வேண்டுதலை இப்படியும் நிறைவேற்றலாம்!
சமீபத்தில், முருகன் கோவிலுக்கு சென்றிருந்தேன். ஆட்டோவில் கொண்டு வந்த தேங்காய் மூட்டைகளை, கோவில் படிக்கட்டு அருகே இறக்கி வைத்தார், நடுத்தர வயதுடைய பக்தர். அதன்பின், உறுதியான துணிப்பையில், ஒவ்வொரு தேங்காயாக போட்டு, படிக்கட்டில் உடைத்தார். இது வித்தியாசமாக இருக்க, அவரிடமே வினவினேன்.
'நிலம் ஒன்றை இன்று, 'ரிஜிஸ்டர்' செய்தேன். அந்த வேலை நல்லபடியா முடிஞ்சதுன்னா, 108 தேங்காய் உடைக்கிறதா வேண்டியிருந்தேன். அந்த வேண்டுதலைத் தான் இப்ப நிறைவேற்றிக்கிட்டு இருக்கேன்.
'அப்படியே படியில தேங்காய்களை உடைச்சா, மற்ற பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும். மேலும், அவங்க மேல தேங்காய் ஓடு தெறிச்சு ஆபத்தும் ஏற்படும். அதுமட்டுமில்லாம, சாப்பிடுற தேங்காயை, பல பேர் மிதித்து, பயன் இல்லாமல் போய் விடும்.
'அதனால தான், துணிப் பையைக் கொண்டு வந்து, அதுல போட்டு உடைக்கிறேன். உடைச்ச எல்லா தேங்காயையும் கூடையில சேகரிச்சு, கோவிலுக்கு வர்ற பக்தர்களுக்கு, பிரசாதமா தரப் போறேன். இதன்மூலமா, வேண்டுதலை நிறைவேத்தின திருப்தியோட, ஒரு நல்ல காரியத்தை செய்த மன நிறைவும் கிடைச்சுடும்...' என்றார். அது, நல்ல யோசனையாக பட்டது எனக்கு. தேங்காய் உடைக்கும் வேண்டுதலை, இப்படியும் நிறைவேற்றலாமே!
- கே.கல்யாணி, விக்கிரவாண்டி.
முதியோர் கொடுத்த சவுக்கடி!
சமீபத்தில், புதிதாக வெளியான ஒரு நடிகரின் திரைப்படம் வெற்றியடைய, கோவிலில் வழிபாடு நடத்தி, முதியோர் சிலரை அழைத்து, புடவை, வேட்டி, ரொட்டி, பிஸ்கெட், பழங்கள் வழங்க ஏற்பாடு செய்தனர், ரசிகர்களாக இருக்கும் எங்கள் பகுதி இளைஞர்கள்.
'எங்களுக்கு தர்றதுக்காக வாங்கிய பொருட்கள், உங்க உழைப்புல சம்பாதித்த பணமா... இல்ல, அப்பா, அம்மா உழைப்புல கிடைச்ச பணமான்னு சொல்லுங்க...' என்றார், முதியவர்களில் ஒருவர். ஆரம்ப கேள்வியே சவுக்கடியாக விழ, 'வேலைக்கெல்லாம் இன்னும் போகலை; தேடிக்கிட்டிருக்கோம். இது, எங்க வீட்லேர்ந்து கொண்டு வந்த பணத்துல வாங்கினது தான்...' என்றனர்.
'எங்களுக்கு தர்ற மாதிரியே, உங்க வீட்ல இருக்கிற, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிக்கு தந்தீங்களா?' என்று, அடுத்த கேள்வியை கேட்டார், ஒரு பாட்டி. 'இல்ல பாட்டி... எப்பவுமே, மத்தவங்களுக்கு தான் இப்படி உதவி செய்வோம். வீட்ல இருக்கிறவங்களுக்கு தர்ற பழக்கமில்ல...' என்றனர், தலை குனிந்தபடி.
'அபிமான நடிகருக்காக, இப்படியெல்லாம் செலவு பண்றது உங்க தனிப்பட்ட விருப்பம். ஆனா, அதை உங்க உழைப்புல கிடைச்ச பணத்துல பண்ணுங்க. 'அதேபோல, அவங்கவங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை முதல்ல செய்யாம, மத்தவங்களுக்கு உதவி செய்யிறதுல, ஒரு அர்த்தமுமே இல்ல...' என்று, 'குட்டு' வைத்தனர், முதியவர்கள்.
இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக, தவறான செய்கைக்கு துணை போகாமல், பொறுப்போடு தட்டிக் கேட்ட அந்த முதியவர்களை, அனைவருமே பாராட்டினோம்.
— ஆர்.ஜெயசங்கரன், வானுார், விழுப்புரம்.
பிள்ளை இல்லை என ஏங்குபவரா?
எனக்கு தெரிந்த ஒரு தம்பதிக்கு, 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அவர் சொந்த தொழில் செய்து, வசதியுடன் இருப்பவர். ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து, படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைத்தார். அந்த பெண், பெற்றோரையும் நன்கு கவனித்து, மாமியாரையும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்.
'கொரோனா'வில் அப்பா இறந்து விட, அம்மாவும், தொழிலும் அனாதையாக நின்றது. தொழிலில் துணிச்சலாக இறங்கி, இரண்டு ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறார், அப்பெண். ஒன்றும் தெரியாத அம்மாவை, அப்பா வைத்திருந்தது போலவே, ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறார். சொந்த பிள்ளை கூட தயங்கும் நிலையில், தத்தெடுத்த பிள்ளை செய்வதை எண்ணி, சொந்தக்காரர்களே வியக்கின்றனர்.
பிள்ளை இல்லை என ஏங்குவோர், ஆதரவற்ற பிள்ளைகளைகளுக்கு வாழ்வு கொடுங்கள். அவர்கள் தங்கள் நல் வாழ்க்கைக்கு நன்றிக்கடனாய் உங்களுக்கு ஆதரவு தருவர்.
எம். கவிதா, மதுரை.