பா - கே
சமீபத்தில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், ஏராளமான மக்கள் பலியானதை பற்றிய செய்தி தொகுப்பையும், நம் இந்திய அரசு அனுப்பிய மீட்பு குழுவினர் பணியில் ஈடுபட்டதையும், 'டிவி'யில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரே இரவில், உறவுகளை, உடைமைகளை இழந்து, கதறி அழுத மக்களை பார்க்க, பார்க்க கலங்கி போனது மனசு.
நிலநடுக்கத்தைப் பற்றி கூறும் போதெல்லாம், ரிக்டர் என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரித்ததை உள்வாங்கி, இது பற்றிய விபரத்தை பின்னர் அறிந்து கொள்ளலாம் என்று நினைவில் இருத்திக் கொண்டேன்.
மறுநாள் அலுவலகத்துக்கு வந்ததும், மூத்த செய்தியாளர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டேன்.
விபரமாக சொல்ல ஆரம்பித்தார்:
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி கழகத்தின் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர், சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர். நில நடுக்கங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர். ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்ட, 200க்கும் அதிகமான நில நடுக்கங்களை அவர் ஆய்வு பண்ணியிருக்கார்.
அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலத்தில், ஏப்., 26, 1900ல் பிறந்தார், ரிக்டர் அளவுகோலை கண்டுபிடித்த சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர்.
ஒரு இடத்தில், எவ்வளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்குங்கிறதை கணக்கிடுவதற்காக, 1935ல், ஒரு அளவுமானியை உருவாக்கினார். அதன் பின், எந்த இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், இந்த அளவுகோலை உபயோகப்படுத்த ஆரம்பிச்சாங்க; அவருடைய பெயரையும் அதுக்கு வச்சுட்டாங்க.
ரிக்டர் அளவுகோல் 1 என்ற எண்ணுடன் துவங்கும். ஒவ்வொரு அலகும் முந்தையதை விட பத்து மடங்கு பெரிசு.
கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி கழகத்தில், இயற்பியல் பாடத்தில், 1928ல் டாக்டர் பட்டம் பெற்றார். கால்டெக் என்ற பகுதியில் உள்ள நிலநடுக்கவியல் ஆய்வுக் கழகத்தில், பேராசிரியராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் தான், அவர் நிலநடுக்கத்தை கணக்கிடுவதற்கு அளவுகோல் ஒன்றை உருவாக்கினார்.
செப்., 1999ல், தைவானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 2,400 பேர் இறந்துட்டாங்க. அந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில், 7.6ன்னு பதிவாகி இருந்ததாம்.
கடந்த, ஜன., 26, 2001ல் குஜராத்துல ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில், 7.9 என்று பதிவானது.
தைவானில் பதிவானதை விட, இது அதிகம். அதனால், அதோட விளைவும் அதிகம்ன்னு அர்த்தமில்லை. ஏன்னா இந்த ரிக்டர் அளவுக்கும், விளைவுக்கும் சம்பந்தமில்லை.
பூமியிலிருந்து எவ்வளவு சக்தி வெளிப்பட்டிருக்குங்கறதை குறிக்கறதுதான், இந்த அளவுகோல்.
இந்த அளவுகோலில் இரண்டு அல்லது அதற்கு கீழே பதிவாகியிருந்தா, அது, லேசான நிலநடுக்கம். இதை சாதாரணமா மக்கள் உணர்றதில்லை. அது வர்றதும், போறதும், நமக்குத் தெரியாது.
கடந்த, 1950ல், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் நிலநடுக்கம், ரிக்டர் அளவு - 8.6; 1960ல், சான்பிரான்சிஸ்கோ நிலநடுக்கம் - 8.3; 1985ல், மெக்சிகோ நிலநடுக்கம் - 8.1; 1964ல், புனித வெள்ளியன்று, அலாஸ்கா நிலநடுக்கம் - 8; ஜூலை 28, 1976ல் சீனாவின் வடகிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோல்படி, 7.8 தான். ஆனா, விளைவு பயங்கரம். 2.40 லட்சம் பேர் இறந்து போனாங்க.
ஆக, நிலநடுக்கம்ன்னாலே பயங்கரம் தான்.
- இவ்வாறு கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.
மனிதன், இயற்கையை புரிஞ்சுக்கிட்டு, அதை அனுசரிச்சு வாழ கத்துக்கணும். அதுதான் முக்கியம்; பாதுகாப்பானதும் என்று நினைத்துக் கொண்டேன்.
ப
எழுத்தாள நண்பர் ஒருவர் கொடுத்த புத்தகம் ஒன்றில் படித்தது.
கடந்த, 1944ல், எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், நம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்.
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் வந்து, மொரார்ஜி தேசாயை சிறை அதிகாரி அலுவலகத்துக்கு அழைச்சுக்கிட்டு போனார்.
