* எம்.கல்பா, சென்னை: 'ஸ்டாலின் ஏன் பிரதமர் தேர்வாக இருக்கக் கூடாது...' என்று, காஷ்மீர் முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லா கூறியுள்ளாரே...
பிரதமரானால், எம்.பி.,களின் ஹிந்தி கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வார்... இவருக்கு தான் ஹிந்தி தெரியாதே... ஹிந்தி எதிர்ப்பாளர் ஆயிற்றே!
ச. மணி, நெல்லை: எதை, மிகவும் நன்று என்று சொல்லலாம்...
அகம் மகிழ்ந்து, தர்மம் செய்வது மிகவும் நன்று... அதை விடவும், முகம் மலர்ந்த, இனிய சொல் மிக நன்று!
* கி. ராஜன், தென்காசி: வாழ்க்கையில் எதை பெருக்க வேண்டும்?
திறமையைக் கூட்ட வேண்டும்; தவறுகளை கழிக்க வேண்டும்; உழைப்பை பெருக்க வேண்டும்; நேரத்தை வகுக்க வேண்டும்!
கே. ரவி, சென்னை: நீங்கள் பத்திரிகைத் துறைக்கு வராமல் இருந்திருந்தால்...
துாத்துக்குடியிலோ, நாகர்கோவிலிலோ, உப்பு வாரிக் கொண்டிருப்பேன் அல்லது நெல்லை புதுக்குடியில் கதிர் அறுத்துக் கொண்டிருப்பேன்... இங்கெல்லாம் என் தாத்தாவின் நிலங்கள் இருந்தன!
எம். செந்தில்குமார், சென்னை: ஈரோடு தேர்தலில், நடிகர் விஜயகாந்தின், தே.மு.தி.க.,வின் சாயம் வெளுத்து விட்டதே...
'டெபாசிட்' கூட கிடைக்காது என்பது, வேட்பாளரை அறிவிக்கும் முன்பே அவர்களுக்கு தெரிந்தும், மூக்கறுபட்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு முடிவை அவர்கள் வாங்காதிருந்தால், 2004 தேர்தலில் அவர்களுக்கு, ஏதாவது ஒரு தேசிய கட்சியிலாவது கூட்டணி கிடைத்திருக்கும்!
எம்.கே.லதா, சென்னை: தமிழை, தப்பு தப்பாக உச்சரிக்கும், எழுதுபவர்களை பார்த்து, உங்களுக்கு என்ன தோன்றும்?
அது ஒரு பக்கம் இருக்கட்டும்... தமிழுக்காக நடை பயணம் துவக்கியுள்ள, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், தன் பெயரை தமிழில் மாற்றிக் கொள்வாரா!
பா. பானுமதி, சென்னை: 'பண நாயகம், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வென்றது...' என, அ.தி.மு.க., கூறியுள்ளதே...
முன்பு, அ.தி.மு.க., மட்டும், இடைத் தேர்தலில், காந்தியை பல விதங்களிலும் வீசி எறியவில்லையா என்ன? இவர்கள் கட்சியின் நிலை பற்றி மக்களுக்கு தெரியாதா என்ன... அதனால் தான், அ.தி.மு.க.,விற்கு இந்த நிலை!