நா காக்க!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2023
08:00

''வெரி சாரி சார், நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம்; மனசை திடப்படுத்திக்கங்க, உங்க மகள், செல்வியோட பிரச்னை என்னன்னு கண்டுபிடிக்க முடியல. இனிமே அவங்கள பேச வைக்க முடியாது. நாங்க, 'டிஸ்சார்ஜ்' பண்ணிடறோம்.

''உங்க அரசியல் சப்போர்ட்டை வைச்சு எங்கேயாவது வெளிநாட்டுக்கு அழைச்சுட்டுப் போய் முயற்சி பண்ணுங்க,'' என்று, அதிர்ச்சி செய்தியை நாவிற்கினியோனிடம் கூறினாள், டாக்டர் மாலதி.

டாக்டர் கூறியதை கேட்டு, இடி இறங்கியது போல் ஸ்தம்பித்து உட்கார்ந்து விட்டார், நாவிற்கினியோன்.

''ஐயோ, என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க... வேற ஒண்ணும் வழியே இல்லையா?'' என்று படபடத்தாள், அவரது மனைவி தனலட்சுமி.

''பெரிய, 'ஸ்பெஷலிஸ்ட்'டுகளை வைச்சும் பார்த்தாச்சும்மா, ஒண்ணும் பலனில்ல. எல்லாத்துக்கும் மேல தெய்வம்ன்னு ஒண்ணு இருக்கு. எனக்கு இதுக்கு மேல எதுவும் சொல்ல தெரியல,'' வருத்தத்துடன் கூறினாள், டாக்டர் மாலதி.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களே கைவிரித்து விட்ட நிலையில், செல்வியை, 'டிஸ்சார்ஜ்' செய்து, காரில் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

வீட்டிற்குள் கார் நுழைந்ததும், எதையோ சொல்ல முயற்சி செய்து, 'ப்... ப்... பே...' என்று, கையில் சைகை காட்டி, புரியவைக்க தவித்தாள், செல்வி. நாவிற்கினியோனின் அடக்கி வைத்த துக்கமெல்லாம் வெடித்து, அழுகையாய் கொட்டியது.

''ஐயோ, தேனாட்டம் பேசுவாளே... பாடினா கேட்டுகிட்டே இருக்கலாமே... இது என்ன கண்றாவி... எவனோ என் பொண்ணுக்கு இப்படி ஆவும்படி செஞ்சிருக்கான். மவனே, அவன் மட்டும் யார்னு தெரிஞ்சுது...'' என்று, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை கொட்டினார்.

இந்த நிலைமையிலும், நாவிற்கினியோனின் அவலமான பேச்சு, தனலட்சுமிக்கு கோபம் மற்றும் வருத்தத்தை தந்தது.

''கொஞ்சம் நிறுத்தறீங்களா, இப்பவும் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பிச்சுட்டீங்களே... இது நல்லாவா இருக்கு. உன் பொண்ணுக்கு, எவனும் எதுவும் பண்ணல. உன் வாயால, நீ எத்தினி பேரோட மனசை புண்படுத்தியிருப்ப...

''அந்த பாவமெல்லாம் சேர்ந்து தான் உன் பொண்ணு தலையில விடிஞ்சிருக்கு. இனிமேலும் திருந்தாம, இப்படியே பேசிட்டு திரியாதே,'' என, ஆவேசமாக, தனலட்சுமி கூறியதும், வாய் அடைத்து நின்றார், நாவிற்கினியோன்.

சட்ட படிப்பை முடித்து வெளிவந்த நாவிற்கினியோனை, அவரின் பேச்சு திறமைக்காக இழுத்துக் கொண்டது, அரசியல். உண்மைக்கு முற்றிலும் புறம்பாக இருந்தாலும், அதை நியாயப்படுத்தி, அநியாயமாக அடித்துப் பேசும் அவரது ஆற்றல், அரசியல் செய்வோருக்கு அவசியமாய் இருந்தது.

நாள் ஆக ஆக, இவர் பேச்சில் ஆபாசம், அபத்தம், அநாகரிகம் என, கலக்க துவங்கி, எக்கச்சக்க கைத்தட்டல் பெற்றது. நாளிதழ், ஊடகங்களில் பேசு பொருளாகி, அதே பாணியில் பேச, இவருக்கு உற்சாகமூட்டியது.

எதிரணியினரை கேவலப்படுத்தி, அவர்களது அந்தரங்கங்களை பகிரங்கமாக விமர்சித்து, நா கூசாமல் மேடையில் இவர் பேசுவார். இது, அப்போதைய பிரச்னையை எதிராளி, விவகாரம் செய்ய விடாமல் திசை திருப்பிவிடும்.

