தினமும், மூன்று லட்சம் முறை, பகவான் திரு நாமத்தைச் சொல்லி வந்தார், பக்தர் ஒருவர். நாளாக நாளாக, தெய்வ நாமம் உரு ஏறிக் கொண்டிருந்தது. மனம் போன போக்கெல்லாம் போய் கொண்டிருந்தவர்கள் மத்தியில், மனதைத் தன் வசப்படுத்தியவராக இருந்தார், அந்த பக்தர்.
பலரும் அவருடைய அடக்கத்தைப் பாராட்டினர். ஆனால் பக்தரோ, 'ப்ச், குரு அருள் இன்றேல் திருவருள் இல்லை என்பரே... அதன்படி நமக்கு ஒரு குரு தேவை...' என்று தீர்மானித்தார்.
கிருஷ்ண சைதன்யர் என்ற மகானிடம் போய், 'என்னைச் சீடனாக ஏற்று அருள் புரியுங்கள்...' என, வேண்டினார்.
சைதன்யரும் ஏற்றுக் கொண்டார். தீக்குச்சி ஒளியானது, தீப்பந்த வெளிச்சமாக மாறுவதைப் போல, பக்தரின் அடக்கம் மேலும் அதிகமானது. கூடவே பாராட்டுகளும், புகழும் அதிகமாயின.
பக்தரின் புகழும், அதன் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மரியாதையும், பணக்காரர் ஒருவருக்குப் பொறாமையைத் துாண்டியது.
அதன் காரணமாக, ஒரு திட்டம் தீட்டினார், பணக்காரர். விலைமாது ஒருவரை ஏற்பாடு செய்து, 'நீ போய், எப்படியாவது அவரை மயக்கு...' என்று, அனுப்பி வைத்தார், பணக்காரர்.
விலைமாது போனது, இரவு நேரம்.
இறைவன் திருநாமங்களை உச்சரித்தபடி, ஜபம் செய்து கொண்டிருந்தார், பக்தர்.
அவர் மனதைக் கலைக்க, என்னவெல்லாமோ செய்து பார்த்தார், விலைமாது. எதுவும் பலிக்கவில்லை. நாம ஜபத்திலேயே இருந்தார், பக்தர். பொழுது விடிந்து விட்டது.
விலைமாதைப் பார்த்த பக்தர், 'அம்மா... நாம ஜபத்திலேயே ஈடுபட்டிருந்ததால், உன்னைக் கவனிக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடு...' என்றார்.
வீடு திரும்பினார், விலைமாது. அன்றிரவு மறுபடியும் திரும்பி வந்து, தன் முயற்சியைத் தொடர்ந்தார்.
பக்தர், அன்றும் தீவிர ஜபத்தில் இருந்ததால், முந்தைய நாளைப் போலவே தோற்றுத் திரும்பினார். இப்படியே ஐந்து நாட்கள் ஆகின.
மனம் மாறி, 'இப்படிப்பட்ட உத்தமரைக் கெடுக்க நினைத்தேனே. இவர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்...' என்று தீர்மானித்தாள்.
ஆறாவது நாள் காலையில், பக்தரின் கால்களில் விழுந்து வணங்கி, 'சுவாமி, என் பிறவியும் கடைத்தேற, எனக்கும் உபதேசம் செய்யுங்கள்...' என வேண்டினார், விலைமாது.
மன அடக்கம் கொண்ட பக்தரும், அந்த விலைமாதுவுக்கு, உபதேசம் செய்தார்.
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சீடரான அந்தப்பக்தரின் பெயர்,- பக்த ஹரிதாஸ். நாம ஜபத்தின் மகிமையை விளக்கும் நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
சனீஸ்வரர் தவிர பிற தெய்வத்திற்கு கருப்பு நிற வேஷ்டி, புடவை சாத்தக் கூடாது.