தேர்வுக்கு தயாராகிறீர்களா? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
தேர்வுக்கு தயாராகிறீர்களா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 மார்
2023
08:00

தேர்வை சிறப்பாக எழுத, இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை படித்துதான் பாருங்களேன்...

சித்திரம் வரைய எப்படி சுவர் அவசியமோ, அதுபோல, படிப்பதற்கு கண்கள் அவசியம்.

தேர்வு சமயங்களில், துாக்கம் குறைவாகவும், விழிப்பு அதிகமாகவும் இருப்பதால், அச்சமயங்களில் கண்கள் சோர்வடையும். எனவே, கைக் குட்டையை தண்ணீரில் நனைத்து, அவ்வப்போது கண்களில் ஒற்றி எடுக்கலாம், கண்களை சுத்தமான நீரில் கழுவலாம்.

வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த மற்றும் குளிர்ச்சி தரக்கூடிய காய்களை மெல்லிய துண்டுகளாக நறுக்கி, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கலாம்.

இவை தவிர, எண்ணெய் குளியல் செய்யலாம்.

காற்றோட்ட வசதியுள்ள தனி அறையில், முதுகுப்புறம், 90 டிகிரி செங்குத்தாக இருக்கும் நிலையில் நிமிர்ந்து உட்கார்ந்து, படிக்கப் பழக வேண்டும். தனி அறை இல்லாவிட்டால், நன்கு காற்றோட்டமுள்ள வீட்டின் மொட்டை மாடி, மரங்கள் நிறைந்த வீட்டின் பின்புறம் என, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

பொதுவாக, படிப்பதற்கு காலை நேரம் ஏற்றதாக இருக்கும்.

ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்த பின், அந்த பாடம் சார்ந்த முக்கிய குறிப்புகளை, தனி நோட்டில் நினைவுக் குறிப்புகளாக எழுதிக் கொள்ளுங்கள். அந்த குறிப்புகளை எப்போது பார்த்தாலும், நீங்கள் படித்த அந்த பாடம் சார்ந்த அனைத்து தகவல்களும் நினைவுக்கு வரும்படியாக அமைந்திருப்பது அவசியம்.

இதுதவிர, நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது, அதாவது, 'குரூப் ஸ்டடி' செய்வதும் நினைவுப்படுத்தி பார்த்தலுக்கு உதவும்.

தேர்வுக்கு தயாராகும் மாதங்களில், ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் மற்றும் சாதம் போன்ற மிதமான வேக வைத்த உணவுகளை சாப்பிடலாம். இதனால், உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகமாக கிடைப்பதோடு, செரிமானத்திற்கு குறைவான ஆற்றலே செலவிடப்படும்.

முளை கட்டிய தானிய வகைகள், பழங்கள், வெள்ளரி, கேரட் போன்றவைகளை சாப்பிடலாம். பேரீச்சம்பழம், தேன் ஆகியவை உடலுக்கு தேவையான கூடுதல் ஆற்றல்களை தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதிக நேரம் விழித்து படிக்கும் சமயங்களில் உடல் சூடாகும். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், மோர், பழச்சாறு ஆகியவைகளை பருகலாம்.

பலரும் நினைப்பதைப் போல, மலையை புரட்டிப் போடும் அளவுக்கு கடினமான செயலை போன்றது அல்ல, தேர்வு. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக படித்து, மூளையில் பதிவு செய்து பாதுகாத்து வைத்துள்ள பாடங்களை, மீண்டும் குறுகிய சில நாட்களுக்குள் நினைவுபடுத்திப் பார்ப்பது மட்டுமே. இதை சிறப்பாக செய்தாலே போதும், எந்தத் தேர்வையும் துணிவுடன் எதிர்கொள்ள முடியும்.

தேர்வுக்கு தயாராவது எப்படி?

முதலில், ஒரு அட்டவணையை தயார் செய்து கொள்ள வேண்டும்.

* நாம் படிக்க வேண்டிய பாடங்கள்

* அவைகளை படித்து முடிக்க வேண்டிய நாட்கள்

* திருப்புதல் செய்து பார்க்க வேண்டிய நாட்கள்

இவற்றை உள்ளடக்கியதாக அட்டவணை இருக்க வேண்டும்.

பாடங்களை படிக்கும்போது, கடிகார முள்ளை பார்க்கவோ, படிக்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தவோ முயல வேண்டாம். அதனால், உண்டாகக் கூடிய பதற்றம், படிப்பதை வேகப்படுத்தி, புரிதலைக் குறைத்து விடும்.

