வஞ்சிக்கோட்டை வாலிபன் பட வேலை முடிந்து, டைட்டில் கார்டு போடும் நேரத்தில், ஒரு பிரச்னை வெடித்தது. பத்மினி,- வைஜெயந்திமாலா இருவரில், யாருடைய பெயரை முதலில் போடுவது என்பதே, பிரச்னைக்கு காரணம்.
பத்மினி பெயர் தான் என்று, இவர் தரப்பும். வைஜெயந்தி மாலா பெயர் தான் முதலில் வர வேண்டும் என்று, அவர் தரப்பும் மல்லுக்கட்டியது. இதனால், படம் வெளியாவது சில நாட்கள் தள்ளிப் போனது.
அன்று, தமிழில் முதன்மையான நட்சத்திரமாக இருந்தார், பத்மினி. அவர் பெயரை இரண்டாவதாக போட முடியாது. அதே போல, அகில இந்திய நட்சத்திரமாக இருந்தார், வைஜெயந்திமாலா. அவர் பெயரும் இரண்டாம் இடத்தில் போட முடியாது.
தங்கள் பெயர், இரண்டாம் இடத்தில் வருவதை இரு நடிகையரும் சம்மதிக்கவில்லை. அப்போது, ஒரு யோசனை சொன்னார், பத்மினியின் அம்மா சரஸ்வதி.
'தமிழ் பதிப்பில் முதலில், பத்மினி பெயரும், ஹிந்தி பதிப்பில், வைஜெயந்தி மாலா பெயரும் முதலில் போடலாம்...' என்றார். இது, சரியான முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்த அனுபவம் எப்படி?
பத்மினியே கூறுகிறார்:
எம்.ஜி.ஆரை, ஆரம்பக் கால படங்களின் போதிலிருந்தே எனக்கு தெரியும். அவரும், ஜானகி அம்மாளும் சேர்ந்து நடித்த, மோகினி, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்களில், நானும், அக்கா லலிதாவும் நடனமாடி இருக்கிறோம்.
'சினிமாத்தனம் இல்லாத நாட்டியம்...' என்று, நடனத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்து, பாராட்டுவதை கேட்கும்போது, ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். அவ்வளவு அழகாக, நடனக் கலையின் நுணுக்கங்களை சொல்வார், எம்.ஜி.ஆர்.,
அவருடன் முதன் முதலாக, மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தேன். நடிகர் - நடிகையரின் சின்னச்சின்ன அசைவுகளையும் கவனிப்பார். அவர்களின் பிளஸ் பாயின்ட்டை வெளிப்படையாக பாராட்டுவார். சிறு சிறு குறைகள் இருந்தால், தனியாக அழைத்து, சுட்டிக் காட்டுவார். சின்ன, பெரிய நடிகர் என்ற பேதம் இல்லாமல் கலகலப்பாக பழகுவார்.
மதுரை வீரன் படத்தில் இடம்பெற்ற, 'ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க...' பாடல் காட்சியில், அருமையாக நடனமாடினார், எம்.ஜி.ஆர்.,
அவர் காலில் அடிபட்டு, சிகிச்சை பெற்று வந்து நடித்த படம், மன்னாதி மன்னன். இதில், எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் நடனப் போட்டி நடக்கும்.
அந்த நடனத்தின் மூலம் இன்னொரு விஷயத்தையும், நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தினார், எம்.ஜி.ஆர்., தன் கால்கள் நன்றாக, உறுதியாக இருக்கின்றன என்பதை உணர்த்தினார்.
மதுரை வீரன் மற்றும் மன்னாதி மன்னன் படங்கள், அவரை வசூல் சக்கரவர்த்தியாக உயர்த்தியது.
நான் அவருடன், மதுரை வீரன், மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, ராணி சம்யுக்தா மற்றும் ரிக் ஷாக்காரன் ஆகிய படங்களில் நடித்தேன்.
