பா - கே
'பாடி லேங்க்வேஜ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்... கண்களின் மொழி பற்றி தெரியுமா?' என்று கேட்டார், உதவி ஆசிரியை ஒருவர்.
'அட போம்மா... உங்க கண்களுக்கு எத்தனை மொழி இருந்துவிடப் போகிறது! ஆண்களை முறைத்துப் பார்த்து பயமுறுத்துவது மட்டும்தானே உங்களுக்குத் தெரியும்...' என்றார், லென்ஸ் மாமா கிண்டலாக.
'இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. எப்பப் பாரு ஏடாகூடமா பதில் சொல்லிட்டு...' என்றவர், என் பக்கம் திரும்பி, 'மணி, இதைப் படித்துப் பாரேன்...' என, ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார், உ.ஆ.,
அதில்:
'கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை' என்று சொல்வது, அந்தக் காலம். இப்போது, அதையும் கண்டுபிடித்து வரையறுத்து விட்டது, அறிவியல். இதை, கண்களின் மொழி என்று சொல்கின்றனர். அந்தக் கண்களின் மொழியை புரிந்து கொள்ள வேண்டுமா?
* கண்கள் வலப்புறமாக பார்த்தால், பொய் சொல்கிறது
* இடப்புறமாக பார்த்தால், உண்மை பேசுகிறது
* மேலே பார்த்தால், ஆளுமை செய்கிறது
* கீழே பார்த்தால், அடி பணிகிறது
* விரிந்தால், ஆச்சரியப்படுகிறது; ஆசைப்படுகிறது
* கூர்ந்து பார்த்தால், விரும்புகிறது
* வேறு எங்கோ பார்த்தால், தவிக்கிறது
* வலமும், இடமும் மாறி மாறி ஓடினால், பதற்றத்தில் உள்ளது
* கண்கள் படபடத்தால், வெட்கப்படுகிறது
* மூக்கைப் பார்த்தால், கோபப்படுகிறது
* எதை உற்றுப் பார்க்கிறதோ, அதை விரும்புகிறது
* கண்கள், கழுத்துக்குக் கீழே பார்த்தால், காமம்
* கண்ணுக்குள் பார்த்தால், காதல்
* இடமாக கீழே பார்த்தால், தனக்குள் பேசிக் கொள்கிறது
* இடமாக மேலே பார்த்தால், பழைய நினைவுகளை தேடுகிறது
* வலமாக கீழே பார்த்தால், விடை தெரியாமல் யோசிக்கிறது
* வலமாக மேலே பார்த்தால், பொய் சொல்ல யோசிக்கிறது
* ஓரப்பார்வையில் அவ்வப்போது பார்த்தால், விரும்புகிறது
* கண்கள் மூடித் திறந்தால், உள்ளுக்குள் தேடுகிறது
* கண்களை கைகளால் கசக்கினால், தஞ்சம் கேட்கிறது
* கண்கள் மூடித் திறந்தால், வெறுக்கிறது
* கண் புருவங்கள் உயர்ந்தால், பேச விரும்புகிறது
* கண்களும், புருவங்களும் சுருங்கியிருந்தால், கோபம்.
ஆக, மனிதனின் முகம் பார்க்கும் கண்ணாடி, கண்கள். அதன் பிரதிபலிப்பையும், மொழியையும் உணர முடியும்.
- இப்படி பதிவு செய்யப்பட்டிருந்தது, அந்த புத்தகத்தில். இதை இனி பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று எண்ணியபடி, புத்தகத்தை உதவி ஆசிரியையிடம் திருப்பிக் கொடுத்தேன்.
ப
புத்தக கண்காட்சியில் வாங்கியது என்று, சுய முன்னேற்ற புத்தகத்தை தந்தார், நடுத்தெரு நாராயணன். அதில் ஒரு பகுதி:
'வாழ்க்கையில வெற்றி பெற உழைப்பு மட்டும் இருந்தா போதாது. நேர்மையும் வேண்டும்...' என்கிறார், பொருளாதார நிபுணரான, பால் ஹாப்மேன்.
இரண்டாம் உலகப் போர் முடிஞ்ச சமயம். அப்போது இவர், அமெரிக்காவின் நிதி ஆலோசகரா இருந்தார்.
சின்ன வயசுல, அவரு படிப்பு முடிஞ்சவுடனே வேலை தேடிக்கிட்டிருந்தார். ஒரு கால்நடை வைத்தியர்கிட்ட போய் வேலை கேட்டார்.
