மூளையில், 'டோபமைன்' என்ற வேதிப் பொருள் சுரப்பது குறைந்து விடுவதால், 'பார்க்கின்சன்ஸ்' நோய் வருகிறது.
இதற்கான சிகிச்சை முறைகளில், ஆரம்பத்தில் டோபமைன் மாத்திரைகள் கொடுத்து சரி செய்யலாம். அடுத்து விறைப்புத் தன்மை, நடுக்கம், தள்ளாட்டத்தைக் குறைக்க மாத்திரைகள் அவசியம்.
இந்த மாத்திரைகள் நான்கு - 10 ஆண்டுகளுக்கு நன்றாக வேலை செய்யும்; அதன்பின், பல பக்க விளைவுகள் வரத் துவங்கும். எந்தப் பிரச்னையை தடுக்க இந்த மருந்துகளைக் கொடுத்தோமோ, அதையே அதிகப்படுத்தி விடும்.
சிலருக்கு துாக்கமின்மை, கனவுகள், ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்வது போன்ற பல பக்க விளைவுகளும் வரும்.
இந்நிலையில், பக்க விளைவுகளை கட்டுப்படுத்த மாத்திரைகளை குறைப்பது, மூளையின் உள்பகுதியைத் துாண்டி, டோபமைன் சுரப்பை அதிகரிக்கும் அறுவை சிகிச்சை செய்வது ஆகியவை, கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறைகள்.
தற்போது இந்த அறுவை சிகிச்சை இல்லாத நவீன முறை வந்தள்ளது. இதில், 'அல்ட்ரா சவுண்ட்' நுண் அலைகளை, எம்.ஆர்.ஐ., வழிகாட்டுதலுடன், பிரத்யேக கருவி வாயிலாக, தேவையான இடத்தில் குவிக்கும் போது, அந்த இடத்தில் வெப்பம் அதிகரிக்கும்.
கோடிக்கணக்கான, 'நியூரான்'கள் உடைய மூளை, மின்காந்த அலைகள் மூலம் இயங்கும் உறுப்பு.
டோபமைன் இல்லாததால், மின் அலைகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. மாத்திரை தவிர, வேறு எந்த விதத்திலும் டோபமைனை சுரக்கச் செய்ய முடியாது. இதனால், சில இடங்களில் குறைவாகவும், சில இடங்களில் அதிகமாகவும் செயல்படும்.
அதிகமாக செயல்படுவதை அடையாளம் கண்டு, அல்ட்ரா சவுண்ட் கதிர்களை செலுத்தி, செயல்பாட்டை குறைத்தால், நோயின் அறிகுறிகளான கை நடுக்கம் குறையும்.
வேகமாக நடப்பர். பேச்சு மேம்படும். விறைப்புத் தன்மையை சரி செய்து விடலாம். மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவையும் சரி செய்யலாம்.
இந்த தொழில்நுட்பம், 2016ல் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டு, சோதனை ஆய்வுக்குப் பின், அமெரிக்கா, ஐரோப்பா, தைவான் என்று பல நாடுகளுக்கும் சென்று, நம் நாட்டில் எங்கள் மையத்தில், 42 - 84 வயது வரை உள்ள, 16 நோயாளிகளுக்கு செய்துள்ளோம்.
பார்க்கின்சன்ஸ் தவிர, வேறு காரணங்களால் நடுக்கம் வந்தாலும், இந்த முறையில் சரி செய்ய முடியும்.
உலகம் முழுதும், 10 ஆயிரம் பேருக்கு இந்த சிகிச்சை செய்திருக்கின்றனர்.
பெரிதாக எந்த பக்க விளைவுகளும் வராத நவீன சிகிச்சை முறை இது ஒன்று தான். சிகிச்சையின் போதே அறிகுறிகள் குறைவதை உணர முடியும்.
டாக்டர் கே.விஜயன்நியூரோ சோனாலஜிஸ்ட்,ராயல் கேர் மருத்துவமனை, கோவை.0422 - 2227000