லண்டனில் கிளம்பிய விமானம், சென்னைக்குப் பறந்து கொண்டிருக்க, ஜோதிராமின் மூடியிருந்த இமைகளின் வழியே கண்ணீர் வழிந்தது.
'அப்பாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன். அம்மா, அப்பாவின் இனிமையான வாழ்க்கையில் இப்படியொரு நிகழ்வா... சிரித்த முகத்தோடு நேர்த்தியாக புடவை அணிந்து, எளிமையோடு, அழகு மிளிற நடமாடும் அம்மா...
'இன்று நினைவிழந்து, ஓர் ஆண்டாக படுக்கையில்... அம்மாவையே சார்ந்து வாழும் அப்பா... நொடிக்கொருதரம் ஜானு, ஜானு என்றழைத்தபடி, அவளையே சுற்றி வந்தவர்... இப்போது வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்...'
அம்மாவை விட, அப்பாவை நினைத்து தான் மிகவும் கவலைப்பட்டான். ஐந்து நிமிடத்தில் வாழ்க்கையே தடம் மாறி விட்டதே. பாத்ரூமில் வழுக்கி விழுந்த அம்மாவின் பின் மண்டையில் அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை என்று, கடைசியில் எல்லா முயற்சிகளும் வீணாக... இதோ இப்போது படுக்கையில், உயிருள்ள பொம்மையாகக் கிடக்கிறாள்.
'அம்மா என்னோடு வேலை பார்க்கும், எல்சாவை நான் விரும்பறேன். இந்த நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் ரொம்ப நல்லவம்மா...'
'இது உன் வாழ்க்கை, ஜோதி. உன் மனசுக்குப் பிடிச்சிருந்தால் தாராளமாகக் கல்யாணம் பண்ணிக்க. கடைசி வரை அவளோடு சந்தோஷமாக வாழணும். அதுமட்டும் தான் எங்க விருப்பம். அப்பாகிட்டே பேசிட்டேன். அவரும் சம்மதம் சொல்லிட்டாரு...'
எளிமையாக, அமெரிக்காவில் திருமணம் முடித்து, இந்தியா வந்தான். உறவுகளை அழைத்து, 'ரிசப்ஷன்' வைத்து, ஒரே மகனின் கல்யாணத்தை மனப்பூர்வமாக இருவரும் அங்கீகரித்தனர்.
'எங்களைப் பற்றிக் கவலைப்படாதே, ஜோதி. நானும், அப்பாவும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்துட்டு இருக்கோம். நீ, உன் வாழ்க்கையை எல்சாவோடு இனிமையாக தொடரலாம்...'
புன்னகையோடு எங்களை அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தனர். மூன்று ஆண்டுகள் எந்த பிரச்னையுமில்லாமல் நல்லபடியாக போக, ஒரு 'புராஜெக்டில்' ஆறு மாதம் ஜோதிராம், 'கமிட்' ஆகியிருக்கும் சமயத்தில் இப்படியொரு நிகழ்வு.
கேள்விப்பட்டு துடித்துப் போனான். அவனால் நகர முடியவில்லை.
'பரவாயில்லை... நீ உடனே புறப்பட்டு வரணும்ன்னு இல்ல. வந்து தான் அம்மாவை துாக்கி நிறுத்தப் போறியா, நான் பார்த்துக்கிறேன்...
'அவசரமில்ல, உன் வேலை முடிச்சு நிதானமாக புறப்பட்டு வா, ஜோதி. இது விதி, இதை நாம் மாற்ற முடியாது. ஏத்துக்க தான் வேணும்...' என, குரல் உடைய அப்பா பேசியதில், அவன் மனம் உடைந்து போனது.
'ஒரு மாசம் தானே, போயிட்டு வா ஜோ... நான் சமாளிச்சுப்பேன், உன் அப்பா தான் ரொம்ப உடைஞ்சு போயிருப்பாரு... அவருக்கு ஆறுதலும், தைரியமும் சொல்லு. வயதாகிடுச்சு, கவலைப்பட்டு அவர் உடம்பைக் கெடுத்துக்கப் போறாரு.
