''நாளைக்கு, யாராவது ஸ்கூலுக்கு வரணும்,'' என்றான், காமராசு.
''எதுக்குடா, என்னத்த பண்ணி வச்ச? சரி, நானும் அப்பாவும் வர்றோம்,'' என்றாள், அம்மா பொன்னுதாயி.
''யாரு... உன் இரண்டாவது புருஷனா?'' என்றான்.
''காமராசு, என்ன வாயி நீளுது... அந்த மனுஷன் இல்லைன்னா, இந்நேரம் நாண்டுக்கிட்டு செத்திருப்போம்,'' என்றாள்.
''இதெல்லாம் ஒரு பொழைப்புன்னு... அதையே செஞ்சுருக்கலாம், த்துா... தோ பாரு, இந்த அப்பன், சுப்பன் உறவை, பொட்டச்சிங்களா நீங்க கொண்டாடுங்க; நான் ஏத்துக்க மாட்டேன். இதுக்கு பிச்சை எடுக்கலாம்,'' என்றான்.
''பேசுவடா, ஏன்னா, நீ பெண் பிள்ளையில்லையே... ஒண்ணுக்கு நாலு பொட்டைகளை வச்சுக்கிட்டு, எவன் எப்போ கையப்புடிச்சு இழுத்திடுவானோன்னு பாடு பட்டது, என் மனசறியும், நம் குல சாமியறியும்... உன்னைப் போல, எடுபட்ட நாய்க்கு என்ன தெரியும்?''
''ஒரு மண்ணும் தெரிய வேண்டாம்; அத்தை... நீ மட்டும் ஸ்கூலுக்கு வா. வேற யாரும் வந்து என் மானத்தை வாங்க வேண்டாம்,'' என்றபடி, புத்தகப் பையை எடுத்து, வேகமாக வெளியேறினான், காமராசு.
''சின்னப் பையன், புரியாம பேசறான்; விடு அண்ணி.''
''சின்னப் புள்ளையாட்டமா பேசறான்... அவன் வாயில வசம்பை வச்சுத் தேய்க்க,'' என்ற, பொன்னுதாயிக்கு கோபத்தோடு கண்ணீரும் வந்தது.
ஆசைப்பட்டா, சீமைத்துரைக்கு கழுத்தை நீட்டினாள், பொன்னுத்தாயி. நாலு பிள்ளைக்கு அம்மாவான பிறகு, கட்டின புருஷனும் ஓடிப் போனதும், உதவிக்கு வந்தவனை சேர்த்து வைத்துப் பேசியது ஊர். வேறு வழியில்லாமல் தானே எல்லாமும் நடந்தது.
மூத்தப் பெண் ரேவதியும், இரட்டைக் குழந்தைகளான நான்கு வயது, சீதாவும் - கீதாவும்... ஏன், நாத்தனார் சிவகாமியும் கூட ஏற்றுக்கொண்ட உறவை, காமராசு மட்டும் தள்ளி வைத்து அவளை சங்கடப்படுத்தினான்.
ஒரு நாள் இரவு நேரம்...
இவளை அடித்துத் துவைத்து, கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றை அறுத்தெடுத்து, 'இந்தக் கால் பவுன் தாலிக்கு இத்தனை இம்சையாடி பண்றே?' என்று, ஒரு மிதி மிதித்து விட்டுப் போன புருஷன், இன்னும் வரக்காணோம்.
இருந்ததை வைத்து ஒப்பேற்றியாச்சு. பிடி அரிசியில்லை. கொல்லையிலிருந்த முருங்கை மர கீரையை எடுத்து, நமுத்துக் கிடந்த பொரியை பொடி செய்து துாவி, புரட்டி, இரண்டு இரண்டு உருண்டையாய் பிடித்துக் கொடுத்தாகி விட்டது. நள்ளிரவில் யாரோ வாசல் கதவை பலமாய் தட்டினர்.
தட்டிய வேகத்திலேயே, அது கணவன் இல்லையென்று தெரிந்தது.
'வெளியே வாடி...' என்ற நாராசக் கூச்சல்.
சிவகாமியும், ரேவதியும் விழித்துக் கொள்ள, நடுங்கினாள், பொன்னுத்தாயி. கூச்சல் பலமாய் வலுத்தது.
நண்டும் சிண்டும் அழத் துவங்க, ஏன், காமராசு கூட திகைத்துப் போனான். விபரமின்றி, கதவைத் திறக்கப் போவதாக எகிறினான். முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள், பொன்னுத்தாயி.
