கமலின், 'மாஸ்டர் பிளான்!'
விக்ரம் படத்தில், இளவட்ட நடிகர்களான, விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு நடித்த, கமலுக்கு, அப்படம், 'சூப்பர் ஹிட்' ஆக அமைந்தது. அதையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிக்கும், 234வது படத்தில், ஏழு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல, 'ஹீரோ'களை நடிக்க வைக்கிறார்.
அந்த வகையில், பாலிவுட் நடிகர், ஷாருக்கான், மலையாள நடிகர், மோகன்லால் போன்ற நடிகர்களை ஒப்பந்த செய்துள்ள கமலும், மணிரத்னமும், இன்னும் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பிரபல நடிகர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.
சினிமா பொன்னையா
வசூல் சாதனையில், முத்து!
ரஜினி நடித்து, 1995ல் வெளியான, முத்து படம் தான், இந்திய படங்களில், முதன் முதலாக, ஜப்பான் நாட்டில் வெளியானது. அதோடு, இந்த முதல் படமே, ஜப்பான் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று, பாக்ஸ் ஆபிசில், 22 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதன் பிறகு தான், இந்திய படங்கள், அடுத்தடுத்து, ஜப்பானிலும் வெளியாகத் துவங்கின.
ஆனபோதிலும், இதுவரை, ரஜினி படத்திற்கு பிறகு, எந்த இந்திய படமும், ஜப்பானில் பெரிதாக வசூலிக்கவில்லை. குறிப்பாக, ராஜமவுலி இயக்கிய, ஆர் ஆர் ஆர் படம், ஜப்பான் மொழியில் வெளியாகி, 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. அந்த வகையில், ரஜினியின், முத்து படத்தின், ஜப்பான் வசூலை, இதுவரை, எந்த ஒரு இந்திய படங்களாலும் முறியடிக்க முடியவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது.
— சி.பொ.,
ஓரங்கட்டப்படும், மாளவிகா மோகனன்!
விஜயுடன், மாஸ்டர் படத்தில் நடித்த, மாளவிகா மோகனன், தற்போது, தன் படக்கூலியை, தடாலடியாக, 2 கோடி ரூபாயிலிருந்து, 5 கோடியாக உயர்த்தி இருக்கிறார். அது மட்டுமின்றி, 'ஹீரோ'களுக்கு கொடுப்பது போன்று, அதிநவீன வசதி கொண்ட கேரவன் வசதிகளும் செய்து தர வேண்டும் என்று, நிபந்தனை போட்டுள்ளார்.
ஆனால், விஜயுடன் இவர் நடித்த, மாஸ்டர் படம், வெற்றி பெற்றாலும், தனுஷுடன் நடித்த, மாறன் படம் தோல்வி அடைந்து விட்டதால், '5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு, நீங்கள், 'ஒர்த்' ஆன நடிகை இல்லை. மார்க்கெட்டை பிடிப்பதற்கு முன்பே, 5 கோடி கேட்பதெல்லாம் ரொம்ப அதிகம்...' என்று, மாளவிகாவை, ஓரங்கட்டினர், தயாரிப்பாளர்கள்.
— எலீசா
அதிரடி வில்லியாகும், பிரியாமணி!
திருமணத்திற்கு பிறகும், சினிமாவில், 'பிசி'யாக நடித்து வரும் பிரியாமணி, கொட்டேஷன் கேங் என்ற படத்தில், பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படை தலைவியாக நடித்து வருகிறார்.
'இந்த வேடம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தால், தொடர்ந்து அதிரடியான வில்லி கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறேன். இந்திய அளவில், சினிமாவை எடுத்துக் கொண்டால், பெண்கள் வில்லி வேடங்களில் பெரிதாக, 'ஸ்கோர்' செய்யவில்லை.
'அதனால், இந்த படத்திற்குப் பிறகு, எத்தகைய கொடூரமான வில்லி கதாபாத்திரங்கள் வந்தாலும் நடித்து, சாதித்து காட்டப் போகிறேன்...' என்று, ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார், பிரியாமணி.
— எலீசா
'ரீ - மேக்' நாயகனான, சிரஞ்சீவி!
