என். பரமசிவம், விருதுநகர்: தான் ஒரு கிறிஸ்துவன் என்கிறாரே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்?
மதம் எதுவாக இருந்தால் என்ன? மனம் பரந்ததாக இருக்க வேண்டும்! குணம் சிறந்ததாக இருக்க வேண்டும்!
* எஸ். மாரிமுத்து, சென்னை: ஈரோடு இடைத் தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிடும் என, அக்கட்சியின் பிரேமலதா கூறியது பற்றி...
'டெபாசிட்' வாங்கக் கூடாது என, முடிவு செய்து விட்டார். அவரது ஆசைப்படியே நடக்கட்டும்!
வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்துார், செங்கல்பட்டு: சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில், 16 கோடி ரூபாய்க்கு, புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதே... புத்தக வாசிப்போர் இன்னமும் உள்ளனர் என்பதை தானே இது காட்டுகிறதே...
உண்மைதான்... நம், 'வாரமலர்' இதழின் விற்பனையும், வாரா வாரம் அதிகரித்து வருகிறதே!
* கு. கணேசன், சென்னை: வரும், 2026ல், தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவதாக கூறும், பா.ம.க., ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட பயப்படுவது ஏன்?
அங்கே அவர்களுக்கு ஓட்டு கிடைக்காது என்பதால் தான்... அங்கே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், 2026லிலும் இதுதான் நடக்கும் என்பதால் பயப்படுகின்றனர்!
தி. சங்கர், சென்னை: 'எனக்கு ஒரே கனவு தான் உள்ளது. எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான்...' என்கிறாரே, நிதிஷ்குமார். கனவு நிறைவேறுமா?
அவர் கனவு, கனவாகத்தான் இருக்குமே தவிர, நடக்க வாய்ப்பே இல்லை!
* முருகு. செல்வகுமார், சென்னை: பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ், இருவரும் அடுத்த பிரதமர் கனவில் இருக்கிறார்களே?
ஒரு தேர்தலிலும் முடியாது. அவர்கள் மாநிலத்தையே காப்பாற்றிக் கொள்ளட்டும்!
ஆ. சங்கர், நெல்லை: பொறுமை எப்போது வேண்டும்?
பொறுமை, தோல்வி வந்தால் வேண்டும். வெற்றி வந்தால், பணிவு வேண்டும். எதிர்ப்பு வந்தாலோ, துணிவு வேண்டும்!
அ. ஆதிமூலம், மதுரை: தோல்வி என்பது என்ன?
தோல்வியை தோல்வியாக நினைக்காதீர்கள்... தோல்வி அடைந்த பின்னும், வெற்றிக்காக முயற்சிக்காமல் இருப்பது தான், நிஜமான தோல்வி!
என். விஜய், விருதுநகர்: எனக்கு திறமை இல்லை என்று நினைக்கிறேனே...
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. திறமை இல்லாதவர்கள் என்று யாருமே இல்லை. தம் திறமைகள் பற்றி அறிந்து கொள்ளாதவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர்!