பிப்., 5 தைப்பூசம்
தைப்பூசத்துக்கும், சனி பகவானுக்கும் நிறைய தொடர்புண்டு. முருகனுக்கும், சிவனுக்கும் தானே பூசத்திருவிழா; சனி பகவான், எப்படி இதற்குள் நுழைந்தார் என்று தானே சிந்திக்கிறீர்கள்!
பூசம் நட்சத்திரத்தின் அதிபதி, சனி பகவான். இவர், சத்திய வேந்தர். இவரது, தாய் சாயாதேவி. தந்தை, சூரிய பகவான். சாயாதேவியை, சூரியனின் மனைவியான உஷா தேவி, தன் நிழலிலிருந்து உருவாக்கினாள். இதையறியாத சூரியன், சாயாதேவியுடன் வாழ்ந்து பெற்ற மகனே, சனி.
உஷாதேவியின் மகன், எமதர்மன். மாற்றாந்தாய் மகன் என்பதால், சனி, எவ்வளவு பொறுத்துப் போனாலும், எமதர்மன் வலுச்சண்டைக்கு வருவார். ஒருமுறை, இவர்களது சண்டையில், சனியின் காலில், அடித்து விட்டான், எமன். இதனால், அவரது கால் சற்று ஊனமாகி விட்டது.
இதன்பின், பல கஷ்டங்களை அனுபவித்த சனி, சிவனருளால் கிரகப்பதவி பெற்றார். உலகில் சத்தியத்தை நிலைக்கச் செய்ய, ஒருவருக்கு என்ன சோதனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற வரத்துடன், தன் பணியைச் செய்து வந்தார், சனி.
இருப்பினும், ஊனம், அவரது பணிக்கு இடையூறாக இருந்தது. விரைவாக எந்த இடத்துக்கும் செல்ல முடியவில்லை. இதனால், தன் ஊனம் குணமாக, பல சிவத்தலங்களுக்கும் சென்று வணங்கினார்.
ஒரு இடத்துக்கு வந்த போது, விளாமர வேர் தடுக்கி, பெரிய பள்ளத்தில் விழுந்தார். அவரால் எழ முடியவில்லை. அப்போது, ஒரு தீர்த்தம், அந்த இடத்திலிருந்து வேகமாக மேல் நோக்கி ஊற்றெடுத்து, சனீஸ்வரரை அப்படியே துாக்கி வெளியே கொண்டு வந்து போட்டது.
இந்த சம்பவம், பூசம் நட்சத்திரம், திரிதியை கொண்ட நாளில் நடந்தது. எனவே, அந்த நட்சத்திரத்தையும், திதியையும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்துப் போனது.
அப்போது, சிவன் அவர் முன் தோன்றி, 'உன் வேகம் இனி அதிகரிக்கும். அத்துடன் பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதையாகவும் உன்னை நியமிக்கிறேன்...' என்றார்.
இந்த சம்பவம் நடந்த இடம், தஞ்சாவூர் மாவட்டம் விளங்குளம். பட்டுக்கோட்டை- - ராமேஸ்வரம் சாலையில்,30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து, 2 கி.மீ., சென்றால், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவிலை அடையலாம்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்தக் கோவிலுக்கு சென்று வணங்கி வருவது, நன்மை பயக்கும். சனிக்கிழமை மற்றும் பூசம் நட்சத்திர நாட்களில் காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும், மற்ற நாட்களில் ஒருவேளை மட்டுமே இந்தக் கோவில் திறக்கும். தொடர்பு எண்: 93445 58500.
சத்தியத்தைக் காப்பவரின் நட்சத்திரமாக, பூசம் விளங்குவது போல், சத்தியத்தை மீறிய சூரனை அழிக்க, பார்வதி தேவி, முருகனுக்கு வேல் கொடுக்க, இந்த நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்தது மிகவும் பொருத்தமாக உள்ளது.
எனவே, தைப்பூசத்தை சத்தியத் திருவிழா என்று அழைப்பதும் பொருத்தமாக இருக்கும்.
தி. செல்லப்பா