அரசியலுக்கு மிகவும் அவசியமான இந்த திறமை காரணமாக, இவரின் இந்த அவலமான பாணி, அனைத்து கட்சிகளுக்கும் அவ்வப்போது தேவையாய் இருந்தது.

இதனால், இவர் இதுவரை தாவாத கட்சிகள் எதுவுமில்லை என்ற நிலையில், எல்லா அரசியல் புள்ளிகளுமே, இவரின் அவதுாறான விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தனர்.

இவர் மீது அவதுாறு வழக்கு தொடர்வது, சாக்கடையில் கல் எறிவதற்கு சமம் என, எல்லாரும் ஒதுங்கினர். அதுவே, 'ஒருத்தனும் என்கிட்ட வாலாட்ட முடியாது' என்ற தெனாவட்டுடன், இவரை பேச விட்டிருந்தது.

நாவிற்கினியோனின் தரம்கெட்ட மேடை பேச்சுக்கு, விசிலும், கை தட்டலுமாக, ஒரு சாராரின் உற்சாக வரவேற்பு கிடைத்தது.

இருப்பினும், 'பாவி, இப்படி பேசி எத்தனை பேரோட மனசை புண்ணாக்கறானோ...' என்று, இந்த மேடை பேச்சுகள், 'யூ டியூப்' இத்யாதிகளில் பரபரப்பூட்டிக் கொண்டிருப்பதை பார்க்கும் போதெல்லாம் வேதனையுறுவாள், இவரது அம்மா.

'வேண்டான்டா, அவங்க சாபம் சும்மா விடாது...' என்று, அவரது அம்மா உபதேசிக்கும் போதெல்லாம், 'ஏய் கிழவி, சும்மா கிட. ஏன், நீயும் தான் சாபம் வுட்டு பாரேன் பலிக்குதா...'ன்னு என, அம்மாவையே, வன்மையான வார்த்தைகளால் சுடுவார்.

பொது இடங்களுக்கு தனியாக போகும் தனலட்சுமியின் காது படவே பலர், 'நாவிற்கினியோன்னு ஒரு நாசமா போனவன், நம் தலைவரை கேவலமா பேசுவானே... அவனோட சம்சாரம் போவுது பாரு...' என்பான், ஒருவன்.

'அப்போ இவளும் பெரிய பஜாரியா தான் இருப்பா...' என்று சொல்வான், மற்றவன்.

ஆனால், பாவம் தனலட்சுமியும், மகள் செல்வியும் வாய் திறந்து அதிர்ந்து பேசாதவர்கள்.

நாவிற்கினியோனின் மகள் என்று தெரிந்தவுடன், 'டீ, செல்வியோட அப்பாவை, நம் காலேஜ் கல்சுரலுக்கு கூப்பிட்டு பேச விட்டா எப்படி இருக்கும்...' என, சீண்டுவாள், ஒருத்தி.

'அப்புறம் கல்சுரல், 'கலீஜ்'சுரலாயிடுமே பரவாயில்லையா?' என கிண்டலடிப்பாள், இன்னொருத்தி.

இப்படி வெளியில் படும் அவமானங்களை மனைவியும், மகளும் எடுத்துச் சொல்லி, இவரை திருத்த முயற்சித்ததுண்டு.

'அடி போங்கடி... அப்படி பேசறவங்களை, நாக்கு பிடுங்கறா மாதிரி நாலு வார்த்தை கேட்டுட்டு வர துப்பில்லாம, இப்படி வந்து புலம்பறீங்களே...' என சொல்லி, அடக்கி விடுவார்.

அப்பாவிற்கு தப்பி பிறந்தவள் போல், மிகவும் அடக்கமும், நற்பண்புகளோடும் இருந்தாள், செல்வி. ஐ.டி.,யில் லட்சங்களாக சம்பாதித்துக் கொண்டிருந்தவளை, நேசித்தான், தயாளன். செல்வியின் குணநலன்களால் ஈர்க்கப்பட்டவனாய், தன் காதலை சொல்ல, இவளும் இசைந்தாள்.

காதல் கனிந்து, கல்யாணமென்ற கட்டத்திற்கு வந்தபோது தான், செல்வியின் குடும்பம் பற்றிய விபரங்களை கேட்டறிந்தான், தயாளன். நாவிற்கினியோனின் புதல்வி என்று அறிந்தவுடன் தயங்கினான்.