செகண்ட் இன்னிங்சில், சிரஞ்சீவி நடிக்கும் நேரடி தெலுங்கு படங்கள், தோல்வியை கொடுத்து வருவதால், தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான, 'சூப்பர் ஹிட்' படங்களின் உரிமையை வாங்கி, அதன் தெலுங்கு, 'ரீ - மேக்'கில் நடித்து, 'ஹிட்' படங்களாக கொடுத்து வருகிறார்.
ஏற்கனவே, விஜய் நடித்த, கத்தி படத்தை, கைதி நம்பர்150 என்ற பெயரில் தெலுங்கில், 'ரீ - மேக்' செய்து நடித்தார். அதையடுத்து, மலையாளத்தில், மோகன்லால் நடித்த, லுாசிபர் என்ற படத்தை, தெலுங்கில், காட்பாதர் என்ற பெயரில், 'ரீ - மேக்' செய்தார்.
அந்த இரண்டு படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது, தமிழில், அஜித் நடித்து வெளியான, வேதாளம் படத்தின், 'ரீ - மேக்'கில் நடித்து வருகிறார். மேலும், விஸ்வாசம் படத்தின் தெலுங்கு, 'ரீ - மேக்'கிலும் நடிக்கப் போகிறார், சிரஞ்சீவி. அந்த வகையில், தற்போது, தெலுங்கு சினிமாவில், 'ரீ - மேக்' நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* சுள்ளான் மற்றும் தல நடிகருக்கு ஜோடியாக நடித்து விட்ட அந்த மலையாள மஞ்சு நடிகை, அடுத்தபடியாக தமிழில் புதிய படங்களை கைப்பற்ற கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ளார். முக்கியமாக இவர் நடித்த இரண்டு படங்களுமே, 'ஹிட்' அடித்து விட்டதால், 'மெகா ஹீரோ'களின் கவனம் இந்த மலையாள நடிகை பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் காரணமாக, தாரா, மூனுஷாவிடம் கதை சொல்லியிருந்த இயக்குனர்களே, மலையாள நடிகை பக்கம் திரும்பி விட்டனர்.
* ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்த, அந்த ஜெயமான நடிகரை, தான் இயக்கும் ஒரு சரித்திர படத்தில் நடிப்பதற்கு அழைப்பு விடுத்தார், 'ஹாரர்' பட இயக்குனர் ஒருவர். ராஜராஜ சோழன் வேடத்தில் நடித்த பிறகு, தன்னுடைய மவுசு எகிறி விட்டதால், படக் கூலியை 'டபுள்' ஆக்கிவிட்டார், ஜெயமானவர். இதன் காரணமாக, பழைய ஞாபகத்தில், நடிகர் வீட்டு கதவை தட்டிய, அந்த இயக்குனர், வேறு நடிகர்களை தேடி, ஓட்டம் பிடித்து விட்டார். அதோடு, புதிய படங்களுக்கு, தன்னை ஒப்பந்தம் செய்ய, எந்த தயாரிப்பாளர் பேசினாலும், கதை கேட்பதற்கு முன், தன் படக்கூலியை சொல்லி அலற விடுகிறார், நடிகர்.
இதனால், 'மேற்படி நடிகர், தங்களது கையை மீறி விட்டதாக...' சொல்லி, அவரை, தங்களது பட்டியலிலிருந்து துாக்கி விட்டனர், பட்ஜெட் பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள்.
சினி துளிகள்!
* அஜித்துடன் நடித்த, துணிவு படம், வெற்றி பெற்றதை அடுத்து, மலையாளத்தில், மஞ்சுவாரியர் நடித்து வரும் படங்களை, தமிழகத்திலும் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
* பொன்னியின் செல்வன் படத்தில், மல்டி ஹீரோ கதையில் நடித்த, ஜெயம் ரவி, தொடர்ந்து அதுபோன்ற கதைகளில் நடிப்பதற்கு மறுத்து, 'சிங்கிள் ஹீரோ' கதைகளை மட்டுமே, ஓ.கே., செய்கிறார்.
அவ்ளோதான்!