முந்தானை முடிச்சு இரண்டாம் பாகம்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன், கே.பாக்யராஜ் இயக்கி, நடித்த படம், முந்தானை முடிச்சு. இந்த படத்தில் தான் நாயகியாக அறிமுகமானார், ஊர்வசி. தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சுந்தரபாண்டியன் என்ற படத்தை இயக்கிய, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், இந்த படத்தில், சசிகுமார்,- ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஜோடி சேர்கின்றனர்.
முந்தானை முடிச்சு என்று சொல்லிவிட்டு, கே.பாக்யராஜ் இல்லை என்றால், முருங்கைக்காய் வாசனை வீசாது என்பதால், இந்த படத்தில், அவரையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கின்றனர்.
அதோடு, முந்தானை முடிச்சு முதல் பாகத்தின், சில காட்சிகளையும் இந்த படத்தில் இணைத்து, ஒரு வித்தியாசமான முருங்கைக்காய் சமாசாரமாக, கே.பாக்யராஜின் கேரக்டர் உருவாக்கப்பட உள்ளது.
— சினிமா பொன்னையா
விட்டதைப் பிடித்த, பிரியா ஆனந்த்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த, துப்பாக்கி படத்தில், முதலில் நாயகியாக நடிக்க இருந்தவர், பிரியா ஆனந்த். ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில சலசலப்பு காரணமாக, அந்த படத்துக்குள், காஜல் அகர்வால் புகுந்து விட்டார். இதனால், பெருத்த ஏமாற்றத்துடன் அந்த படத்தில் இருந்து வெளியேறினார், பிரியா ஆனந்த்.
இருப்பினும், அவருக்கு, 11 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும், விஜய் நடிக்கும், 67வது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால், மிகுந்த உற்சாகமடைந்துள்ள, பிரியா ஆனந்த், 'துப்பாக்கி படத்தில் விட்டதை, இப்போது பிடித்து விட்டேன். விடாமுயற்சி தான் இதற்கு காரணம்...' என்று, 'சொடக்' போடுகிறார்.
— எலீசா
அதிர்ச்சி கொடுத்த, சாய் பல்லவி!
'முன்னணி நடிகரின் பட வாய்ப்பு என்றாலும், எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன்...' என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறார், சாய் பல்லவி.
இந்நிலையில், அஜித்தின், துணிவு படத்தில், மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் நடிப்பதற்கு, முதலில், சாய் பல்லவியைதான் அணுகினர். ஆனால், அஜித் பட வாய்ப்பு என்ற போதும், அந்த கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் இல்லை என்பதால், அதிரடியாக மறுத்தார்.
தற்போது, விஜயின், லியோ படத்திலும் அவருடன் நடிக்க வைக்க திட்டமிட்டார், லோகேஷ் கனகராஜ். ஆனால், அந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே, விஜயின் மனைவி வேடம் என்பதால், அதற்கும் மறுத்து விட்டார், சாய்பல்லவி. அதன் பிறகு தான், அந்த வேடத்தில் நடிக்க, ஒப்பந்தமானார், த்ரிஷா.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தளபதி நடிகருடன், நான்கெழுத்து படத்தில் நடித்து, பிரபலமான அந்த கேரளத்து அம்மணி, அதன்பின், தன்னை ஒட்டுமொத்த கோலிவுட்டே தலையில் துாக்கி வைத்து கொண்டாடுவர் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவருடன் நடிப்பதற்கு எந்த, 'மெகா ஹீரோ'களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
இதையடுத்து, கோலிவுட்டை விட்டு ஒதுங்கியே இருந்தால் வேலைக்காகாது என்பதை புரிந்து கொண்ட, அம்மணி, தற்போது, கோடம்பாக்கத்தில் நடைபெறும் நள்ளிரவு, 'பார்ட்டி'களில் தலைகாட்ட துவங்கி இருக்கிறார்.
மேலும், அந்த 'பார்ட்டி'க்கு வந்திருக்கும், 'மெகா ஹீரோ'களுடன் நட்பு வளர்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், போதை தலைக்கேறியதும், குத்தாட்டமும் போடுகிறார். இதனால், சில மெகா நடிகர்களின் பார்வை, அம்மணியின் மேல் விழுந்திருப்பதோடு, கமர்ஷியல் படங்களில், குலுக்கல் நடிகையாக அவரை இறக்கி விடுவதற்கும், சிபாரிசுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
சினி துளிகள்!
* துணிவு படத்தின், 'மெகா ஹிட்'டுக்கு பிறகு, அஜித்குமாரின் படக்கூலி, 100 கோடியை தாண்டி விட்டது. அதோடு, இனிமேல் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழி படங்களாக எடுக்க திட்டமிட்டு, அதற்கேற்ற கதைகளை கேட்டு வருகிறார்.
* பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடித்து வரும், சந்திரமுகி- - 2 படத்தில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நாயகியாக நடிக்கும் நிலையில், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே போன்ற நடிகையரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
* விக்ரமுடன் நடித்து வரும், தங்கலான் படத்திற்கு பிறகு, இரண்டு, 'மெகா ஹீரோ'களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையில், இறங்கி இருக்கிறார், மாளவிகா மோகனன்.
அவ்ளோதான்!