திருப்பூர், கல்லாங் காட்டில் இருக்கிறார் 85 வயது இந்தி ராணி பாட்டி; பிர பல சமையற்கலைஞர். 'செவித்திறன் குறைபாடு' என்றாலும் பாட்டியின் பேச்சில் எள்ளலுக்கு குறைவில்லை!
'ஹியரிங் மிஷின்' ஏன் வைச்சுக்கலை?
அதை மாட்டிக்கிட்டா மட்டும், 'நல்லாயிருக்கீங்களா... சாப்பிட்டீங்களா... உடம்பை நல்லா பார்த்துக்கோங்க'ங்கிறதை தவிர வேற ஏதும் என்கிட்டே பேசப் போறாங்களா; அப்புறம் எதுக்கு அந்த மிஷினு?
ருசியா சமைச்ச கை விரலுக்கு மோதிரம் கிடைச்சிருக்கா?
இங்கே பாரு... கிரைண்டர்ல சிக்கி என் கை விரல்ல ரெண்டு துண்டாயிருச்சு; மோதிர விரல் இருக்குன்னாலும் இப்படி இருக்கிற கைக்கு எதுக்கு மோதிரம்னு நினைச்சிருக்கலாம்!
பாட்டிக்கு பிடிச்ச உணவு?
ருசியா சமைச்சு பரிமாறத் தெரியுமே தவிர, ரசிச்சு சாப்பிடத் தெரியாது சாமி; நானெல்லாம் பசிக்கு சாப்பிடுற ஆளு!
சில ஆண்டுகளுக்கு முன் பாட்டியின் ஒரே மகள் மார்பக புற்றுநோயினால் இறந்துவிட்டார். வயது மூப்பினால் எந்த நினைவுகளிலும் பாட்டி சிக்குவதில்லை. சமையல் வாழ்விற்கு சாட்சியாய் பழைய பூரி கரண்டி ஒன்றை பத்திரப்படுத்தி இருக்கிறார்!
அதைப் பார்க்கையில் மனம் பூரிக்கிறார்; புன்னகை பூக்கிறார்.
பாட்டி சொல்லை தட்டாதே!* புதுசு வர்றப்போ பழசையும், சோகம் வர்றப்போ சிரிப்பையும் மறந்துடாதீங்க!