விடிய விடிய உறங்காமலே, விடியாத வாழ்க்கையை எண்ணி சபித்துக் கொண்டாள், பொன்னுத்தாயி. சீர் செனத்தி, நகையும் பவிசுமாக வந்தவளுக்கு, நாலு குழந்தைகளைத் தந்தவன், இப்படி ஓடிப்போய் விடுவானென்று கனவிலும் எண்ணவில்லை. பள்ளிக்கூடமிருந்தாலும் மதிய உணவு கிடைக்கும், நால்வருக்கும் கவலையில்லை. இப்போதோ விடுமுறை நேரம்...
மறுநாள் இரவும் வயிறு ஒட்டி, உறக்க கிறக்கத்தில் இருந்தவர்களை, நேற்றைவிட வேகமான கூச்சலும், அலப்பறையும், பயப்பட வைத்தது. பசியும், பயமும், தலை சுற்றியது.
புல்லட் ஒன்று, வந்து வாசலில் நிற்கும் சத்தம் கேட்டது.
ஜன்னல் கதவை சிறிதளவே திறந்து பார்த்தாள், மூத்த மகள் ரேவதி. புல்லட்டை விட்டு இறங்கிய சீமைத்துரை, கைலியை மடித்துக் கட்டியபடி வர, உதறியது உடம்பு.
மதியம் தான் வீட்டு ஓனர் வந்து, 'வாடகைப் பணத்தை கொடு, இல்லைன்னா, உன் மகளை துாக்கிட்டு போயிடுவேன்...' என்றான்.
அப்போதே நடுங்கினாள், ரேவதி.
இப்போது, இவன் படியேறி வருகிறானே. ஒரே உதையில் கதவு உடைந்து விடுமே என்ற அச்சமாயிருந்தது.
கூட்டத்திடம், 'ஏன்டா... ஓடிப்போன பேமானியை விட்டுட்டு, ஒண்ணும் அறியா வீட்டு பொம்பளைகளிடம் வீராப்பு காட்டுறீங்க... எவன்டா அவன் கத்துனது, முன்ன வாடா... யாருடா கதவைத் திற திறன்னு தட்டுனது... அந்த நாயை இழுத்துட்டு வாங்கடா...' என்று, அதட்டினான்.
பம்மியபடியே வந்த ஒருவன், 'தோ சீமைத்தொரை... இது, பெரிய மனுஷங்க பிரச்னை. நீ, தலையிடாம கண்டுக்காம போ...' என்றான்.
'யாருடா பெரிய மனுஷன், குடும்ப பொண்ணை கையப்பிடிச்சு இழுக்கிறவனா? ஏன்டா, உங்களையும், உங்க ஆத்தாதானே பெத்துப் போட்டுச்சு. அதெப்படிடா வாய் கூசாம பேசுறீங்க.
'அஞ்சு நிமிசம் டைம், எல்லாத்தையும் பொறுக்கி எடுத்துக்கிட்டு, எடத்தை காலி செய்யணும்... ம் போ... இனிமே, எதைப் பேசுறதானாலும், மண்டியில வச்சு இந்த சீமைத்தொரையை வந்து பார்க்கச் சொல்லு... கிளம்பு கிளம்பு...' என்றதும், முனகியபடியே, கூட்டம் கலைந்தது.
அய்யனாரு சிலையைப் போல வாசற்படியில் உட்கார்ந்தவனை விழி விரியப் பார்த்தாள், ரேவதி.
மறுநாள் காலையில், அரிசி, பருப்பு, மளிகை பொருட்களை வீட்டு வாசலில் இறக்கி வைத்து விட்டுப் போயிருந்தான், சீமைத்துரை.
பொன்னுத்தாயி, வீம்பாகத் தொட மாட்டேன் என்று இருந்தாலும், ரேவதியும், சிவகாமியும் அதை எடுத்து, சமைக்க ஆரம்பித்தனர்.
தினமும் இரவில் வந்து வீட்டு வாசலில் அமர்ந்திருந்து, காலையில் கிளம்பிப் போய் விடுவான், சீமைத்துரை. எந்தத் தொல்லையுமின்றி வீடு அமைதியாக, வீதி மட்டும் விழித்துக் கொண்டது. பொன்னுத்தாயியையும், சீமைத்துரையையும் வாய்க்கு வந்தபடி பேசியது. அவனிடம் முதலில் நெருங்கியது, சிறுமிகளான, சீதாவும் - கீதாவும் தான்.
அன்றிரவு அவன் தும்மலும், இருமலுமாய் இருக்க... தங்கைகளுடன் வெளியே வந்தாள், ரேவதி.
'உடம்புக்கு சரியில்லையா?'
'ஹும், லேசா சுடுது...'
சிவகாமி, கையில் கஷாயத்துடனும், ரேவதி வெந்நீருமாய் வெளியே வந்தனர். 'அண்ணே, எந்திரிங்க... இதைக் குடிங்க, தொண்டைக்கு எதமாயிருக்கும். அப்புறமா கொஞ்சம் ரசஞ்சாதம் கரைச்சுத் தாரேன்...' என்றாள், சிவகாமி.
