பரதநாட்டிய கலைஞர், குணச்சித்திர நடிகை, குடும்பத் தலைவி மற்றும் நடன ஆசிரியை என, நான்கு பகுதிகளை கொண்டது, நடிகை பத்மினியின் வாழ்க்கை.
கதகளி, பரதம், மணிப்புரி, குச்சிப்புடி மற்றும் மோகினி ஆட்டம் என, பலவற்றிலும் வல்லவராக திகழ்ந்தார், பத்மினி. பல சபா மேடைகளில் ஆடிய, லலிதா - பத்மினி சகோதரிகளின் நடனம், பெரும் வரவேற்பை பெற்றது.
இருவரும் திரையில் தோன்றி நடனம் ஆடினால் வசூல் குவியும்; படமும் சக்கை போடு போடும் என, கணக்கு போட்டனர், சினிமா தயாரிப்பாளர்கள். இப்படித்தான், கேரள மாநிலம், திருவாங்கூர் சகோதரிகளான, லலிதா - பத்மினி - ராகினி ஆகியோர், சினிமாவுக்குள் வந்தனர்.
நாட்டியத்திலும், நடிப்பிலும் நவரச நாயகியாக திகழ்ந்தார், பத்மினி. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என, ஐந்து மொழி படங்களில், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ஆர்., நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர், சத்யன், ராஜ்கபூர், சுனில் தத் மற்றும் ராஜ்குமார் என்று, பல முன்னணி நட்சத்திரங்களுடன், 250 படங்களில் நடித்தார்.
ஒரு சிங்களப் படத்தில் நடனமாடியும், ஒரு ரஷ்ய மொழி படத்தில் நடித்தும் இருக்கிறார். சோவியத் ஒன்றிய அரசு, பத்மினிக்கு, அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
பத்மினியின் அம்மா, சரஸ்வதி, திருவனந்தபுரம்; அப்பா, தங்கப்பன் பிள்ளை திருவனந்தபுரம், நெய்யாற்றங்கரையைச் சேர்ந்தவர். அந்த ஊரில் கார் வாங்கிய முதல் நபர், தங்கப்பன் தான்.
சரஸ்வதி அம்மாளுக்கு, 13 வயதிலேயே திருமணம் நடந்து விட்டது. அவரது, 14வது வயதில், லலிதா பிறந்தார். அடுத்த ஆண்டு, பத்மினி. அடுத்தடுத்து, சந்திரகுமார் மற்றும் ராகினி பிறந்தனர்.
குழந்தைகளைக் கவனித்து கொள்ள சிரமமாக இருந்ததால், 15 மாதக் குழந்தையான பத்மினியை, பேப்பர் மில், சுகர் மில் உரிமையாளரான, தன் அக்காள் கார்த்தியாயினியிடம் கொடுத்து விட்டார், சரஸ்வதி. பெண் குழந்தை இல்லாத கார்த்தியாயினி, பத்மினியை, மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். பெரியம்மா கார்த்தியாயினியை, அம்மா என்றே அழைத்தார், பத்மினி.
பெரியம்மாவுக்கு, கலை உணர்வு அதிகம். வாய்ப்பாட்டு, நடனம், வயலின் எல்லாம் ரொம்ப பிடிக்கும். அவரும் மிக அருமையாக வயலின் வாசிப்பார்.
அந்த நாளில், திருவனந்தபுரத்துக்கு வரும், பெரிய இசை, நடன கலைஞர்களை வரவேற்று, தன்னுடைய மலாயா காட்டேஜுக்கு அழைத்து கவுரவிப்பார், பெரியம்மா. அக்காலத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர் சுப்ரமணியம், திருவனந்தபுரம் வந்தபோது, அவரை வீட்டுக்கு அழைத்து, உபசரித்தார், கார்த்தியாயினி அம்மாள்.
