அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 35 வயது பெண். எம்.பி.ஏ., படித்து முடித்ததும், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது.
வாழ்க்கை சந்தோஷமாக சென்ற வேளையில், எனக்கு மேலதிகாரியாக இருந்தவர் மீது காதல் வயப்பட்டேன். அவரது கம்பீரமான தோற்றம், பெண்களிடம் பழகும் கண்ணியம், உயர் பதவியில் இருந்தாலும், எளிமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன். அவருக்கும் என்னைப் பிடித்திருந்தது.
எனக்கு அம்மா இல்லை, அப்பா மட்டுமே. அவரிடம் விஷயத்தைக் கூறினேன்.
பொருளாதாரம், ஜாதி என, பல ஏற்றத் தாழ்வுகளை சுட்டிக்காட்டி, இத்திருமணம் ஒத்து வராது என்று தட்டிக் கழித்தார், அப்பா. ஆனாலும், காதலரின் அம்மா, பலமுறை என் அப்பாவுடன் பேச்சு நடத்தி, எங்கள் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார்.
திருமணத்துக்கு பின், மாமியாரின் குணம் தலைகீழானது. என் சுய மரியாதையை குலைப்பதாக இருந்தது, மாமியாரின் செயல்கள்.
தாய்க்கும், தாரத்துக்கும் இடையே அல்லாடிய கணவருக்காக, அனுசரித்து வாழ முடிவு செய்தேன். ஆனாலும், நாளுக்கொரு பிரச்னையை உருவாக்கி, என்னை சீண்டுவது குறைந்தபாடில்லை. கணவராலும் ஏதும் செய்ய முடியாத நிலை.
இச்சமயத்தில், நான் கர்ப்பமானேன். மனநிலை மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி, அப்பா வீட்டுக்கு வந்து விட்டேன். நடந்ததை நினைத்து, இனி, கணவர் வீட்டுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்து, அவரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து, விவாகரத்து பெற்றேன்.
ஒரு மகன் பிறந்து, அவனுக்கு இப்போது ஐந்து வயதாகிறது. மகனுக்கு வேண்டியதை, நானும், கணவரும் சேர்ந்தே செய்து வருகிறோம்.
இன்று வரை இருவரும், அவரவர் வீட்டில் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.
என்னதான் சுதந்திரமாக, சுயமரியாதையுடன் வாழ்ந்து வந்தாலும், இன்று வரை என் மீதான அன்பும், அக்கறையும் குறையாத கணவரின் குணத்தை உணர்ந்து, அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் தலை துாக்குவதை தவிர்க்க முடியவில்லை.
மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறது, மனம். மாமியாரை நினைத்தால், அந்த வாழ்க்கைக்கு மீண்டும் போகக் கூடாது என்றும் நினைக்கிறேன்.
என் மீதும், பேரன் மீதும், பாசத்தை பொழிகிறார், அப்பா. ஆனாலும், கணவரது அன்புக்கு ஏங்குகிறது மனம். நான் என்ன செய்யட்டும், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
உங்கள் காதலை திருமணத்திற்கு கொண்டு சென்றது, மாமியார் தான். மாமியார் மீது நன்றி உணர்வு கொண்டிருந்தால், அவரை பகைமை பாராட்டி இருந்திருக்க மாட்டாய்.
உலகில் 400 கோடி பெண்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும், தலை மீது ஏறி நசுக்கும் புல்டோசராய் ஆயிரம் பிரச்னைகள்.
நீயோ விரும்பிய மட்டும் படித்திருக்கிறாய். சொந்த காலில் நின்று வேலையும் பார்க்கிறாய். 10க்கு ஐந்து, பழுதில்லா முன்னாள் கணவர்; அழகிய குழந்தை.
உனக்கு அம்மா இல்லை. மாமியாரை அம்மாவாக பாவிக்க வேண்டியது தானே. மாமியாருடன் ஆன உரையாடலில் சுயமரியாதை எங்கே வந்து நின்றது?
மாமியார் எதாவது பேசினால் மவுனமாக இருந்து, அவர் நல்லமூடில் இருக்கும் போது, உன் தரப்பை சொல்லியிருக்கலாம். இப்போது நீ, விவாகரத்து பெற்ற கணவரை மீண்டும் மணம் செய்து கொள்ள விரும்புகிறாய். முன்னாள் கணவரை மணந்து கொள்வதை அனுமதிக்கிறது, ஹிந்து திருமண சட்டம்.
உன்னை விட, வயது மூத்த வயோதிகப் பெண்ணிடம் ஒத்து போகாத நீ, முதுகலை மேலாண்மை நிர்வாகம் எப்படி படித்தாய்? ஒரு படிப்பறிவில்லாத கிழவியை சகித்துக் கொள்ள முடியாத நீ, எப்படி பணி இடத்தில், உறவில், நட்பில், பொது இடங்களில் ஆயிரக்கணக்கான பெண்களை சகித்து வாழ்வாய்?
இந்த ஐந்து ஆண்டுகளில், மாமியாரும், தான் சிந்திய அமில வார்த்தைகளை பற்றி விசனப்பட்டு கொண்டிருப்பார். அவரை ஒரு கோவிலுக்கு வரச்சொல்.
'நான் உங்களை எதிர்த்து பேசிய வார்த்தைகளுக்கு என்னை மன்னித்து விடுங்கள்...' என மன்னிப்பு கேள். அவர் பக்குவமானவர் என்றால், அவரும் உன்னிடம் மன்னிப்பு கேட்பார்.
'அம்மா... நான் மீண்டும் உங்கள் மகனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அதற்காக நாம் ஒரு சமாதான திட்டத்தை செயல்படுத்துவோம். அத்துடன், குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை வடிவமைப்போம்.
'என்னை பற்றி நீங்கள் எதுவும் தவறாகவோ, உங்களை பற்றி நான் எதுவும் தவறாகவோ பேசி கொள்ள மாட்டோம் என, உத்தரவாதம் அளிப்போம். நீங்கள் வீட்டில் சுதந்திரமாக இருக்கலாம். 'டிவி' பார்க்கலாம் மாத செலவுக்கு தேவையான பணத்தை உங்கள் மகனிடம் வாங்கிக் கொள்ளலாம்.
'நீங்கள் எங்கேயும் வெளியே போய் வரலாம். உங்கள் ஆசிர்வாதத்துடன் உங்களது மகனை மீண்டும் மணந்து கொள்ள விரும்புகிறேன். பேரனுக்கு திருமணம் செய்து, கொள்ளுப் பேரனையும் நீங்கள் பார்க்க வேண்டும்...' எனக்கூறி, மாமியார் காலில் விழு.
உருகி விடுவார், மாமியார். இம்முறை நடக்கும் உன் திருமணம், நுாற்றாண்டு காலம் நீடித்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.