'என்னையா இப்போ அண்ணன்னு கூப்பிட்ட?'
'ஆமாம்...'
கண்கலங்கி வாங்கி பருகியனுக்கு, கசப்பான கஷாயம் இனிப்பான பானகமாய் உள்ளே இறங்கியது.
'சரிம்மா, உள்ளே போய் படுங்க...' என்றான்.
பெரும்பான்மையான கடன்களுக்கு அவன் பொறுப்பேற்றுக் கொண்டதால், அதன்பின் கடன்காரன் எவனும் வீடு தேடி வரவில்லை.
சுமுகமாக போய்க் கொண்டிருப்பதைப் பொறுக்காத எவனோ, எதையோ பேசி, கொளுத்திப் போட்டான். ஊரின் பெரிய மனிதர்கள் சிலரும், மண்டிக்கடைகளின் சங்கத்தலைவரும் கூட்டம் கூடினர்.
சீமைத்துரையையும், பொன்னுத்தாயி குடும்பத்தையும் சேர்த்தே விசாரித்து, சீமைத்துரை, உறவென்று எதுவுமின்றி பொன்னுத்தாயி வீட்டுக்கு போகக் கூடாதென, தீர்ப்பையும் சொல்லினர்.
திகைத்தான், சீமைத்துரை.
யாருமற்ற அனாதையாக வாழ்ந்த வாழ்வில், இப்போது தான் அன்பு கிடைத்திருக்கிறது. அதைத் தட்டிப்பறித்ததில் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. கடைசியில் வெறுமையாய் கிடந்த பொன்னுத்தாயி கழுத்தில் தாலியைக் கட்டினான், சீமைத்துரை.
ரேவதி மற்றும் சீதா, கீதாவும் சுலபமாக அவனை அப்பாவாக ஏற்றுக் கொண்டனர். எதிர்த்தான், காமராசு.
பொன்னுத்தாயின் மனதிலும், உடனே சீமைத்துரை நுழைந்து விடவில்லை. இவனும், கணவன் என்ற உரிமையை நிலைநாட்டவுமில்லை. கூடின்றி, இலக்கின்றி வானில் அலைந்து திரிந்த பறவைக்கு, சொந்தக்கூடும், சொந்தங்களும் கிடைத்த சந்தோஷமே, அவனுக்கு போதுமானதாக இருந்தது.
தன்னை அண்ணனாக ஏற்றுக் கொண்ட சிவகாமிக்கு, தன் நண்பனின் சகோதரனை பேசி முடித்தான். சீமைத்துரையின் மென்மையான அணுகுமுறையிலும், அவனுடைய பொறுப்பான ஆளுமையிலும் பொன்னுத்தாயியின் பெண்மையும் வசப்பட ஆரம்பித்தது.
பி.டி.மாஸ்டரும், காமராசுவின் வகுப்பாசிரியையும் முன்னே அமர்ந்திருக்க...
''என்னாச்சு, காமராசு இப்போல்லாம் ஒரு மாதிரியாய் இருக்கான். கோபம் ஜாஸ்தியாயி, நேத்துக் கூட ஒரு பையனை போட்டு புரட்டி அடிச்சுட்டான். அவங்கம்மா ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கிட்டதாலா?'' என்றார், ஆசிரியை.
''ஆமாங்க நெசந்தான்,'' என்றாள், சிவகாமி.
''நெசமாவா... ஏம்மா, வயசுப் பையனையும், வயசு வந்த பொண்ணையும் வச்சுக்கிட்டு, அவங்களுக்கு ரெண்டாங் கல்யாணம் கேட்குதா... ச்சே, என்ன வெட்கங் கெட்ட பொழப்பு?''--- அந்த ஆசிரியை அருவருப்புடன் முகம் சுளித்தாள்.
''ஆமாங்க, வெட்கங் கெட்ட பொளப்பு பொழைக்கிறவங்க தான். நீங்கள்ளாம் பாதுகாப்பா வீட்டுக்குள்ளே ரெட்டைத் தாழ்ப்பாள் போட்டுகிட்டு, நிம்மதியா துாங்குறவங்க. எங்க பிரச்னை என்னன்னு தெரியுமா...
''ராத்திரி முழுக்க கதவைத் தட்டுற சத்தத்துல, ராக்கண்ணு முழிச்சதுண்டா... விடிய விடிய அசிங்கமான பேச்சுக்களை காது கொடுத்து கேட்க முடியாம தவிச்சதுண்டா... வாச முழுக்க வாந்தியும், குடிச்சு போட்ட பாட்டிலும் சாப்பிட்ட மிச்சமுமாய் கிடக்கிற வாசலை பெருக்கியதுண்டா...