'அம்மாவுக்குக் கூட சுயநினைவு இல்லை. நடப்பதை உணர முடியாது. ஆனால், இதில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது அப்பா தான். அவருக்கு தான் இப்ப ஆறுதல் தேவை...' என, கணவனை வழியனுப்பி வைத்தாள், எல்சா.
கதவைத் திறந்த அப்பாவை கட்டிப்பிடித்து கதறினான், ஜோதிராம். அவன் முதுகைத் தடவிக் கொடுத்து சமாதானப்படுத்தினார்.
''வருத்தப்படாத, ஜோதி, நடக்கக் கூடாதது நடந்துடுச்சு. என்ன செய்யறது, உள்ளே வந்து உன் அம்மாவைப் பாரு... உன்னைப் பார்க்க அவளும் தயாராய் இருக்கா,'' கைபிடித்து அம்மா படுத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அவன் நினைத்தது போல, அம்மா ஒரு நோயாளியாக படுக்கையில் இல்லாமல், சாதாரணமாக கட்டிலில் படுத்திருப்பது போல அழகாக புடவை அணிந்து, முகம் துடைத்து, பளீரென குங்குமப் பொட்டுடன் தலைசீவி இயல்பாகத் தெரிந்தாள்.
ஆனால், எங்கோ சுவற்றை வெறித்த பார்வை...
''அம்மா... உன் ஜோதி வந்திருக்கேன்மா,'' அம்மாவின் கைபிடித்து அழ, அவளிடம் எந்த மாற்றமுமில்லை.
''ஜோதி அழாதேப்பா... புரிஞ்சுக்க, அம்மாவால் நம்மை அடையாளம் காண முடியாது. உன் அம்மா நல்லாயிருக்கா... அவளுடைய ஆசீர்வாதம் என்னைக்குமே உனக்கிருக்கு,'' சமாதானப்படுத்தினார், அப்பா.
காலை, 7:00 மணிக்கு குளித்து, சாமி கும்பிட்டு, பூஜைத் தட்டுடன் அம்மாவின் அருகில் வந்து, அவள் நெற்றியில் விபூதி குங்குமம் வைத்த அப்பாவைப் பார்த்தான்.
''ஜானு... நம் மகன் ஜோதி, அமெரிக்காவிலிருந்து நம்மைப் பார்க்க வந்திருக்கான். அவனுக்குப் பிடிச்ச தேங்காய் பால் ஆப்பம் நீ செய்ய சொல்வேன்னு தெரியும். அதைத்தான் சமையல்காரம்மாவிடம் செய்யச் சொல்லியிருக்கேன்...
''மதியம் இன்னைக்கு நான் வெஜ் வேண்டாம்ன்னு, சாம்பார் காய்கறிகள் தயாராகுது. சரிதானே... சாயந்திரம் அவனோடு பிள்ளையார் கோவில் வரை போயிட்டு வரேன். உன்னால் வர முடியாது.
''அதனாலென்ன, உன் சரிபாதி நான் இருக்கேனே... உனக்கு பிடிச்ச வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் போயிட்டு உன்கிட்ட வந்து காண்பிக்கிறேன். இரு, உனக்கு டிபன் எடுத்துட்டு வரேன்,'' என, அம்மாவை கைபிடித்து துாக்கி உட்கார வைத்து, சாப்பாடு கொடுத்து, வாய் துடைத்து படுக்க வைத்தார்.
''என்ன ஜோதி பார்க்கிற, அம்மா குழந்தையாயிட்டா... அவளுக்கு ஒரு தாயாக மாறிட்டேன்,'' என, புன்னகை மாறாமல் சொல்லும் அப்பாவைப் பார்த்தான், ஜோதிராம்.
அவன் இருந்த அந்த ஒரு மாதமும், அம்மாவின் அறையில் அவள் அருகில் உட்கார்ந்து சாப்பிடுவது, அவர்கள் பேசும் சம்பாஷனையில் அவளும் கலந்து கொள்வது போல, அடிக்கடி ஜானு, ஜானு என்றழைத்து அவளிடம் பேசுவது...
அப்பாவின் நடவடிக்கைகள், உண்மையில் அவனை ஆச்சரியப்பட வைத்தது. எப்படி அப்பாவால் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடைந்து போயிருப்பார். அவருக்கு ஆறுதலும், தைரியமும் எப்படி சொல்லப் போகிறோம் என்று நினைத்து வந்தவனை, அவர் ஆறுதல்படுத்தினார்.