சிறுமி பத்மினி மிக ஒல்லியான தோற்றத்தில் இருப்பதை பார்த்து, 'இவள் நோஞ்சானை போல இருக்கிறாள்; நடனம் கற்றுக்கொண்டால் உடல் வலுப்படும்...' என்றார், இயக்குனர் சுப்ரமணியம்.
இதையடுத்து, இயல்பிலேயே கலா ரசிகையான கார்த்தியாயினி அம்மாள், பத்மினிக்கு நடனப் பயிற்சி கொடுக்க முடிவு செய்தார்.
திருவாங்கூர் அரண்மனையில் நடன ஆசிரியராக இருந்த, கோபிநாத் மாஸ்டரிடம் நடனம் கற்றுக் கொள்ள, பத்மினியை அனுப்பினார்.
இக்கால கட்டத்தில், பத்மினியின் குடும்பத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்து விட்டது. பத்மினியின் அப்பா தங்கப்பனும், அம்மா சரஸ்வதியும் கருத்து வேறுபாடு காரணமாக, திசைக்கு ஒருவராக பிரிந்து விட்டனர்.
அப்போது, சரஸ்வதிக்கு வயது 22. சின்னஞ்சிறு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பெரும் பொறுப்பு கூடி விட்டது. ஆனாலும், கலங்கி விடவில்லை, சரஸ்வதி. வைராக்கியத்துடன் அவர்களுக்காக வாழ முடிவு செய்தார்.
அதே நேரத்தில், அவருடைய அக்கா கார்த்தியாயினி, தங்கை குடும்பத்தையும் தன்னுடன் அழைத்து, மலாயா காட்டேஜில் தங்க வைத்தார்.
பெரியம்மா வீட்டுக்கே அக்கா, தம்பி, தங்கை அனைவரும் வந்து விட்டதில், பத்மினிக்கு மிகுந்த சந்தோஷம்.
லலிதா, பத்மினிக்கு, பள்ளிப் படிப்போடு பரதநாட்டிய வகுப்பும், கதகளி நடன பயிற்சியும் அங்கு துவங்கியது.
தினமும், இரவு துாங்குவதற்கு முன், அன்று கற்றதை பெரியம்மா முன்பு ஆடிக் காண்பிக்க வேண்டும். இவர்களும் அசதியை மறந்து, ஆடி காட்டுவர். கை தட்டி, ரசித்து, பாராட்டி பரிசு கொடுத்து உற்சாகப் படுத்துவார், பெரியம்மா. இந்த கடுமையான பயிற்சிகளிலிருந்து, ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறை கிடைக்கும்.
அந்த விடுமுறை நாட்களில், சென்னையில், கோகலே ஹால், ரசிக ரஞ்சனி சபா போன்ற சபாக்களில் நிகழ்ச்சிகள் நடத்துவார், மாஸ்டர், கோபிநாத். அந்தக் குழுவில், பத்மினியும் லலிதாவும் கலந்து கொண்டு, ராதா - கிருஷ்ணன் வேடத்தில் ஆடுவது வழக்கம்.
மீதமுள்ள விடுமுறையை கழிக்க, மும்பையில், கடற்படை கமாண்டராக இருந்த மாமா, எஸ்.பி.என்.நாயர் வீட்டுக்கு சென்று விடுவர்.
அப்படி ஒருமுறை மும்பைக்கு சென்றபோது...
— தொடரும்.
பத்மினி பள்ளிப் படிப்பில் கெட்டிக்கார பெண் தான். சில நேரம் வீட்டுப்பாடம் எழுதாமல் போய், அடி வாங்குவதும் உண்டு.அந்த நேரத்தில், பிரம்பால் காலில் அடிப்பார், டீச்சர். காலில் அடிப்படக் கூடாது என்பதற்காக, வீட்டுப்பாடம் எழுதாத நாட்களில், மூன்று பாவாடைகளை அணிந்து செல்வாராம், பத்மினி.
சபீதா ஜோசப்