ஒரு நள்ளிரவுத் தீர்ப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2023
08:00

நேஷனல் ஹைவேசின் இடுப்புப்பகுதி, சட்டென்று ஓர் அசாதாரண வளைவுக்கு உட்பட்டு, பக்கவாட்டில் திரும்பி, ஸ்டேட் ஹைவேசாக மாறி, அமாவாசையின் இரண்டாவது நாள் இருட்டில், சாயம் போன ஒரு கருப்பு ரிப்பன் மாதிரி தெரிந்தது.

நேரம் அதிகாலை, 1:45 மணி.

'க்க்ரக்க்... க்க்ரக்க்...' என்ற சத்தத்தோடு மூன்று சக்கர சைக்கிளை சிரமப்பட்டு ஓட்டி வந்த மாணிக்கம், சாலையின் மறைவில், ஓரமாய் நிறுத்தி, சுற்றும் முற்றும் பார்த்தான்.

அந்த பிராந்தியத்தின் எல்லா திசைகளிலும் நிசப்தம் உறைந்து போயிருந்தது. 100 மீட்டர் தள்ளி, லேசான வெளிச்சத்தில் தெரிந்த, பிரதான ஹைவேஸ் சாலையில் மட்டும் சரக்கு லாரிகளின் வேகமான சீறல்கள், ஒரு சில விநாடிகளுக்கு காதில் விழுந்து தேய்ந்து, பிறகு காணாமல் போயிற்று.

தன் மூன்று சக்கர சைக்கிளில் இருந்த சதுரமான பலகையில், ஒரு பழைய துணியைப் போட்டு மறைத்து வைத்திருந்த, 10 கிலோ எடையுள்ள கருங்கல்லை சிரமப்பட்டு துாக்கினான். மார்போடு அணைத்து, அங்குலம் அங்குலமாய் நடை போட்டு, சாலையின் நடுப்பகுதிக்கு வந்து, வெளிறிப் போயிருந்த, 'டிவைடர்' மஞ்சள் பெயின்ட் கோடு அருகே கருங்கல்லை வைத்தான்.

மூச்சிரைத்தப்படி சுற்றும் முற்றும் பார்த்து, துண்டை எடுத்து தலையில் கட்டிக் கொண்டவன், பாலத்தின் மறைவுக்கு வந்தான். சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த சிமென்ட் பில்லருக்குப் பக்கத்திலிருந்த திட்டில், சாய்ந்து உட்கார்ந்தான்.

'ஒரு பீடியைப் பற்ற வைக்கலாமா...' என்று யோசித்த விநாடி, அவன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் அழைத்தது.

எடுத்து, அழைப்பது யாரென்று பார்க்க, மறுமுனையில், அவன் நண்பன் பத்ரி. மொபைல் போனை காதுக்குக் கொடுத்த மாணிக்கம், குரலைத் தாழ்த்தினான்.

''என்ன பத்ரி?''

''ஸ்பாட்டுக்கு போயிட்டியா?''

''அங்கு தான் இருக்கேன். ரோட்டுக்கு நடுவுல கல்லை வெச்சுட்டேன். பட்சி எதுவும் மாட்டலை. காத்திட்டிருக்கேன்.''

''ஜாக்கிரதை, 'போலீஸ் பேட்ரோலிங்' வர்ற நேரம், மாட்டிக்கப் போற.''

''போலீஸ் வராத இடமா பார்த்து தான் கல்லைப் போட்டிருக்கேன். நாளைக்கு முகூர்த்த நாள், ஏதாவது ஒரு பணக்கார பட்சியாவே மாட்டும்ன்னு நினைக்கிறேன்.''

''ஒரு விஷயத்தை மனசுல வெச்சுக்க.''

''என்ன?''

''வர்ற, 'பார்ட்டி' டூ வீலர்ல அல்லது போர் வீலர்ல வந்தாலும் சரி, கல்லைப் பார்த்துட்டு அவங்க கீழே இறங்கற வரைக்கும் பொறுமையா காத்திரு. அதுக்கப்புறமா மயக்க மருந்து, 'ஸ்பிரேயர்' கொண்டு, உன் ஆட்டத்தை ஆரம்பிச்சுடு.''

