ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கூர்மகிராம் என்ற கிராமத்தை, வேத கிராமம் என, அழைக்கின்றனர்.
இந்த கிராமம், 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 56 குடும்பங்கள் வசிக்கின்றன. 300 ஆண்டு பழைய பாரம்பரியத்தை இங்கு நிலைநாட்டுவதால், மின்சாரம், இன்டர்நெட், எரிவாயு சிலிண்டர் மற்றும் 'டிவி' என, எந்த நவீன கருவிகளும் பயன்படுத்துவதில்லை.
கிராமத்திற்கே, ஒரே ஒரு, 'லேண்ட் லைன்' போன் தான் உள்ளது. 6 கி.மீ., துாரத்தில் உள்ள, ஸ்ரீமுகலிங்கேஸ்வரர் என்ற, பிரபல கோவிலை காண, இக்கிராமத்திற்கு விஜயம் செய்கின்றனர், பக்தர்கள்.
இதனால், வார நாட்களில், நுாற்றுக் கணக்கானோரும், ஞாயிறன்று, ஆயிரத்துக்கும் அதிகமானோரும் இங்கு வருகின்றனர்; சிலர் தங்கியும் செல்வர். அவர்களுக்கென்று விருந்தினர் வீடுகள் உண்டு. ஆனால், அனைத்து வீடுகளுமே, மண்ணால் கட்டப்பட்டு, மேலே கூரை அல்லது ஓடு வேயப்பட்டு உள்ளன.
கிருஷ்ணன் பக்தர்கள், இந்த குருகுலத்தை நடத்தி வருகின்றனர். இங்கு ஆசிரியர்களாக இருக்கும் பலர், ஐ.டி., வேலையில் இருந்தவர்கள்; வெளிநாட்டினர் சிலரும் இங்கு உள்ளனர்.
இவர்கள் மாடு வளர்க்கின்றனர். கிராம நிலங்களில், தாங்களே, நெல், துவரை வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டுக் கொள்கின்றனர். கிடைக்காதவற்றை பக்கத்து கிராமங்களிலிருந்து வாங்கிக் கொள்கின்றனர்.
இங்கு, ஒரு மாணவருக்கு, 10 ஆண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பக்தி விரிக் ஷா, பக்தி சாஸ்திரி, பக்தி வைபவ் என, மூன்று விதமான படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்பை முடித்தவர்கள், மேலே படிக்க விரும்பினால், தமிழகம், சேலத்தில் உள்ள வேத பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மற்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது.
தினமும் அதிகாலை, 4:30 மணிக்கு துவங்கி, இரவு, 7:30 மணி வரை பயிற்சி தொடர்கிறது.
அதிகாலையில் மங்கள ஆரத்தி, ஜபம், குரு பூஜை, புத்தகம் படித்தல். 9:00 மணிக்கு வகுப்பு. இதில், கணிதம், அறிவியல், சமஸ்கிருதம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கலைகள், சாஸ்திரங்கள் மற்றும் மகாபாரதம் போதிக்கப்படுகிறது.
இதே மாணவர்களை வைத்து, நாடகங்கள் நடத்தப்படுகின்றன. அக்கம்பக்க கிராமங்களுக்கு சென்று, வேத பிரசாரமும் நடத்தப்படுகிறது. ஹரிகதா பயிற்சியும், மாலையில், நீச்சல், கபடி போன்ற விளையாட்டுகளும் உண்டு.
எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை தான் குருகுலத்தின் நோக்கம்.
- ராஜி ராதா