இவர் அங்கே போன சமயத்துல, அந்த டாக்டர், தன்னுடைய பழைய கார் ஒன்றை விக்கிறதுக்காக, ஒருவரிடம் பேரம் பேசிக்கிட்டிருந்தார்.
வாங்க வந்தவர், கால்நடை வைத்தியரிடம் அந்த காரைப் பற்றி விபரமெல்லாம் கேட்டுக்கிட்டிருந்தார்.
கார் நல்ல நிலைமையில இருக்குமாங்கிற சந்தேகம் அவருக்கு.
எல்லா விபரமும் கேட்டுட்டு, கடைசியா, 'டாக்டர், இந்தக் காரை, நீங்களே என் ஊருக்கு ஓட்டிக்கிட்டு வரணும். கார் எந்த ரிப்பேரும் ஆகாமல் என் ஊருக்கு வந்து சேர்ந்துட்டுதுன்னா, அங்கேயே பணம் கொடுத்து, காரை நான் வாங்கிக்கிறேன்...' என்றார், வந்தவர்.
'நம் கார் அவ்வளவு துாரம் ரிப்பேர் இல்லாம போய்ச் சேருமா...' என, சந்தேகம் டாக்டருக்கு.
தன்கிட்ட வேலை கேட்டு வந்திருந்த, பால் ஹாப்மேனை அழைத்து, 'இதோ பார்... நீ, இந்த காரை, அவருடைய ஊர் வரைக்கும் நல்லபடியா ஓட்டிக்கிட்டு போய் சேர்த்துட்டின்னா, உனக்கு நான் வேலை கொடுத்துடறேன். அதுமட்டுமில்ல, கார் விற்ற தொகையில கமிஷனும் தர்றேன். சம்மதமா...'ன்னு கேட்டார்.
'சரி...'ன்னு சொல்லி சம்மதிச்சுட்டார், ஹாப்மேன்.
இருவரும் புறப்பட்டனர்.
ஹாப்மேன் ரொம்ப சிரமப்பட்டு, வழியில எங்கேயும் நிறுத்தாமல் காரை ஓட்டிக்கிட்டு போய்ச் சேர்ந்துட்டார்.
இவரை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு உள்ளே போனார், கார் வாங்கியவர்.
'இப்ப சொல்லு, இந்த கார் நிலைமை எப்படி இருக்கு? உன் மனசாட்சிப்படி பதில் சொல்லு, நல்ல நிலைமையில இருக்கா...' என்றார்.
இவரு உடனே, கார் நல்ல நிலைமையில இருக்குன்னு சொல்றதுக்காக வாயை திறந்தார். அதுக்குள்ள எதிர் சுவர்ல இயேசுநாதர் படம் மாட்டியிருந்தது. அதுல, 'நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் இயேசு கவனித்துக் கொண்டிருக்கிறார்'ன்னு எழுதியிருந்தது.
அதைப் பார்த்ததும், உடனே, 'கார் சரியில்லை'ங்கிற உண்மையை சொல்லிட்டார், ஹாப்மேன். இப்படி சொன்னதும், இவரை ரொம்பவும் ஆச்சரியமாக பார்த்தார்.
ஹாப்மேனின் நேர்மை, கார் வாங்கியவரை சிந்திக்க வைத்தது.
'உன் நேர்மையை பாராட்டுகிறேன். உனக்கு கமிஷன் கிடைக்கணும்ங்கிறதுக்காக நான் இந்தக் காரை வாங்கிக்கிறேன்...' என்றார்.
திகைச்சு போய் நின்னார், ஹாப்மேன்.
'நீ, காரை ஓட்டிக்கிட்டு வரும்போதே, உன் திறமையை பார்த்தேன். உனக்கு விருப்பம் இருந்தால், நீ என்கிட்ட வேலைக்கு சேரலாம்...' என்றார், கார் வாங்கியவர்.
பால் ஹாப்மேன் அவருகிட்ட வேலைக்கு சேர்ந்து, படிப்படியா முன்னேறி, அமெரிக்க நிதி ஆலோசகர்ங்கிற பதவிக்கு வந்த பிறகும், இந்த பழைய சம்பவத்தை, அவர் மறக்காமல் அடிக்கடி சொல்றதுண்டு.
இதுலேர்ந்து என்ன தெரியுது...
வாழ்க்கையில முன்னுக்கு வரணும்ன்னா, உழைப்பு மட்டும் போதாது, நேர்மையும் வேணும்ங்கிறது புரிகிறது தானே!