''பட்சி மாட்டி, வேலை முடிஞ்சதும், நானே உனக்கு போன் பண்றேன். நீ, வழக்கமான இடத்துக்கு, பைக்கோடு வந்துடு.''

''சரி, கவனமா வேலையை முடி.''

மொபைல் போன் பேச்சை முடித்து, ஒரு பீடியைப் பற்ற வைத்து, புகை விட்டபடி, பில்லர் திட்டில் சாய்ந்து படுத்தான். சற்று துாரத்தில் சாலையின் நடுவில் மங்கலான வெளிச்சத்தில் தெரிந்த அந்தக் கல்லின் மேல் பார்வையை நிலை நிறுத்தினான், மாணிக்கம்.

ஹோண்டா சிட்டி கார் ஒன்று, 'ஹைவேஸ்' சாலையில், காற்றைக் கிழித்தபடி பாய்ந்துக் கொண்டிருக்க, மிரட்சி படர்ந்த விழிகளோடு, எச்சில் கூட்டி விழுங்கியபடி, டிரைவிங் சீட்டில் இருந்த மனைவி மஹிமாவைப் பார்த்தான், ராகவ்.

''மஹி!''

''ம்!''

''இது காரா, இல்ல ராக்கெட்டா... இந்த விரட்டு விரட்டறே. 'ஸ்பீடா மீட்டரை' பாரு, 100ஐ தாண்டுது.''

''நுாறு தானே?''

''இவ்வளவு வேகம் வேண்டாம், மஹி... கொஞ்சம் மெதுவாப் போ.''

சிரித்தபடி, ''என்னது, மெதுவாப் போறதா... ஏர்போர்ட்டுக்கு இன்னும் அரைமணி நேரத்துல போய் சேரணும். எப்படியும் அடுத்த, 20 நிமிஷத்துக்குள்ள விமானம் வந்துடும்.

''என் அம்மாவும், அப்பாவும் விமானத்தை விட்டு இறங்கி, 'பேக்கேஜை' எடுத்து வர்றதுக்குள்ள, நாம ஏர்போர்ட் போய் சேர்ந்தாகணும். கண்ணுக்கு எட்டின துாரம் வரைக்கும் ரோடு, 'டிராபிக்' இல்லாம, பாலைவனம் மாதிரி, 'வெறிச்'சோன்னு இருக்கு. 100 கி.மீ., வேகத்துல போனா என்ன?'' என்றாள், மஹிமா.

''வேண்டாம், 100லிருந்து 80க்கு வா. கொஞ்சம், 'லேட்'டா போனா ஒண்ணும் ஆயிடாது. நாம ஏர்போர்ட்டுக்கு பத்திரமா போய்ச் சேர்றது தான் முக்கியம், மஹி.''

''நீங்க இப்படி பயப்படுவீங்கன்னு தெரிஞ்சதுனாலத்தான் காரை நானே ஓட்டறேன்னு சொன்னேன். உங்களுக்கு பயமாயிருந்தா கொஞ்ச நேரத்துக்கு கண்ணை மூடிக்குங்க.''

''சொன்னா கேளு, மஹி.''

''நோ நோ... ஏர்போர்ட் போய் சேரும் வரைக்கும், 'ஸ்பீடா மீட்டரோட' முள், 100க்கு கீழே வராது.''

''ரோட்ல எவனாவது குறுக்கே வந்துடப் போறான். அந்தச் சமயத்துல, என்னதான், 'பிரேக் பெடலை' மிதிச்சாலும், காரை, 'கன்ட்ரோல்' பண்ண முடியாது.''

''தொண தொணன்னு பேசாம வாங்க. எதிர்ல ரோட்டைப் பாருங்க... எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு.''

மஹிமா சொல்லிக் கொண்டே ஆக்சிலேட்டரின் மேல் காலின் பெரு விரலை வைத்து அழுத்த, காரின் வேகம் அதிகரித்து, காற்றை இரண்டாய் கிழித்தது. அந்த நிசப்தமான ஹைவேஸ் ரோட்டில் ஐந்து நிமிஷம் வேகம் குறையாமல் சீறிய கார், இரண்டு வளைவுகளில் திரும்பி, சர்வீஸ் ரோட்டில் நுழைந்து, அடுத்த சில விநாடிகளில் சற்றே வேகம் குறைந்தது.