என் திருமணத்திற்கு பின், ராணி சம்யுக்தா படத்தில், சில காட்சிகள் நடித்து தர வேண்டியிருந்தது. கல்யாண மண்டபத்தில், பிருத்விராஜ், சம்யுக்தாவை குதிரையில் துாக்கிக் கொண்டு போகும் காட்சி முக்கியமானவை.
அந்த, காட்சி எடுக்கும்போது, நான், ஆறு மாத கர்ப்பிணி. அப்போது, என் நிலையை அறிந்த, எம்.ஜி.ஆர்., எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அந்த காட்சியை எடுக்க வைத்தார்.
எம்.ஜி.ஆருடன் நான் நிறைய படங்களில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், ஹிந்தியில், 'பிசி'யாக இருந்தது தான்.
எம்.ஜி.ஆர்., மிக நல்லவர், நல்ல நடிகர். அவர் முதல்வரான பின்பும், அதே எளிமையுடன் அன்பாகவும் பழகினார். என் அக்கா லலிதா பிள்ளையின் திருமணத்துக்கு வந்து, சிறப்பு செய்தார் என, ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார், பத்மினி.
சிவாஜியின் சினிமா பிரவேசத்திற்கு முன்பே, டான்சராக, நடிகையாக, 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தார், பத்மினி.
பணம் படத்தில் தான் முதல் முறையாக, பத்மினி - சிவாஜி, ஜோடி சேர்ந்தனர்.
கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் தயாரிக்க, என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கினார். திரைக்கதை, வசனம் எழுதினார், மு.கருணாநிதி. பராசக்தி படத்திற்கு பிறகு, சிவாஜி நடித்த படம் இது.
முதல் நாள் படப்பிடிப்பின் போது, 'பப்பிம்மா... நான் நாடக நடிகராக இருந்தபோது, உங்கள் படங்கள் சில பார்த்திருக்கிறேன். குறிப்பாக, மணமகள் படத்தில், உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது. அப்போதெல்லாம், எதிர்காலத்தில் நான் உங்களுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை...' என்றார், சிவாஜி.
'கணேஷ்... இப்போதைய பட உலகில், இளம், 'ஹீரோ'களே அனேகமாக இல்லாத நிலை. நீங்கள், அந்த குறையை போக்கும் விதத்தில் வந்திருப்பதாக, நான் நினைக்கிறேன். நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும், பராசக்தி படம் பற்றி, இப்போதே பரபரப்பாக பேசுகின்றனர். எதிர்காலத்தில், புகழ்பெற்ற நடிகராக விளங்குவீர்கள்...' என்று சிரித்தபடியே, பத்மினி சொன்னதும், மகிழ்ச்சியுடன், 'தேங்க்ஸ்...' என்றார். சிவாஜி.
பணம் வெற்றி படமாக அமைந்தது. அதைவிட, சிவாஜி - பத்மினியின் ஜோடிப் பொருத்தம் கவனிக்கப்பட்டது.
அதன் பின், இந்த ஜோடி, பல படங்களில் நடித்தன.
பத்மினியை கீழே தள்ளி காயப்படுத்திய சிவாஜி...
-தொடரும்.
பத்மினி - சிவாஜி வயதான தம்பதிகளாக நடித்து, வெற்றி பெற்ற படம், வியட்நாம் வீடு. இது, முழுக்க முழுக்க வித்தியாசமான குடும்ப நாடகம். முன்பே இது நாடகமாக நடத்தப்பட்டு, புகழ்பெற்ற கதை. அதில், பத்மினிக்கு, நடுத்தரப் பிராமண பெண் கதாபாத்திரம். இந்த வேடத்தில் நடிப்பதற்காக, பத்மினி பல நாட்கள் ஒத்திகை பார்த்தார். மடிசார் கட்டுவதற்கு பல மணிநேரம் பழகினார். பத்மினிக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் அது.
- சபீதா ஜோசப்