முனைவர் எஸ்.சந்திரா எழுதிய, 'அறிஞர்கள் வாழ்வில்...' நுாலிலிருந்து:
அமெரிக்க தொழிலதிபரான, ஜான் டி.ராக்பெல்லர், மன அழுத்தம், கவலை, பயம் யாவும் ஒன்று சேர்ந்து, கடுமையாக உடல்நிலை பாதித்திருந்தார். ஒருநாள், சிகாகோ நகரில் தொழிலதிபர் ஒருவரது இல்லத்தில் தங்கியிருந்த சுவாமி விவேகானந்தரை முதல் முறையாக சந்தித்தார், ராக்பெல்லர்.
'உங்கள் கவலைகளையும், பயத்தையும் விட்டுத் தொலையுங்கள். கடவுள் உங்களுக்கு தந்துள்ள பெருஞ் செல்வத்தை மற்றவர்களுக்கு அளிக்கப் பழகுங்கள்...' என்றார், விவேகானந்தர்.
இதைக் கேட்ட செல்வந்தருக்கு கோபம் வந்தது.
'எனக்கு அறிவுரை சொல்ல, இந்த சாமியார் யார்?' என நினைத்து, வேகமாக வெளியேறினார்.
ஆனால், அந்த சந்திப்பு ராக்பெல்லரிடம் அசாதாரணமான மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதுவரை, தன்னைப் பற்றி மட்டுமே நினைத்து வாழ்ந்திருந்தவர், மற்றவர்களைப் பற்றியும் நினைக்க ஆரம்பித்தார்.
ஏழைகளுக்கு வாரி வழங்கினார். பணம் இல்லாமல் தவித்த சிறு கல்லுாரி ஒன்றை, தன் கொடையால் உலகப் புகழ்பெற்ற, 'சிகாகோ பல்கலைக் கழகமாக' உருவாக்கினார்.
மீண்டும், விவேகானந்தரை சந்தித்து, தன் கொடைகளை பற்றி கூறிவிட்டு, 'என்ன, திருப்தி தானே... இப்போது, எனக்கு நீங்கள் நன்றி சொல்லலாம்...' என்றார், ராக்பெல்லர்.
உடனே, 'நன்றி சொல்ல வேண்டியது நானல்ல, நீங்கள் தான்...' என்றார், விவேகானந்தர்.
முதலில் அவர் சொன்னதைக் கேட்டு கோபம் வந்தாலும், பின், நிதானமாக யோசித்தபோது தான் அதிலிருந்த உண்மை புரிந்தது.
ஆம், மோசமான தொழிலதிபர் என்ற நிலையிலிருந்து, கருணையுள்ள பரோபகாரி என்ற நிலைக்கு மாறிய, ராக்பெல்லருக்கு கிடைத்தது, மன அமைதி, ஆனந்தம், உடல் ஆரோக்கியம்.
அதற்கு, அவர் நன்றி சொல்ல வேண்டியது தான்.
தமிமிழக முதல்வராக இருந்த, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், ஒருமுறை, திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் வேலை நிமித்தமாக தங்கி விட்டு, சென்னைக்கு திரும்பினார்.
மறுநாள் காலையில், கார் டிரைவர், ஒரு பலாப் பழத்தை நறுக்கிக் கொண்டிருப்பதை பார்த்து, 'அது ஏது?' என, விசாரித்தார்.
திண்டிவனம் விருந்தினர் மாளிகைத் தோட்டத்திலிருந்து பறித்து வந்ததாக கூறினார், டிரைவர்.
அதைக் கேட்ட முதல்வர், இரண்டு ரூபாயை எடுத்துக் கொடுத்து, (அந்நாளில், சென்னையிலிருந்து திண்டிவனம் போய் வர, பஸ் சார்ஜ் இரண்டு ரூபாய் தான்) 'உடனே திண்டிவனம் போய் அதைக் கொடுத்து விட்டு வா. அதோடு, உன் சம்பளத்தில், இரண்டு ரூபாய் பிடித்தம் செய்யப்படும்...' என்று கூறினார்.
அதைக் கேட்ட டிரைவர், 'அந்த பலாப் பழத்தின் விலையே, ஒரு ரூபாய் தான். அதைக் கொடுக்க, இரண்டு ரூபாய் செலவு செய்ய வேண்டுமா...' என்றார்.
'இது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கான அபராதம்...' என்றார், ஓமந்துார் ராமசாமி ரெட்டியார்.
- நடுத்தெரு நாராயணன்