பல பெண்களைப் போல், 'எல்லாம் என் தலையெழுத்து' எனும் அங்கலாய்ப்புடன் முந்தானையில் முகம் துடைத்து கடக்கும் சம்பவங்கள் நிறைந்ததுதான் மகேஸ்வரியின் வாழ்வும்; ஆனால், அவற்றை எதிர்கொண்ட விதமே அவரது தலையெழுத்தை மாற்றி இருக்கிறது! தேனி மாவட்டம், சின்னமனுார் வட்டம், வெள்ளையம்மாள்புரம் இவரது கிராமம்!
வாய் விட்டு பேசினால் துயர் விட்டு போகும்
மதுப்பழக்கத்துல இருந்து என் கணவர் மீண்டு வந்துடுவார்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். என் இரண்டு மகள்களை கரை சேர்க்க காமதேனு விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்துல சேர்ந்தேன். மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பற்றி கிராமம் கிராமமா போய் விவசாயிகள்கிட்டே பேசுறேன்!
பெண்களுக்கு சுயதொழில் ஆலோசனை தர்றேன். நுாற்றுக்கும் அதிகமான பெண்கள் உள்ள விவசாய உற்பத்தியாளர் குழுவுக்கு தலைமையேற்று வழிநடத்துறேன். இந்த அனுபவத்தால என் தன்னம்பிக்கை அதிகமாகி இருக்கு; பேசப்பேச நான் என் கஷ்டங்களை மறக்குறேன்!
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மகேஸ்வரிக்கு, 16 வயதில் திருமணம்; தற்போது, 40 வயது; 'ஒரு பெண்ணால் சுயமாக முடிவுகளை எடுக்க முடியும்' என்பதை அனுபவத்தால் உணர, தன் வாழ்வின் கால் நுாற்றாண்டை இவர் செலவழித்திருக்கிறார்!
காற்றுள்ள போதே துாற்றி கொள்
வனப்பகுதியை காப்பது, வாழ்வாதாரத்திற்கு சுயதொழில் பழகுவது மாதிரியான விஷயங்களை பழங்குடியின மக்களுக்கு சொல்லித்தர்ற வனக்குழு பணியாளரா இருக்குறேன். தினசரி காலையும், மாலையும் பால் கொள்முதல் மைய பணியாளரா லிட்டருக்கு ஒரு ரூபாய் வருமானம் பார்க்குறேன்!
பிரண்டை, முருங்கை, வாழை மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்புல தனி வருமானம் இருக்கு. இப்படி உழைச்சுதான் மூத்த மகளை கட்டிக் கொடுத்தேன். சின்னவ பிளஸ் 2 படிக்கிறா!
பருத்தி நுாலுடன் வாழை நார் சேர்த்து புடவை/ சட்டை நெய்வது, முருங்கை இலையில் 'சூப்' பொடி தயாரிப்பது, பிரண்டை ஊறுகாய் தயாரிப்பது என எந்நேரமும் ஏதேனும் வேலையில் இருக்கிறார் மகேஸ்வரி.
உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியாது
'உன் மனைவி ஊர் ஊரா சுத்துறா; இருட்டினதுக்கு அப்புறமா வீட்டுக்கு வர்றா; காசு சம்பாதிக்கிற திமிர்ல இருக்குறா!' - இதெல்லாம் என்னைப் பற்றி என் கணவர்கிட்டே சொல்லப்படுற புகார்கள்! நான் புதுசா ஒரு புடவை வாங்கினாக் கூட மத்தவங்க பார்வைக்கு தப்பா தெரியுது. இவங்ககிட்டே நற்சான்றிதழ் வாங்கித்தான் என்னை நிரூபிக்கணுமா என்ன?
ஆசைகள் 1000* மது இல்லாத சமூகம்* ரசாயனம் கலக்காத விவசாயம்* திருப்தியான ஓய்வு காலம்