பயன்படாத கோபத்தையும்
பாழாய்ப் போன பொறாமையையும்
பாக்கெட்டுக்குள் வைத்து அவ்வப்போது
பாம்பாய் படமெடுத்துக் கொள்கிறேன்!
பக்கத்து வீட்டு சட்டிப்பூ
பூத்துக் குலுங்கினால்
பூரித்திருக்கும் என் முகம்
கொஞ்சம் பொசுங்கிக் கொள்கிறது!
செல்லமாய் சேர்ந்து செல்லும்
சொந்த பந்தங்களைக் கண்டால்
சிரித்திருக்கும் என் முகம்
சிறுக சிணுங்கிக் கொள்கிறது!
பதக்கப் பரிசு பிடித்து
படியேறுபவனைக் கண்டால்
பழம் சுவைத்த என் பற்கள்
பல கற்களை கடித்துக் கொள்கிறது!
புகழ் மாலை சூடி
புறப்பட்டவனைக் கண்டால்
வாழ்த்த வந்த என் வார்த்தைகள்
வசை மொழிகளை வாரி குவிக்கிறது!
தொடர் வெற்றி துாக்கி
தோள் தட்டுபவனைக் கண்டால்
இதமாய் இருந்த என் இதயம்
எரிமலையாய் கொதித்துக் கொள்கிறது!
வேண்டாத பொருட்களை
விலை கொடுத்து வாங்க
வீதி வீதியாய் அலையும் நாம்
இலவசமாய் கிடைக்கும்
இயற்கை சிரிப்பை இதயங்களோடு
ஏன் பகிர்ந்து கொள்ளக் கூடாது?
வாருங்கள்
பொன் நகைகளை புதைத்து வைப்போம்
புன்னகைகளை விதைத்து வைப்போம்
புண்ணான நெஞ்சங்களில்
பொன்னான பூஞ்சிரிப்புகளை
எந்நாளும் ஏற்றி வைத்து
திருநாளாய் தினமும் சிரித்திருப்போம்!
— க. நிலவழகன், எர்ணாகுளம், கொச்சி.