''சோறு தண்ணீயில்லாம வெறும் முருங்கையிலையை பொரட்டி தின்னதுண்டா... சொல்லுங்க டீச்சர்... காமராசு அப்பா, ஊரெல்லாம் கடனை வாங்கிட்டு, குடும்பத்தை விட்டுட்டு ஓடிப்போனானே, அவன் வெட்கங் கெட்டவனில்லே...
''ஊர் முழுக்க, 'டாஸ்மாக்' கடையை விரிச்சு வச்சிருக்கே இந்த அரசு, அது வெட்கம் கெட்டது இல்ல... கொடுத்த கடனுக்கு கையப்பிடிச்சு இழுத்தானே, அவன் வெட்கம் கெட்டவன் இல்லை...
''வாடகை பாக்கிய கீழே வைக்கலேன்னா, உன் மகளை துாக்கிட்டு போயிடுவேன்னு, சொன்னானே வீட்டு ஓனர், அவன் வெட்கம் கெட்டவன் இல்ல... வேற வழியே இல்லாம, மறு தாலி கட்டிக்கிட்ட எங்க அண்ணி தான் வெட்கம் கெட்டவளாகிட்டாளா... இது, வெட்கங்கெட்டதனமாய் இருந்தா இருந்துட்டு போகட்டும்.
''எங்கண்ணி பெத்த பிள்ளைகளுக்காகவும், பெறாத என்னையும், ஏன் தன்னையும் கூட காமாந்தகாரப் பேய்களிடமிருந்து காப்பாத்திக்கத்தான், ரெண்டாம் தடவை கல்யாணம் கட்டிக்கிட்டாங்க... அவங்க பட்டபாடு, பக்கத்திலேயிருந்து பார்த்த எனக்குத்தான் தெரியும்.
''எல்லாப் பொண்ணுகளுக்குமே, மனசும், உணர்வுகளும் ஒண்ணு தான். படிச்சாலும், படிக்காட்டாலும், பொண்ணு மனசு ஒரே மாதிரி தான். புரியாம பேசாதீங்க,'' என்று படபடத்தாள், சிவகாமி.
டீச்சர் தலை குனிய, தொண்டையை செருமிய மாஸ்டர், ''சரிங்க, எங்களுக்கு இந்தக் கொடுமையெல்லாம் தெரியாது. இப்போ, காமராசுவ பற்றி யோசிங்க. நல்லாப் படிக்கிற புள்ளை... இது, ரெண்டுங்கெட்டான் வயசு. கூட இருக்கிற கூட்டாளிகளும் கண்டதை பேச, புள்ளை மனசு குமுறுது. ஏதாவது செய்யணும்,'' என்றார்.
''சாண் புள்ளையானாலும் ஆம்புளப்புள்ளேன்னு சொல்லி சொல்லி வளர்த்துட்டோம்ல, அதான் பொம்பளைக கஷ்டம் புரியலை சார், அவனுக்கும்,'' சிவகாமியின் வார்த்தைகள் பொட்டிலடித்தாற் போலிருந்தது.
''சிவகாமியம்மா... நடந்ததை மாத்த முடியாது, எனக்கொரு யோசனை. அதை செய்யலாமான்னு உங்க வீட்டுலயும் கலந்து பேசுங்க... இன்னும் ரெண்டு மாசத்துல பரிட்சை வருது, எழுதட்டும்.
''பிறகு, டவுன்ல பெரிய ஸ்கூலில் சேர்த்துட்டு, ஹாஸ்டல்ல போடுவோம். புது இடம், புது மனுஷங்க, புது சிநேகிதம், புது சூழல்ல மாற்றம்வரும். தனியா இருக்கிறப்போ யோசிக்க முடியும்; கோபம் குறையும். கண்ணுக்குத்தள்ளி நிக்கிறப்போ, எல்லாமும் சிறுசா தெரியும்.
''நானும் அப்பப்போ பேசறேன். யதார்த்தத்தை புரிஞ்சுக்க வைப்போம். அவனை சரி பண்ணிடலாம். கவலைப்படாதீங்க,'' என்று, பி.டி., மாஸ்டர் முடிக்க, கை கூப்பினாள், சிவகாமி.
சிவகாமி கேட்ட சரமாரியான கேள்விகள் ஒவ்வொன்றும் வெட்கங்கெட்டதனமாய், அரூபமாய், அவள் சென்ற பின்பும், அந்த இருவரையும் சுற்றி சுற்றி வருவது போலிருந்தது.
ஆமாம்... அவள் கேட்டதும் சரிதானே, யார் வெட்கம் கெட்டவர்கள்?
ஜே. செல்லம் ஜெரினா