முந்தைய ஆண்டு கேள்வித் தாள்கள், துணை நுால்களிலிருந்து தயார் செய்த கேள்வித் தாள்கள் என, தனித்தனியாக பிரித்து எழுதி, அவைகளுக்கு விடை காண முயல்வது, தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளவும், எழுதவும் உதவும்.

திருப்புதலுக்கென ஒதுக்கியுள்ள நாட்களில், அறிவியல் சார்ந்த பாடங்களுக்குரிய படங்கள், கணித பாடங்களுக்குரிய சூத்திரங்கள், கிராப் மற்றும் மேப் ஆகியவைகளை தெளிவாக வரைந்து பழக, கூடுதல் நேரங்களை ஒதுக்கிக் கொள்ளலாம்.

தேர்வுக்கு முந்தைய நாளில், நாளைய தேர்விற்கான பேனா, பென்சில், ரப்பர், கலர் பேனா, தண்ணீர் பாட்டில், கடிகாரம், படங்கள் வரைவதற்குரிய பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வு அறை அனுமதிக்கான நுழைவு சீட்டை எடுத்துச் செல்ல மறந்து விடக் கூடாது.

தேர்வு நாளன்று காலையில், புதிதாக எதையும் படிக்க வேண்டாம். அதனால், எந்த பலனுமில்லை. முதல் நாள் இரவு வரை தேர்வுக்காக படித்த பாடங்களை, அதற்குரிய குறிப்புகளை நினைவுபடுத்தி பார்த்தாலே போதும்.

கடைசி நேரத்தில், அவசர அவசரமாக கிளம்பாமல், தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன் செல்வது, கடைசி நேர பதற்றத்தைக் குறைக்கும்.

தேர்வறைக்குள் நுழைவதற்கு முன், மற்ற மாணவர்களுடன் பாடங்களை பற்றி விவாதிப்பதிலோ, மற்றவர்கள் என்ன படித்துள்ளனர் என்பதை அறிந்து கொள்வதிலோ... அந்தக் கேள்வி வருமா, இந்த கேள்வி வருமா என, பிறரிடம் கேட்பதிலோ ஆர்வம் காட்டாதீர்கள்.

தேர்வறைக்குள் சென்று அமர்ந்ததும், மேஜையில் ஏதாவது எழுதப்பட்டுள்ளதா, பேப்பர்கள் அல்லது துண்டு சீட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை, முதலில் பார்க்க வேண்டும்.

அப்படி ஏதாவது இருந்தால், தேர்வறையில் உள்ள மேற்பார்வையாளரின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டும். இல்லையெனில், யாரோ செய்த தவறுக்கு, நாம் பலியாக வேண்டியிருக்கும். அதேபோல், நம் நடவடிக்கைகளும், மேற்பார்வையாளருக்கு சந்தேகத்தை உருவாக்கி விடாதபடி இருப்பது அவசியம்.

தேர்வுக்காக கொண்டு சென்றிருக்கும் பொருட்களை மேஜை மீது ஒழுங்குபடுத்தி வைத்தபின், இறுக்கமின்றி தளர்வான நிலையில் அமர்ந்து, மூளையை துாண்டுவதற்காக சுவாச பயிற்சியை இரண்டொரு முறை செய்யலாம். இதனால், மூளை விழிப்பு நிலைக்கு வந்து விடும்.

விடைகளை எழுதுவதற்கான விடைத்தாளில் மார்ஜினை மடித்து அல்லது பென்சிலால் கோடிட்டு கொள்ளலாம். மார்ஜின் இல்லாத விடைத்தாளை பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை.

விடைத்தாளில் உங்களுக்குரிய பதிவு எண்ணை தெளிவாகவும், தவறின்றியும் குறித்துக் கொள்ளவும்.

கேள்வித்தாள் கைக்கு வந்தவுடன் அந்த கணமே எழுத ஆரம்பிக்காமல், முதலில் கேள்விகளை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். கேள்விகளை தேர்ந்தெடுத்தல், தேர்ந்தெடுத்த கேள்விகளுக்கு எந்த வகையில் விடையளிப்பது என திட்டமிடுதல், ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல் என, முடிவு செய்யவும்.

கேள்வி எண்ணை மட்டும் தெளிவாக விடைத்தாளில் குறிப்பிட்டால் போதுமானது. கேள்வி எண்ணை குறிப்பிடும்போது, மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். இதில் நிகழும் தவறு, மதிப்பெண்களின் சதவிகிதத்தையே குறைத்து விடும்.

கேட்கப்பட்டதற்கும் அதிகமான கேள்விகளுக்கு விடை எழுதுவதையும், ஒரே கேள்விக்கான விடையை இரண்டு இடங்களில் எழுதுவதையும் தவிர்க்கவும். திருத்துபவர் இதை கண்டுபிடித்தால், அவரால், உங்களை அந்த தேர்வில் தோல்வியடையச் செய்ய முடியும்.

