மார்ச் 15 - காரடையான் நோன்பு
எண்களை 1, 2, 3 என எழுதுவது போல, தமிழில் க, உ, ங என எழுதினர். இதில், 'க' என்ற எழுத்து ஒன்று என்பதைக் குறிக்கும். இத்துடன், 'தை' என்ற எழுத்தை இணைத்தால், 'கதை' என வரும். அதாவது, ஒன்றோடு இன்னொன்றை தைத்து அல்லது சேர்த்து எழுதப்படுவது கதை. சம்பவங்களின் தையல் - தொகுப்பு என்றும் கூறலாம்.
சமுதாயத்தை சீர்திருத்த எழுதப்பட்ட கதைகளில் ஒன்று, சத்தியவான் - சாவித்திரி கதை. மகன்- - பெற்றோர், கணவன்- - மனைவி, மாமனார் - மாமியார்-, மருமகள் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக, இந்தக் கதை சொல்லப்பட்டது.
சத்தியவான் - சாவித்திரி கதை, பெரும்பாலானவர்கள் அறிந்தது தான். இறந்து விட்ட கணவனை, எமனிடமிருந்து மீட்டு வர போராடிய ஒரு பெண்ணின் வரலாறு.
சாவித்திரி என்ற சொல்லுக்கு, வல்லவள் என்று பொருள். பெண்கள் கல்வியின் மூலம் சமயோஜித புத்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என, பெண்ணினத்துக்கு கற்றுத் தந்திருக்கிறாள், சாவித்திரி.
சமயோஜிதம் இருந்தால், பேச்சுத்திறன் தானாகவே வந்து விடும். எமனிடமிருந்து, தன் கணவனை மீட்க, அவனையே தன் சொற்களால் மடக்கியவள்.
'இறந்தவனின் உயிரைத் தவிர, எதை வேண்டுமானாலும் கேள்...' என்று, எமன் புத்திசாலித்தனமாக கேட்க, அவனை விட புத்திசாலியான சாவித்திரி, 'எனக்கு, நுாறு பிள்ளைகள் வேண்டும்...' என்றாள்.
கணவனை இழந்தவளுக்கு பிள்ளை பிறப்பது எப்படி சாத்தியம்? வேறு வழியின்றி, சத்தியவானின் உயிரைத் திரும்பத் தந்தான், எமன்.
சாவித்திரியின் மாமனார்- - மாமியார் பார்வையற்றவர்கள். தங்கள் அரசை, எதிரிகளிடம் இழந்தவர்கள்.
தவமிருக்கும் ஒருவன், கண்களை மூடிக்கொள்கிறான். அப்போது, அவனும் குருடனாகவே இருக்கிறான். தவத்தின் மூலம், இந்த உலக வாழ்க்கை எத்தகையது என்பதை புரிந்து கொள்கிறான். தவமிருக்கும் இடமாக காட்டைத் தேர்வு செய்கிறான்.
இந்த தபஸ்வியின் அத்தனை அனுபவமும், சத்தியவானின் தந்தைக்கும் காட்டில் கிடைத்தது.
'நீ, மகாராஜாவாக இருக்கும்போது, எவ்வளவு அதிகாரங்கள் செய்தாய்... இப்போது, உன் நிலையைப் பார்த்தாயா?' என்ற கேள்விகள் அவனுள் எழுந்தன, வாழ்வின் யதார்த்தத்தை அவன் புரிந்து கொண்டான்.
நாமும், எவ்வளவு தான் பணம், செல்வாக்குடன் வாழ்ந்தாலும், அதை இழந்து விட்டால், செல்லாக்காசு என்பதை சத்தியவான்- - சாவித்திரி வரலாறு மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமயோஜிதம், புத்திசாலித்தனம், தவம், குடும்ப உறவு ஆகிய அம்சங்களின் தொகுப்பே, சத்தியவான் - சாவித்திரியின் கதை.
வெறும் கதையாகவும், காரடை தயாரித்து, சுவாமிக்கு படைப்பதை மட்டுமே, காரடையான் நோன்பின் நோக்கமாகக் கொள்ளாமல், இந்தக் கதையிலுள்ள தத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதன் வழி நடக்க முயற்சிக்க வேண்டும்.
தி. செல்லப்பா