மகளின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பெண்ணைப் பெற்றவள், தன் மாமனார் - மாமியாரிடம் போய், 'என் தகப்பனாருக்கும் ஒரு அழைப்பு அனுப்புங்கள்...' என, வேண்டினாள்.
'அவர் வந்து என்ன கொடுக்கப் போகிறார்? எப்போது பார்த்தாலும், 'கிருஷ்ணா கிருஷ்ணா...' என்று புலம்பும் அவரிடம், துளசியும், கோபி சந்தனமும் தானே இருக்கும்...' என்றாள், மாமியார்.
'தன் பேத்தி கல்யாணத்தை ஒரு ஓரமாக இருந்தாவது அவர் பார்க்கட்டுமே. தயவுசெய்து, என் தந்தைக்கும் ஓர் அழைப்பு அனுப்புங்கள்...' என, வேண்டி வற்புறுத்தினாள், மருமகள்.
அதை ஏற்று, வேண்டா வெறுப்பாகச் சம்பந்திக்கு அழைப்பிதழ் அனுப்பினார், மாமனார்.
மாப்பிள்ளை வீட்டாரால் இகழப்பட்ட பக்தர், அந்த அழைப்பிதழைப் பெற்றதும், அதை பகவான் திருவடிகளில் வைத்து, 'பகவானே, அந்தக் குழந்தைகள் நலமாக வாழ வேண்டும். நீ தான் அதற்கு அருள் செய்ய வேண்டும்...' என்று, வேண்டினார்.
சில அடியார்களுடன் பேத்தி கல்யாணத்திற்கு சென்றார், பக்தர். பக்தரைப் பார்த்ததும், அவரையும், அவருடன் வந்தவர்களையும் ஒரு பாழடைந்த வீட்டில் தங்க வைத்தனர், சம்பந்தி வீட்டார்.
தந்தை வந்த தகவல் அறிந்து, அவரைப் பார்க்க வந்தாள், மகள். தந்தையைக் கண்டதும் அழுதாள். அவளுக்கு ஆறுதல் கூறிய பக்தர், 'அம்மா, அழாதே... என் பகவான், நான் அவமானப்படும்படியாக விட மாட்டார்...' என்றார்.
கல்யாணத்தன்று எல்லாரும் பலவிதமான பரிசுப் பொருட்களைத் தர, பேத்தியின் கல்யாணத்தைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்த பக்தரோ, ஒரு மூலையில் அமர்ந்து, பகவான் நாமாக்களைச் சொல்லி, பாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, பெரும் செல்வந்தரான சேட் ஒருவர், அழகான பெண்கள் சிலர் பின்தொடர உள்ளே நுழைந்தார். அவரை, ஏக மரியாதைகளுடன் தடபுடலாக வரவேற்றனர்.
ஆனால், சேட், மணப் பெண்ணின் அப்பாவிடம், 'ஐயா, உங்கள் சம்பந்தியின் நண்பன் நான். இன்று நான் நல்ல நிலையில் இருப்பதற்கு காரணம், அது உங்கள் சம்பந்தியான அந்தப் பக்தரால் தான். அவர் சார்பில், மணமக்களுக்காக ஏராளமான பொருட்களை கொண்டு வந்திருக்கிறேன்...' என்று சொல்லி விலை உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள், தங்கக்காசுகள் என, தட்டுதட்டாக, மணமக்களுக்குக் கொடுத்தார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பக்தர், 'பகவான் நம்மைக் காப்பாற்றி விட்டார்...' என்று மகிழ்ந்தார். அவரை அவமானப்படுத்திய சம்பந்தி வீட்டைச் சேர்ந்தவர்களோ, தங்கள் நடத்தைக்காக வெட்கித் தலை குனிந்தனர்.
பகவானே வந்து அருள் புரியக்கூடிய அளவிற்கு இருந்த அந்த உத்தமமான பக்தர், மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான, 'வைஷ்ணவ ஜனதோ' எனும் பாடலை எழுதிய, நரசிமேத்தா என்பவர்.
தெய்வம் ஒருபோதும் அடியார்களைக் கை விடாது.
பி. என். பரசுராமன்