தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
'அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன'ன்னு சமீபத்துல நீங்க சொன்னப்போ எனக்கு அக்டோபர் 8, 2022 சம்பவம் நினைவுக்கு வருதுய்யா!
செப்டம்பர் 27, 2022 அன்னைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு என் மகனை அழைச்சிட்டுப் போனேன். 'சிறுகுடலில் நீர்க்கசிவு பிரச்னை'ன்னு அன்னைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அக்டோபர் 2ம் தேதி வயிற்றுப்பகுதியில தையல் பிரிஞ்சிடுச்சு; அக்டோபர் 5ம் தேதி இன்னொரு ஆப்பரேஷன் பண்ணினாங்க; அறுவை சிகிச்சைக்கு அப்புறம் முறையான பராமரிப்பு இல்லாததால அமைச்சர் கவனத்துக்கு விஷயத்தை கொண்டு போனேன்!
அக்டோபர் 8ம் தேதி சாயங்காலம், 'உங்க மகன் இறந்துட்டான்'னு தகவல்! 'சடலத்தை வாங்க மாட்டேன்'னு உட்கார்ந்துட்டேன். கீழ்ப்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் சமாதானம் பண்ணி, என் புகார் அடிப்படையில முதல் தகவல் அறிக்கை பதிவு பண்ணினாங்க!
மகனோட காரியத்துக்கு அப்புறம் ஆட்சியர், மருத்துவக்கல்வி இயக்குனர், அமைச்சர், உங்க தனிப்பிரிவு வரைக்கும் மனு கொடுத்துட்டேன். நாலு மாதம் ஆச்சு; இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கையே கிடைக்கலை!
என் மகன் சாவுக்கு எனக்கு நீதி வேணும்!
- அரசு மருத்துவமனையில் மரணமுற்ற 17 வயது மகன் ஹரிகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்கும் தாய் மின்னல்கொடி, திருமுல்லைவாயல், திருவள்ளூர்.