ஆச்சர்யப்பட்டான், ராகவ்.

''என்ன மஹி... காரோட வேகம் குறையுது?''

அவள் குரல் நடுங்கியது.

''எ... என்னங்க?''

''சொல்லு...''

''ரோட்டுக்கு நடுவுல ஏதோ தெரியுது.''

காரின் முன்புற கண்ணாடி வழியே குனிந்து பார்த்துவிட்டு, ''ஆமா, ஏதோ கல்லு மாதிரி தெரியுது,'' என்றான், ராகவ்.

காரின் வேகத்தைக் குறைத்துக் கொண்டே, ''கல்லே தான்... இவ்வளவு பெரிய கல்லை எதுக்காக ரோட்டுக்கு நடுவுல போட்டு வெச்சிருக்காங்கன்னு தெரியலையே... உங்க பார்வைக்கு, 'வார்னிங் சைன் போர்டு' ஏதாவது தெரியுதா?'' என்றாள்.

''தெரியலையே!''

காரின் வேகம் இன்னமும் குறைந்தது.

''ரோட்டோட டிவைடருக்கு போடற கல்லு மாதிரி தெரியுது. இதை மட்டும் எதுக்கு தனியா போட்டு வெச்சிருக்காங்க... கவனிக்காம அந்தக் கல்லு மேல ஏதாவது ஒரு வண்டி வந்து மோதினா என்னாறது... மண்டையில மூளையே இல்லாத யாரோ ஒருத்தர் தான், இந்த வேலையைப் பண்ணியிருக்கணும்.''

காருக்கும், கல்லுக்கும், 10 அடி துாரம் இருக்கும்போதே, காரை நிறுத்தினாள், மஹிமா. முன்பக்கக் கதவைத் திறந்து, கீழே இறங்க முயன்றான், ராகவ்.

''எங்கே போறீங்க?''

''ரோட்ல கிடக்கிற அந்தக் கல்லை எடுத்து, ஓரமா போட்டுட்டு வந்துடறேன்.''

முகம் மாறியது அவளுக்கு.

''என்ன மஹி, ஏன் இப்படி பயப்படறே... நீ காரை வேகமா ஓட்டிட்டு வந்தாலும், உன் பார்வைக்கு அந்தக் கல்லு தட்டுப்பட்டதால, நல்ல வேளையாய் காரை நிறுத்திட்டே. இதே வழியில் வேற யாராவது வேகமாய் வந்து, கல்லு மேல மோதியிருந்தா, வண்டி, 'ஸ்கிப்' ஆகி தலைகீழாய் கவிழ்ந்து இருக்குமே. இரு, நான் போய் ஒரு ரெண்டு நிமிஷத்துல அந்தக் கல்லைத் தள்ளி அப்படி ஓரமாய் போட்டுட்டு...''

காரை விட்டு இறங்க முயன்ற கணவனின் கையைக் கெட்டியாய்ப் பற்றிக் கொண்டாள், மஹிமா. ஒருமுறை சுற்றும் முற்றும் கலவரமாய்ப் பார்த்துவிட்டு குரலை இன்னமும் தாழ்த்தி, ''வேண்டாங்க… எனக்கு பயமாயிருக்கு.''

''என்ன பயம்?''

''இந்த இடம் சரியில்லீங்க... நீங்க, காரைவிட்டு இறங்கினா, ஏதாவது பிரச்னை வரலாம்ன்னு, என் மனசுக்குப்படுது. நாம இந்த இடத்தை விட்டுப் போயிடலாம்.''

மஹிமாவை வியப்பாய் ஏறிட்டவாறு ஒரு சின்ன சிரிப்போடு, ''நீ இப்படி பயப்படறதைப் பார்த்தா, எனக்கு ஆச்சரியமாயிருக்கு. நான் கீழே இறங்கி, அந்தக் கல்லை ரோட்டோரமாய் எடுத்துப் போட்டா, என்ன பிரச்னை வரும்ன்னு நினைக்கிறே?'' கேட்டான், ராகவ்.

