிதர்கள் துரதிஷ்டசாலிகள், சபிக்கப்பட்டவர்கள் தானே... அவர்கள், எவ்வித விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் அனுபவிக்காது, ஆடு, மாடுகளாய் இருந்திருக்கின்றனர் என்கிறேன். உங்கள் கருத்து என்ன ஆன்டி...
இப்படிக்கு,
எஸ்.ராஜரத்னம்.
அன்பு செல்லத்துக்கு...
உலகில் முதல் மனிதன் தோன்றி, 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. அதிலிருந்து இன்று வரை உலகின் மக்கள் தொகை, 117 பில்லியன். அதாவது, 11 ஆயிரத்து 700 கோடி.
மின்சாரத்தின் அடிப்படையை, விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்ளின், கி.பி., 1700ல் கண்டுபிடித்தார். விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரகாம்பெல், மார்ச் 7, 1876ல் தொலைபேசியையும், ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரிசில், லுமியர் சகோதரர்கள், நவம்பர், 1895ல் சினிமாவையும், ரைட் சகோதரர்கள் டிசம்பர் 17, 1903ல் விமானத்தையும் கண்டுபிடித்தனர்.
பெரும்பான்மை விஞ்ஞான கண்டுபிடிப்புகள், இந்த, நுாறு ஆண்டுகளில் தான் நிகழ்ந்தன.
உன் எண்ணப்படி, 1922க்கு முன் பிறந்தவர்கள் துரதிஷ்டசாலி, பின் பிறந்தவர்கள் அதிஷ்டசாலி என கூற முடியுமா...
மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், தீப்பந்தங்களும், அகல் விளக்கும், சிம்னி லாந்தர் விளக்கும் வெளிச்சத்தை தந்து மனிதனுக்கு உதவின.
விமானம் கண்டுபிடிக்கும் முன், குதிரை, ஒட்டகம், கழுதை மற்றும் மிதிவண்டியில் பயணம் செய்தனர் மக்கள்.
திரைப்படம் கண்டுபிடிக்கும் முன், மேடை நாடகம், தெரு கூத்து, பொம்மலாட்டம், மோகினி ஆட்டம், கதக்களி, பெல்லி நடனம் மற்றும் பாலே நடனம் பார்த்து மகிழ்ந்திருந்தனர்.
மின்சாரம் கண்டுபிடிக்கும் முன், அதன் பயன்பாடு மக்களுக்கு எப்படி தெரியும்? மின்சாரத்துக்கு முந்தைய கண்டுபிடிப்புகளையும், பயன்களையும், பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் முழுமையாக அனுபவித்திருப்பர் மக்கள்.
இன்னும், 50 ஆண்டுக்கு பின், கீழ்க்கண்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வந்திருக்கும்...
* ஒரு மைக்ரோ நொடியில், சென்னையில் இருந்து, அமெரிக்காவுக்கு போக்குவரத்து சாதனங்கள் இன்றி பயணிக்கும் டெலிபோர்ட்டிங் முறை
* பல் சொத்தை வராமல் ஆயுளுக்கும் தடுக்கும் தடுப்பூசி
* ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வியாதிகளுக்கு ஒரே மருந்து
* மூன்று நேர உணவுக்கு ஈடாக ஒற்றை மாத்திரை
* மனிதரை போல், ஆசாபாசங்கள் உடைய ரோபோக்கள்.
இந்த கண்டுபிடிப்புகளை அனுபவிக்காத நாம், ஆடு, மாடுகளா... விஞ்ஞானத்துக்கு அப்பால், மனிதர்கள், மனிதநேயம், கலை ரசனை, மன்னிக்கும் மாண்பு, சுய திருப்தி, சாதிக்கும் வேட்கை, தன்னம்பிக்கை போன்றவற்றை கொண்டிருந்தால், தெய்வ நிலைக்கு உயரலாம்.
கேள்விகள் கேட்டு, தகுந்த பதில்கள் பெற்று, உன்னை உள்ளும், புறமும் உயர்த்திக் கொள்!
- அள்ளக்குறையா அன்புடன்,
பிளாரன்ஸ்!