எதற்கெடுத்தாலும் கோபப்படுவான் முருகன்; தலைகால் புரியாமல் வாய்க்கு வந்தபடி பேசி விடுவான். சிறிது நேரத்திற்கு பின், வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்பான்; நாளடைவில் பலருக்கும் அவனை இதனாலே பிடிக்காமல் போனது; அவனை தவிர்க்க ஆரம்பித்தனர்.
திருத்திக் கொள்ள தோன்றினாலும், எப்படி என்று தான் தெரியவில்லை.
ஒரு நாள் -
அவன் அப்பா, ஒரு வாளி நிறைய ஆணியும், ஒரு சுத்தியலையும் கொடுத்து, 'இனிமேல் கோபம் வரும் போது, கொல்லையில் நிற்கும் மரத்தில் ஆத்திரம் தீரும் வரை ஆணிகளை அறைந்து விடு...' என்றார்.
முதல் நாள், 50 ஆணிகளை மரத்தில் அறைந்து ஏற்றினான்; மறு நாள், 40 ஆணிகள்; இப்படியே நாட்கள் செல்ல, கோபமாக பேசுவதை கட்டுப்படுத்த கற்றான்.
கோபம் வந்தால், உடனே ஆணி அடிக்க போய்விடுவான்.
நாளடைவில் வாளியையும், சுத்தியலையும் எடுத்து போகும் முன் கோபம் மட்டுப்பட்டது. இதனால், மரத்தில் ஆணி அறைவதும் குறைந்தது. சில நாட்களில் ஆணி அடிக்க தேவையே இல்லாமல் போனது.
அப்பாவிடம், விபரத்தை கூறினான். மகிழ்ச்சி அடைந்த போதும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், ஆணி பிடுங்கும் கருவியை கொடுத்து, 'இதுவரை மரத்தில் அடித்துள்ள ஆணிகளை பிடுங்கு...' என்றார்.
எல்லா ஆணிகளையும் சிரமத்துடன் பிடுங்கினான். இத்தனை ஆணிகளா... என, ஆச்சரியமாக இருந்தது.
ஆணி அடித்திருந்ததால் மரத்தில் ஏற்பட்டு இருந்த வடுக்களை காட்டி, 'கோபத்தால் அறிவிழந்து பேசும், சுடு சொற்களும் இந்த ஆணியை போல தான். அவற்றை பேசியதற்கு மன்னிப்பு கேட்டாலும், ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே, அந்த சொற்கள் மறைவது மிகக் கடினம்...' என்று எடுத்து கூறினார் அப்பா.
கருத்தை நன்றாக உணர்ந்து, திருந்தினான் முருகன். ஊர் போற்றும் வகையில் வாழ்க்கையில் வெற்றி பெற்றான்.
குழந்தைகளே... தீயினால் சுட்ட புண் விரைவில் ஆறிவிடும்; ஆனால், நாவினால் சுட்ட புண் ஆறாது; மாறாக வடுவாய் உள்ளத்தில் பதிந்திருக்கும் என்பதை உணர்ந்து, எப்போதும் அன்பாக பேசுவோம்!
- எஸ். வைத்தியநாதன்