அறந்தை மணியன் எழுதிய, 'பம்மல் முதல் கோமல் வரை' என்ற நுாலிலிருந்து:
தமிழகத்தில், நீதிமன்ற காட்சி இடம்பெற்ற முதல் படம், வேலைக்காரி. கதை வசனம், அண்ணாதுரை.
இதில், அண்ணாதுரை எழுதிய, மிக பிரபலமான வசனம்...
'சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு, ஏழைகளால் பெற முடியாத விளக்கு...'
வேலைக்காரி படத்திற்கு பிறகு தான், வசன கர்த்தாக்களுக்கு, தமிழ் திரையுலகில், நல்ல மரியாதையும், உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கத் துவங்கியது.
கடந்த, 1936ல் ஒரு குறும்படம் வெளிவந்தது. அதன் பெயர், மடையர்கள் சந்திப்பு. கதை வசனம் எழுதியிருந்தார், பம்மல் சம்பந்த முதலியார்.
இவர், மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்த காலத்தில் கூட, திரை உலகத்துடன் தொடர்பில் இருந்தார்.
தமிழ் திரையுலகின் தந்தை என போற்றப்படுபவர், இயக்குனர் கே.சுப்ரமணியம். இவர், பல திரைப்பட இயக்கம், தயாரிப்பு பணிகளுக்கு இடையிலும், 1942ல், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறையும் சென்றவர்.
தமிழ் திரையுலகில் முதன் முதலில் பல வர்த்தக பொருட்களுக்கு, 'மாடலிங்' செய்து அமோக விற்பனைக்கு வழி வகுத்தவர், பேபி சரோஜா. 1937ல் இவர், பாலயோகினி என்ற படத்தில் நடித்தார். அதில், அவர் அணிந்திருந்த வளையல், சோப், கைப்பை போன்றவை மிகவும் பிரபலமாயின.
கதை வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியரான தஞ்சை ராமையாதாஸ், சகலகலா வல்லவர். பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். இதனால், அவரை தமிழ் திரைப்படவுலகில், 'வாத்தியார்' என்றே அழைப்பர்.
ஏ.பி.நாகராஜன், நடிகராக இருந்த காலத்தில், 'சாட்டை' என்ற பெயரில், ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். ஒரு நாடகத்தில், ஏ.பி.என்., கதாநாயகனாகவும், சிவாஜி கணேசன், கதாநாயகியாகவும் நடித்தனர்.
நீண்ட வசனங்களை இருவரும் பேசப் பேச, கைத்தட்டு குவியும். சிவாஜி கணேசனை போன்றே, ஏ.பி.நாகராஜனும் பல நாடகங்களில் பெண் வேடம் போட்டுள்ளார். 1940ல், இவரின், 12வது வயதில், குமாஸ்தாவின் மகள் என்ற நாடகத்தில், கதாநாயகி சீதாவாக நடித்தார்.
எஸ்.எஸ்.வாசன் அதை படமாக்க எண்ணி, நாயகியாக நடிக்க இருந்த, எம்.வி.ராஜம்மாவுடன் நாடகம் பார்க்க வந்திருந்தார். கதாநாயகியாக நடிப்பது ஒரு ஆண் என, அவரிடம் சொல்லவில்லை.
இதனால், சீதாவாக நடித்தது ஒரு ஆண் என அறிந்ததும், ஆச்சரியப்பட்டார், ராஜம்மா. அத்துடன், அந்த படத்தில், சீதாவாக தான் நடித்தாலும், தோழியாக நடிக்க, ஏ.பி.நாகராஜனுக்கு சிபாரிசு செய்தார்.
- நடுத்தெரு நாராயணன்