குறிப்பிட்ட கேள்விக்கு நன்கு விடை தெரியும் என்பதற்காக, படித்த எல்லா விபரங்களையும் பக்கம் பக்கமாக எழுதி தள்ளக் கூடாது. இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கு, மிகச் சரியான பதிலை நான்கு வரியில் எழுதினாலே, முழு மதிப்பெண்ணும் கிடைத்து விடும்.

சில கேள்விகளுக்கு விடைகளை எழுதும்போது, தொடர்ச்சியாக நினைவில் வராவிட்டால், அந்த விடையை யோசித்துக் கொண்டிருப்பதிலேயே நேரத்தை செலவிட வேண்டாம். கடைசியில் யோசித்து எழுதிக்கொள்ள ஏதுவாக கொஞ்சம் இடைவெளி விட்டு, அடுத்த கேள்விக்கு போவதே புத்திசாலித்தனம்.

கேள்வித் தாளில் தவறுகள் இருக்க வாய்ப்புண்டு. அத்தகைய கேள்விகளுக்கு விடை எழுதாமல் விட்டு விடக்கூடாது. ஏனென்றால், தவறான அந்த கேள்விக்கு என்ன பதில் எழுதியிருந்தாலும், முழு மதிப்பெண்ணும் கிடைத்து விடும்.

ஒவ்வொரு கூடுதல் விடைத்தாளை எழுதப் பயன்படுத்தும்போது, அதன் பக்க எண்ணை குறித்துக்கொண்டால் கடைசியில் வரிசைப்படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.

'இன்னும், 10 நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது...' என, மேற்பார்வையாளர் சொல்லும்போதோ அல்லது அதற்கான மணி ஒலிக்கும்போதோ அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதி முடித்திருக்க வேண்டும்.

எனவே, கடைசி, 10 நிமிட நேரத்தை, எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்திருக்கிறோமா, கேள்வி எண்ணை சரியாக எழுதியுள்ளோமா, விடைத்தாளில் பக்க எண்ணை சரியாக குறித்துள்ளோமா...

விடை முடிந்ததற்கான அடையாள கோடுகளை ஒவ்வொரு விடையின் இறுதியிலும் போட்டுள்ளோமா என, கவனிக்க பயன்படுத்த வேண்டும். தவறுகள் ஏதுமில்லை என உறுதி செய்தபின், பக்க எண்ணின்படி விடைத்தாளை வரிசைப்படுத்தி அதன் மேல் முனையில் துளையிட்டு நுாலால் முடிச்சிட்டு கொடுத்த பின், அறையை விட்டு வெளியேறுங்கள்.

ஒரு தேர்வு முடிந்ததுமே, அந்த பாடம் சார்ந்த எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, அடுத்த தேர்விற்கான பாடத்தை படிக்க ஆரம்பியுங்கள்.

அறிவியல் பாடங்களை பொறுத்தவரை செய்முறை தேர்வும், அதன் மூலம் கிடைக்கும் மதிப்பெண்களும் முக்கியம்.

எழுத்துத் தேர்வுக்கு எப்படி தயாராகி வருகிறோமோ அப்படித்தான் செய்முறை தேர்வுக்கும் தேவையான பொருட்களோடு வரவேண்டும். பயிற்சிக்கூடத்தில், இரவல் வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும்.

செய்முறை தேர்வுக்கும், எழுத்துத் தேர்வைப் போல, கடைசி நிமிட சரிபார்த்தல் அவசியம்.

செய்முறை தேர்வில், நாம் எழுதுகிற ஒவ்வொரு அளவீடும், குறிக்கிற ஒவ்வொரு பாகமும் மதிப்பெண்களாக மாறக்கூடியவை.

தேர்வுக்கு பிந்தைய விடுமுறை நாட்களில், தேர்வு முடிவுகள் பற்றிய எந்த கவலையும் தேவையற்றது, அர்த்தமற்றது.

ஒருவேளை, எதிர்பார்த்த முடிவுகளோ, மதிப்பெண்களோ வராவிட்டால், மீண்டும் மறு மதிப்பீட்டிற்கு கொண்டு செல்ல முடியும்.

வாழ்க்கையை எதிர்கொள்ள தேவையான தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தோல்வி கண்டு துவளாமை, மன உறுதி ஆகியவைகளை பெற தயாராக வேண்டும். அதற்காக நுாலகங்களுக்கு சென்று, பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை வாசிக்கலாம்.

'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்...'

தேர்வில் வெற்றி பெற, வாழ்த்துக்கள்!
எஸ். ஆதி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X