''அது என்னான்னு எனக்கு சொல்லத் தெரியலைங்க. நமக்கு இந்த சமூக சேவையெல்லாம் வேண்டாம். வேற யாராவது இந்த வழியில் வர்றவங்க கல்லைப் பார்த்துட்டு, ரோட்டோரமாய் துாக்கி போட்டுட்டு போகட்டும்.''

வியர்த்து மின்னுகிற முகத்தோடு சொன்ன, மஹிமா, காரை சாலையின் இடதுபக்க ஓரமாய் நகர்த்தி, அந்தக் கல்லைக் கலவரமாய் பார்த்துக் கொண்டே ஆக்சிலேட்டரை அழுத்தினாள்.

கார் வேகம் பிடித்து பின்புற சிவப்பு விளக்குகளைக் காட்டியபடியே இருட்டில் கரைந்து மறைந்தது.

பாலத்தின் பில்லர் திட்டில், அடைப்புக் குறியைப் போல் படுத்திருந்த, மாணிக்கம் எழுந்து உட்கார்ந்து, கார் சென்ற திசையையே வெறித்துப் பார்த்தபடி பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.

நேரம் 2:45 மணி.

நள்ளிரவு நேரக் காற்றில், குளிர் கணிசமாய் உயர்ந்து, மாணிக்கத்தின் உடம்பை ஊடுருவியது. கம்பளிப் போர்வையை போர்த்திக் கொள்ள, மொபைல் போன் வெளிச்சமாய் ஒளிர்ந்து 'வைபரேஷனில்' கூப்பிட்டது. போனின் திரையில், பத்ரியின் பெயர் நகர்ந்தது.

போனை காதுக்கு ஒற்றி மெல்ல குரல் கொடுத்தான், மாணிக்கம்.

''சொல்லு பத்ரி.''

''என்ன போனையே காணோம்... பட்சி ஏதும் மாட்டலையா?''

''அரைமணி நேரத்துக்கு முன், ஒரு பட்சி வந்துச்சு. ஆனா, உஷாராயி பறந்துடுச்சு.''

''இப்ப மணி 2:45 ஆகுது, 4:00 மணிக்குள்ள பட்சி ஏதும் சிக்கலைன்னா, இடத்தைக் காலி பண்ணிடு. ஏன்னா, டிராபிக் அதிகமாயிடும்.''

''புரியுது... இன்னும் ஒரு மணி நேரம் பார்த்துட்டு, கிளம்பிடறேன். நாளைக்கு வேற ஏரியாவுக்கு போயிடலாம்.''

''மாணிக்கம்... நான் ஒரு விஷயத்தை சொன்னா, தப்பா எடுத்துக்க மாட்டியே!''

''மொதல்ல விஷயம் என்னான்னு சொல்லு.''

''நடுரோட்ல கல்லை வெச்சு, விபத்தை ஏற்படுத்தி, பணம் பறிக்கிற இந்த வேலை இனிமே நமக்கு வேண்டாம். கடந்த மூணு மாசத்துல ரெண்டு பேர் இந்த சம்பவத்தால செத்துப் போயிருக்காங்க.

''நல்லவேளையா, நாம போலீஸ்ல மாட்டலை. ஆனா, என்னிக்காவது ஒருநாள் போலீஸ்ல மாட்டிக்குவோம்ங்கிற ஒரு பயம், என் மனசுக்குள்ளே உதைச்சுக்கிட்டே இருக்கு.''

''இதை விட்டா பொழப்புக்கு என்ன வழி?''

''மும்பை போயிடலாம்.''

''அங்க போய் என்ன பண்றதாம்?''

''என் நண்பன் ஜெகன், அங்கே இருக்கான். பானிபூரி வியாபாரம் பண்ணியே பெரிய ஆளாயிட்டான். 'ஜூஹூ பீச்'ல நாலைஞ்சு பானிபூரி கடை போட்டிருக்கான், சரியான வியாபாரம்.

