சிறு உதவி, பெரிய மாற்றம்!
வீட்டு பணிக்கு, ஒரு பெண்மணியை வேலைக்கு வைத்திருந்தேன். சில நாட்களாக, அவர் செய்யும் பணியில் ஒரு தொய்வு ஏற்பட்டது. நம்மால் முடிந்தால், உதவி செய்யலாமே என, என்னவென்று விசாரித்தேன்.
ஆரம்பத்தில் சொல்ல தயங்கிய அப்பெண், நான் கொஞ்சம் வற்புறுத்தியதால், 'மொத்தம் ஐந்து வீட்டில் வேலை பார்த்து வரும் சம்பளத்தில் தான், வீட்டு வாடகை, மின் கட்டணம் மற்றும் மளிகை பொருள் எல்லாம் வாங்குவேன்.
'சம்பள பணத்தை வீட்டில் எங்கு ஒளித்து வைத்தாலும், கணவர் மற்றும் பையன் மது வாங்க எடுத்துச் சென்று விடுகின்றனர். அதற்கு பயந்து, பக்கத்து வீட்டில் கொடுத்து வைத்தேன்.
'அவர்கள் செலவு செய்து விட்டு, தருவதாக சொல்லி, ஏமாற்றுகின்றனர். சில நேரம் வாடகை தர முடியாததால், வாசலில் வந்து நின்று திட்டுகிறார், வீட்டு உரிமையாளர். நான் எவ்வளவு உழைத்தும், கடைசியில் அவமானமே மிஞ்சுகிறது...' என கூறி, கண்ணீர் விட்டு அழுதார்.
'இது ஒரு சின்ன பிரச்னை. வேலை பார்க்கும் ஒவ்வொரு வீட்டிலும், சம்பளத்துக்கு பதிலாக அவர்களையே நேரடியாக ஒவ்வொன்றுக்கும் கட்டணத்தை செலுத்த சொல்லி விடுங்கள்.
'உதாரணமாக, மளிகை கடைக்காரர் தெரிந்தவர் தான். அவரின், 'ஜி பே' அல்லது 'போன் பே' நம்பர் வாங்கி வந்தால், உன் சம்பளத்தை, அவருக்கு, நான் நேரடியாக பண பரிமாற்றம் செய்கிறேன். ஏதாவது கூட குறைச்சல் இருந்தால், அடுத்த மாதம் கழித்து கொள்ளலாம். முடிந்தவரை நேரடி பண பரிவர்த்தனையை தவிர்க்கவும்...' என, யோசனை கூறினேன்.
அப்பெண் வேலை செய்யும் எல்லார் வீட்டினரும், 'நேரடி பண பரிவர்த்தனையை விட, இது மிகவும் எளிது...' என்றனராம். இது நடந்த சில நாட்களில், 'நார்மல்' ஆனார்; அவர் செய்யும் வேலையும் மிக நேர்த்தியாக இருந்தது. சிறிய யோசனை, ஒரு குடும்பத்தின் நிலையை மாற்றியது, மனதுக்கு இதமாக இருந்தது.
— ரம்யா மணிகண்டன், கோவை.
மலிவு விலையில் மதிய உணவு!
பனியன் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறேன். அவினாசி அருகே, தனியார் பெட்ரோல் பங்கில், 100 ரூபாய்க்கு விற்கப்படும் மதிய உணவை, 20 ரூபாய் வீதம், 1,000 பேருக்கு கொடுக்கின்றனர்.
தொழிலாளர்கள், நடை பாதை வியாபாரிகள், வண்டி இழுப்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கல்லுாரி மாணவர்கள் என, அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக, மலிவு விலையில், உணவு கிடைப்பதால், மகிழ்ச்சியாக உணவருந்திச் செல்கின்றனர்.
இலவசங்களை தவிர்த்து, மலிவு விலையில் கிடைப்பதை, மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கு, இது ஒரு எடுத்துக்காட்டு. இலவசமாக கொடுப்பதை அவமானமாகவும், சுய மரியாதைக்கு இழுக்காகவும் நினைக்கும் மனிதர்களுக்கு, மலிவு விலையில் கொடுப்பது, ஒரு வரம் தான்.
இது, அனைத்து ஊர்களிலும் பரவ வேண்டும். எந்த ஒரு லாப நோக்கத்தையும் எதிர்பார்க்காமல் உணவு கொடுக்கும், இதுபோன்ற நிறுவனம் மற்றும் அறக்கட்டளைகளை, நாம் வரவேற்க வேண்டும்.
— பி. சதீஸ்குமார், திருப்பூர்.
முயன்றால் முடியும்!
அண்மையில், 'ஷாப்பிங் மாலில்' வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி, வெளியே வந்தேன். மாலின் முகப்பில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, ஒரு தேனீர் கடை. களைப்பு தீர, ஒரு காபி அருந்த சென்றேன்.
அந்தக் கடையில், மூன்று திருநங்கையரில் ஒருவர், மாஸ்டர் மற்றும் கேஷியராகவும்; இன்னொருவர், சப்ளையர்; அடுத்தவர் கிளீனராகவும், முழு ஈடுபாட்டோடு பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
அதுமட்டுமின்றி, திருநங்கையரின் கடை என்று, யாரும் முகம் சுளிக்காமல், ஆர்வத்துடன் காபி மற்றும் தேனீரை வாங்கி, அருந்தி ஆதரவளித்தது, மகிழ்ச்சியாக இருந்தது. வாடிக்கையாளர்களை கனிவோடு கவனித்து, நாகரிகமாக நடந்துகொண்ட விதம், அவர்கள் மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்தது.
முயன்றால் முடியும் என்பதற்கேற்ப, தங்கள் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்றி, வாழ்க்கையில் முன்னேற, சுயதொழிலில் உழைத்திடும் திருநங்கையரை, மனதார வாழ்த்தி வந்தேன்!
-சி.அருள்மொழி, கோவை.