கிளம்ப வேண்டிய நாளும் வர, முதல் நாள் இரவு...
அம்மா துாங்க, அவளருகில் உட்கார்ந்திருந்த அப்பாவிடம், ''அப்பா வெளியே வாங்கப்பா... உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்,'' என்றான், ஜோதிராம்.
துாங்கும் அம்மாவின் புடவையை சரி செய்து, போர்வையைப் போர்த்தி, கதவைத் சப்தமில்லாமல் மெல்லச் சாத்திவிட்டு வந்தார்.
''உட்கார் ஜோதி, என்ன பேசப் போறே... நீ தைரியமா கிளம்புப்பா... அம்மாவை நினைச்சு வருத்தப்படாதே.''
''அப்பா... நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களால எப்படிப்பா எதுவும் நடக்காதது போல இயல்பாக இருக்க முடியுது. அம்மா தான் உங்களுக்கு எல்லாமுமா இருந்தாங்க. இப்ப அவங்க இந்த உலகத்தில் இருப்பதே தெரியாமல், நம் கண் எதிரிலேயே நம்மைத் தெரிஞ்சுக்க முடியாமல், படுத்திருக்காங்க...
''அம்மாவை இந்த நிலைமையில் பார்க்கும் போது என் மனசு உடையுது. அழுகையும், ஆற்றாமையும் தான் வருது. ஆனால், அவங்க தான் உலகம்ன்னு வாழ்ந்த நீங்க... உங்க வருத்தத்தையும், வேதனையையும் மறைச்சு நடமாடறீங்களா... புரியலைப்பா...'' என, கண்ணீருடன் அப்பாவைப் பார்த்தான்.
''நீ என்ன கேட்கிறேன்னு புரியுதுப்பா. நிஜம் தான். உன் அம்மாவும், நானும் ஒருவரையொருவர் சார்ந்து தான் இத்தனை வருஷம் வாழ்ந்தோம். அவள் இல்லாத ஒருநாளை கூட என்னால் சமாளிக்க முடியாது உண்மை தான். அது ஒரு பொற்காலம்.
''ஜானு ஜானுன்னு நான் அவளைச் சுற்றி வர, ஒரு குழந்தை போல என் தேவைகளை கவனித்தவள் தான் உன் அம்மா. அதை எந்தக் காலத்திலும் என்னால் மறுக்க முடியாது. ஆனால், விதி எங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைச்சுடுச்சு.
''இதை விட்டு ஓட முடியாது; விலக முடியாது. அதனால், மனச மாத்திக்கிட்டு, ஏத்துக்க முடியும். அதைத்தான் நான் இப்ப செய்யறேன். எனக்காக வாழ்ந்த என் ஜானு... இப்ப என் உதவியோடு எஞ்சியிருக்கிற காலத்தைக் கடக்கப் போறா...
''அவள் நினைவு இழந்திருந்தாலும்... என் ஜானுவை எனக்குத் தெரியும்... உணர்விழந்து படுத்திருக்கும் ஜானுவை என்னால் முடிந்த அளவு நல்லபடியாகப் பார்த்துக்க முடியும். நான் பேசறது, செய்யறது எதுவுமே அவளுக்கு உணர்ந்து கொள்ள முடியாதுன்னு தெரியும்.
''இருந்தாலும், எனக்குள் அவளோடு பேசுவது, அவளருகில் உட்கார்ந்து சாப்பிடுவது, இதில் ஒரு ஆத்ம திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குதுப்பா... என் வாழ்க்கையின் சந்தோஷங்களை எப்படி ஏத்துக்கிட்டேனோ... அதேபோல, விதியின் இந்த செயலையும் ஏத்துக்கிட்டேன்.
''தைரியமாக இதை என்னால் எதிர்கொள்ள முடியும்ன்னு, நம்பிக்கையோடு வாழ ஆரம்பிச்சுட்டேன். எங்க இரண்டு பேரோட ஆசி, என்னைக்கும் உனக்கு இருக்கும்,'' என, கண்கள் பளபளக்க சொல்லும் அப்பாவை, அணைத்துக் கொண்டான், ஜோதிராம்.
பரிமளா ராஜேந்திரன்