அன்புள்ள சகோதரிக்கு —
என் வயது: 55, கணவர் வயது: 62. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். சொந்தமாக, 800 சதுர அடியில் ஒரு பிளாட் மட்டுமே உள்ளது.
பணி ஓய்வுக்கு பின், என் கணவர், ஜவுளி கடை ஒன்றில், கணக்காளராக பகுதி நேர வேலையில் உள்ளார். அந்த வருமானம் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்துள்ள ஓய்வூதிய தொகை வட்டியில் தான், குடும்பம் நடத்தி வருகிறோம்.
எங்களுக்கு ஒரே மகன். படிப்பில் சுட்டியான அவன், நன்கு படித்து, துபாயில், நிறுவனம் ஒன்றில், மேலதிகாரியாக பணியில் அமர்ந்தான்.
அவனுக்கு, ஏழு ஆண்டுக்கு முன் திருமணமும் செய்து வைத்தோம். மருமகளுக்கு, திருமணமான ஒரு அக்கா உள்ளாள்.
திருமணத்துக்கு பின், தனிக்குடித்தனம் தான் வேண்டும் என்பதால், வீடு பார்த்து, தனியாக வைத்தோம். திருமணமான சில மாதங்களில், மகன், துபாய் வேலைக்கு சென்று விட்டான்.
அவன் சம்பாதித்ததை, மனைவியின் வங்கி கணக்குக்கே அனுப்புவான். நாங்கள் எதுவும் கேட்பதில்லை.
ஆறு ஆண்டுகளுக்கு பின், ஏதாவது சுய தொழில் செய்ய எண்ணி, துபாய் வேலையை விட்டு வந்தான். இத்தனை ஆண்டுகளில் அவன் சம்பாதித்து அனுப்பிய பணத்தை சேமித்து வைக்காமல் இருந்துள்ளாள், மருமகள். குறைவான தொகையே வங்கியில் இருந்துள்ளது.
அதைப்பற்றி மருமகளிடம் கேட்க, சரியான பதில் கூற மறுக்கிறாள். 35 லட்சம் வரை அனுப்பியதாக கூறுகிறான், மகன். அவ்வளவு பணமும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வற்புறுத்தி கேட்டதும், கோபித்துக் கொண்டு, தன் அக்கா வீட்டுக்கு சென்று விட்டாள்.
அக்கா புருஷனிடம், என் மகன் சென்று கேட்டதற்கு, 'அக்காவும், தங்கையும் சேர்ந்து ஏதோ தில்லுமுல்லு செய்கின்றனர். எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது... நான் ஏதாவது கேட்டால், என்னையும், குழந்தைகளையும் வீட்டை விட்டு துரத்தி விடுவதாக மிரட்டுகின்றனர்...' என்கிறாராம்.
மருமகளுக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை. 'வேலை வெட்டி இல்லாமல் அம்மா வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு, என்னை, 'டார்ச்சர்' செய்கிறார், கணவர்...' என்று, ஊரெல்லாம் சொல்லித் திரிகிறாள்.
'வேலையும், வருமானமும் இல்லாமல், உங்களுக்கு பாரமாக இருக்கிறேனே... இத்தனை ஆண்டுகள் உழைத்தும், அவ்வளவும் வீணாகி விட்டதே...' என்று புலம்புகிறான், மகன்.
அவனுக்கு ஆறுதல் சொல்ல தெரியாமல் தவிக்கிறேன். எனக்கு ஒரு நல்ல ஆலோசனை கூறுங்கள் சகோதரி.
— இப்படிக்கு,
சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
உன் மகன் பக்கம் இருக்கும் தவறுகளை முதலில் பட்டியலிடுகிறேன்...