'உங்க நண்பர் மங்கள்தாஸ் பக்வாசாங்கிறவர், நாசிக் சிறையில் அடைக்கபட்டிருந்தார். அவருக்கு உடல் நலம் ரொம்ப பாதிக்கப்பட்டதால், சிறையிலிருந்து பம்பாயில் உள்ள ஹரிகிஷன்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்காங்க. அவர், உங்களை பார்க்கணும்ன்னு ரொம்ப ஆவலா இருக்கார். அதனால, நீங்க பரோலில் போய் பார்த்துட்டு வாங்களேன்...' என்று தகவல் சொன்னார், சிறை அதிகாரி.
தியாகச் செம்மல்கள், பரோலில் செல்வதில்லைங்கிற உறுதியோட தான் சிறைச்சாலைக்கே வருவாங்க. அப்படி இருக்கறப்போ, மொரார்ஜி தேசாய் மட்டும் பரோலில் போயிட்டு வர்றதுக்கு எப்படி சம்மதிப்பார்!
உயிர் நண்பரின் உயிர் ஊசலாடுதுங்கறதை கேட்டதும், உடனே போய் பார்க்கணும்ன்னு ஆவல் மொரார்ஜிக்கு ஏற்பட்டாலும், வரன்முறையை மீறி போய் பார்க்கறதுன்னா அது தேச பக்தியையே அவமானப்படுத்துற மாதிரி ஆகும்ங்கிறதை உணர்ந்தார்.
அதனால, 'பரோலில் போகறதுக்கு நான் தயாரா இல்லே...' என, சொல்லிவிட்டார்.
'நண்பருடைய கடைசி ஆசையை நிறைவேத்தறது உங்க கடமை இல்லையா?'ன்னு கேட்டார், சிறை அதிகாரி.
'கடமை தான்... அதேசமயம், என் கடமையை காப்பாத்தறதும் முக்கியமாச்சே...' என்றார்.
அதுக்கப்புறம் நிபந்தனை இல்லாமலே, மொரார்ஜியை வெளியே அனுப்ப சம்மதிச்சார், அந்த அதிகாரி. அப்படி இருந்தும், மற்ற நண்பர்களுடன் கலந்து பேசிய பின்னரே வெளியே புறப்பட்டார், மொரார்ஜி.
பம்பாய்க்கு போய், படுக்கையிலிருந்த நண்பரை சந்திச்சார். அவர் ரொம்பவும் மோசமான நிலைமையில் இருந்தார். உடல்நிலை கவலைக்கிடம்ன்னு தான் டாக்டர்களும் சொன்னாங்க.
'இனி, எனக்கு வாழ்க்கையில என்ன இருக்கு... நான் இறந்துடறதே மேல்...' என்றார், மங்கள்தாஸ்.
மொரார்ஜிக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு.
மங்கள்தாஸ் இல்லத்தில் இருந்த சமயத்துலதான், மொரார்ஜியை கைது பண்ணினாங்களாம். அந்த அதிர்ச்சிதான், மங்கள்தாசை ரொம்ப பாதிச்சிருக்குங்கிறதை புரிஞ்சுக்கிட்டார், மொரார்ஜி.
'இதோ பாருங்க... விடுதலைப் போராட்டத்துல ஈடுபடறவங்களை கைது பண்றதும், சிறையில் அடைக்கிறதும் சகஜம் தானே. அன்றைக்கு உங்க வீட்டுல இருந்தப்போ நான் கைது செய்யப்படலேன்னாலும், வேறொரு இடத்துல நான் கைது செய்யப்பட்டு தான் இருப்பேன். அதனால, அதைப் பத்தி நீங்க ஏன் வேதனைப்படணும்... நீங்க தைரியமா, உறுதியா இருக்கணும்...' என்றார், மொரார்ஜி தேசாய்.
அதுமட்டுமல்ல, அதுவரைக்கும் மருந்தே சாப்பிடாம இருந்த மங்கள்தாசை, மருந்து சாப்பிட வச்சார்.
ரெண்டு நாள் அவர் பக்கத்துலயே இருந்தார். அதுக்கப்புறம் பெரிய டாக்டரை பார்த்து, மங்கள்தாஸ் உடல் நலம் சம்பந்தமா விசாரிச்சார்.
'இப்ப பரவாயில்ல, தேறியிருக்கார். எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு ஆறு மாசம்தான், அவரு உயிரோட இருப்பார்...' என, சொல்லிட்டார், டாக்டர்.
ஆனா, அதுக்கப்புறம் நடந்தது என்ன தெரியுமா?
அதன்பின், 25 வருஷம் சவுக்கியமா இருந்தார், மங்கள்தாஸ்.
இருவருக்கும் எவ்வளவு ஆழ்ந்த நட்பு என்று நினைத்து, ஆச்சரியமடைந்தேன்.