''ஒரு கடையைப் பார்த்துக்கச் சொல்லி, என்னைக் கூப்பிட்டான். நல்ல சம்பளம் தர்றானாம். சாப்பாடு, இருக்க இடம் எல்லாமே இலவசம். உன்னையும் கூட்டிகிட்டு வர்றதா அவன்கிட்டே சொன்னேன். தாராளமா கூட்டிட்டு வான்னு சொன்னான்.''

பதில் பேசாமல் மவுனம் காத்தான், மாணிக்கம்.

''என்ன பேச்சையே காணோம்?''

''மும்பைக்குப் போக நீ ஆசைப்படறியா பத்ரி?''

''ஆமா!''

''எனக்கு அந்த ஆசையில்லை... நீ வேணும்ன்னா போயிக்க.''

''மாணிக்கம், நல்லா யோசனை பண்ணு. நமக்குன்னு ஒரு நல்லநேரம் வரும்போது, அதை நாம உபயோகப்படுத்திக்கணும்.''

''அந்த நல்லநேரத்தை நீயே உபயோகப்படுத்திக்க. எனக்கு இந்தக் கல்லும், மூணு சக்கர சைக்கிளும் போதும். நான் பண்றது தப்பான காரியம் தான். ஆனா, நான் அதை புத்திசாலித்தனமா பண்ணிட்டிருக்கேன்.

''உனக்கு இஷ்டமிருந்தா, எனக்கு பார்ட்னராய் இரு. இல்லேன்னா மும்பை போய், உன் நண்பன் கூட சேர்ந்துகிட்டு, பானிபூரி வியாபாரம் பண்ணு.''

''மாணிக்கம், நான் என்ன சொல்ல வர்றேன்னா?''

''நீ ஒண்ணையும் சொல்லாதே, போனை வை. துாரத்துல ஒரு வண்டி வருது.''

மொபைல் போனை அணைத்து, மறுபடியும் ஒரு பீடியைப் பற்ற வைத்த மாணிக்கம், இடது பக்கமாய் திரும்பி, சாலையைப் பார்த்தான்.

நுாறு மீட்டர் துாரத்தில் ஏதோ பாரம் ஏற்றிய லாரி ஒன்று இரைச்சலோடும், மங்கிய அழுக்கான, 'ஹெட்லைட்' வெளிச்சத்தோடும் வேகமாய் வந்து கொண்டிருந்தது.

உஷாரானான், மாணிக்கம்.

டிரைவர் எப்படியும் லாரியை நிறுத்திட்டு, கல்லை ஓரமாய் எடுத்துப் போட கண்டிப்பாக இறங்குவான். எதிர்பார்ப்புடன், தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஒரு அடி நீள கத்தியுடன், ரோட்டோரமாய் இருட்டில் கரைந்து நின்றான், மாணிக்கம்.

வேகம் குறையாமல் வந்த லாரி, கல்லின் மீது மோதி கடக்க முயல, லாரியின் பின் சக்கரம் கல்லின் மீது ஏறி இறங்கியது.

மறுநாள் காலை, 7:00 மணி.

'டிவி'யில் தலைப்புச் செய்திகள் முடிந்து, செய்தித்துளிகள் ஆரம்பித்தது. செய்தி வாசிக்கும் பெண், முதல் செய்தியாய் வாசித்துக் கொண்டிருந்தாள்.

'நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே பிரியும் கிளைச்சாலையில், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த, கருங்கல்லின் மீது லாரியொன்று மோதியது.

'அப்போது, அந்தக்கல் தெறித்து வீசியடிக்கப்பட்டு, சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த நபரின் தலையைத் தாக்கியதில், அதே இடத்தில் முகம் சிதைந்து, மரணமடைந்தார்.

'சம்பவ இடத்தில் கிடைத்த அவரின் மொபைல் போனை கைப்பற்றிய போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி, உண்மைகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்...'

ராஜேஷ்குமார்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Mani Iyer - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-பிப்-202319:06:51 IST Report Abuse
Mani Iyer ஆரம்பமே அசத்தல்.. சூப்பர் ராஜேஷ்குமார் சார்.
Rate this:
Cancel
Iliyas A -  ( Posted via: Dinamalar Android App )
05-பிப்-202323:44:35 IST Report Abuse
Iliyas A intresting
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X