* உன் மகன், துபாயில் இருக்கும் எதாவது ஒரு அரசுடைமை வங்கியில், வெளிநாட்டு வாழ் இந்தியர் சிறு சேமிப்பு கணக்கு ஆரம்பித்து, அதில் தான் சம்பாதித்த பணத்தை போட்டு வந்திருக்கலாம். அதே வங்கியில், உன் மருமகளுக்கும், ஒரு சிறு சேமிப்பு வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுத்து, மாத செலவுக்கான பணத்தை மட்டும் மருமகள் கணக்குக்கு உன் மகன், 'பண்ட் டிரான்ஸ்பர்' பண்ணி இருந்திருக்கலாம். மகனின் பணம் பாதுகாப்பாய் இருந்திருக்கும்
* உன் மகன், ஆறு ஆண்டுகளில், 35 லட்சம் சம்பாதித்து, மனைவிக்கு கொடுத்திருக்கிறார். ஆறு மாதத்துக்கு ஒருமுறை, ஆண்டுக்கு ஒரு முறையாவது, கொடுத்த பணம் சேமிப்பில் உள்ளதா என, 'க்ராஸ்செக்' செய்திருக்கலாம்
* ஆறு ஆண்டுகள் துபாய் பணி முடித்து, திரும்பிய உன் மகன், இந்தியாவில் செய்ய வேண்டிய பணியை திட்டமிட்டு இருந்திருக்கலாம். வேலை கிடைக்கவில்லை என்றாலும் கூட, குறைந்த முதலீட்டில் சொந்த தொழிலாவது துவங்கி இருக்கலாம்
* உன் மகனின் பலவீனப் புள்ளிகளை, மருமகள் மோப்பம் பிடித்து, அதை, 'எக்ஸ்ப்ளாய்ட்' பண்ணியுள்ளாள். தாம்பத்யம் ஆறு ஆண்டுகள் மறுக்கப்பட்ட பெண்ணின் மனம், அணு உலைக்கு சமம்.
உன் மருமகள் பக்கம் இருக்கும் தவறுகளை இப்போது பார்ப்போம்...
* கணவரின் ஆறு ஆண்டு சம்பள பணத்தை, உன் மருமகள் திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட்டு, ஊதாரி இளைஞன் எவனிடமாவது மொத்தமாய் இழந்தாளோ என்னவோ?
* மகன் அனுப்பிய, 35 லட்ச ரூபாயை, உன் மருமகளும், அவளது அக்காளும் பங்கு போட்டு ஆடம்பர செலவு செய்தாலும் செய்திருக்கலாம். நகை, ஹோட்டல் உணவு, புடவை, சினிமா, ஊர் சுற்றல் மற்றும் 'மேக் - அப்' என, பணத்தை செலவழித்திருக்கலாம்
* உன் மருமகள், ஆடம்பர வீண் செலவு செய்யாது, பணத்தை இரு பங்குகளாக பிரித்து, அவள் மற்றும் அவளது அக்கா பெயரில், காலி மனைகள் வாங்கி போட்டிருக்கக் கூடும் அல்லது ஒட்டு மொத்த பணத்தையும் போட்டு, மருமகள் பெயரில் ஒரு வீடு கட்டியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இனி, நீ செய்ய வேண்டியது என்ன?
காவல் நிலையத்தில் மருமகள் மீது, உன் மகன், ஒரு புகார் கொடுக்க வேண்டும்.
'ஆறு ஆண்டுகளில், மகன் அனுப்பிய, 35 லட்சம் ரூபாயை, மருமகளுக்கு நெருங்கியவர்கள் மோசடி பண்ணி விட்டனர் அல்லது திருடி விட்டனர். முறைப்படி விசாரித்து, அந்த பணத்தை மீட்டு தாருங்கள்...' என, புகாரில் எழுத வேண்டும்.
கணவன், -மனைவிக்கு இடையேயுள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்னை என்பதால், காவல்துறை விசாரிப்பில் பெரிய ஆர்வம் காட்டாது. மோசடி அல்லது திருட்டு கோணத்தில் விசாரிக்க ஆசைப்படும், காவல்துறை.
மாதம் தோறும் கணவர் அனுப்பிய பணத்தில், மனைவி செய்த குடும்ப செலவு என்ன? மீதி பணத்தை மனைவி என்ன செய்தாள் என்ற உண்மை, தடாலடியாக வெளிப்படும்.
மீதி பணத்தை மருமகள் எதாவது அசையாத சொத்தாக வாங்கி போட்டிருந்தால், அவளை மன்னித்து, உன் மகன் அவளுடன் குடும்பம் நடத்தலாம். திருமணபந்தம் மீறிய தொடர்பில் மருமகள் ஈடுபட்டிருந்தது உறுதியானால், விவாகரத்துக்கு குடும்பநல நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கட்டும், மகன்.
இடையில், உன் மகனை, சிறு முதலீட்டில் எதாவது ஒரு சொந்த தொழில் துவங்க வை.
மகன்-, மருமகள் மூலம் உனக்கு, பேரன் - பேத்தி இருக்கின்றனரா இல்லையா என்பதை, உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. பேரனோ - பேத்தியோ இருந்தால், விவாகரத்து முடிவை மறு பரிசீலனை செய்யலாம்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.