மிகவும் தங்கமான குணங்களுடைய செல்வியை ஒதுக்க முடியாமலும், அதே சமயம், தன் பெற்றோரை இந்த விஷயத்தில் சம்மதிக்க வைக்க இயலாமலும் தடுமாறினான், தயாளன்.

'டேய், அந்த ஆளோட பெண்ணா, வேண்டவே வேண்டாம்பா...' என்று, பெற்றோர் உறுதியாக மறுப்பதை, செல்வியிடம் கூறினான். இதனால், மனம் உடைந்த செல்வி, திடீரென்று நோய்வாய்ப் பட்டாள்.

நுாறு டிகிரி எகிறிய காய்ச்சல், ஒரு வாரமாகியும் தணியாததால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று. அங்கும் இரண்டு நாட்களுக்கு பின்,ஐ.சி.யூ.,வில் சேர்த்தும், உடல்நிலை மோசமானது. 15 நாட்களுக்கு பின், பொது வார்ட்டுக்கு வந்தபோது தான், செல்வி பேசுவதற்கு கஷ்டப்படுவதாக தோன்றியது.

உடல்நிலை பாதிக்கப்பட்ட சோர்வாக இருக்கும் என நினைத்தவர்களுக்கு, சைகை காட்டி பேச வரவில்லை என்று, இவர்களிடம் செல்வி உணர்த்திய போது, அதிர்ச்சியுற்றனர். அங்கேயே, 'ஸ்பெஷலிஸ்ட்'டுகளை வரவழைத்து பார்த்தும் பலனில்லை என்று கூறி விட்டாள், டாக்டர் மாலதி.

'டேய், பாவி... நீ செஞ்ச பாவம், உன் பொண்ணு மேல விடிஞ்சிருக்கு பாருடா...' என்று குத்திக் காட்டினாள், நாவிற்கினியோனின் அம்மா.

மகள் ஊமையாய் அவஸ்தைபடுவதையும், தனக்கு இப்படி நேர்ந்துவிட்டதை நினைத்து அடிக்கடி கண்ணீர் விட்டபடி சோகமாக உட்கார்ந்திருக்கும் செல்வியை பார்த்து, மனம் நொந்து போனார், நாவிற்கினியோன்.

இதற்கான மருத்துவ முயற்சிகளில் இறங்கிய போது தான், பல நிதர்சனங்களை அறிய முடிந்தது. ஆபாச, தரம் தாழ்ந்த பேச்சாளர் என்பதால், எல்லாரும் உதாசீனப்படுத்தினர். யாரும் இவரை கவுரவமாக பார்க்கவில்லை.

யாரும் உதவ முன் வராவிட்டாலும், 'இவனுக்கு நல்ல வேணும்யா... கொஞ்ச நஞ்ச பேச்சா பேசியிருப்பான்... நல்லா கிடந்து தவிக்கட்டும்...' என்ற ரீதியில், முதுகிற்கு பின் பலர் பேசுவது தெரிந்ததும், மிகவும் மனம் உடைந்து போனார், நாவிற்கினியோன்.

விரக்தியின் விளிம்பில், மழிக்கப்படாத ஒரு மாத தாடி, மீசையுமாக சோபாவில் உட்கார்ந்திருந்தவரிடம், எதையோ காட்ட வந்தாள், செல்வி.

''என்னம்மா சொல்லு...'' என்று, சன்னமான குரலில் கேட்க, தன் மொபைல்போனில் சிநேகிதி அனுப்பியிருந்த, 'வாட்ஸ் ஆப்' தகவலை காட்டினாள், செல்வி.

அதில், குமரகுருபர சுவாமிகள் பற்றிய, 'வீடியோ லிங்க்' இணைக்கப்பட்டிருந்தது.

குமரகுருபரர் ஐந்து வயது வரை, வாய் பேசா ஊமையாக இருக்க, தாங்க முடியாத வேதனையோடு பெற்றோர் தவித்தனர் என்றும், பின், கடும் விரதமிருந்து, திருச்செந்துார் முருகனிடம் வேண்டிக் கொள்ள, குழந்தைக்கு பேச்சு வந்ததென்றும்...

அதன்பின் அக்குழந்தை, கந்தனையும் கடவுளையுமே பாடி, உலகோருக்கு தன் நாவால் பயனளித்தார் என்றும், உபன்யாசர் ஒருவர் கூறுவதை, அந்த வீடியோ காட்டியது.

அதைப் பார்த்ததும், நாவிற்கினியோனுக்கு மனம் உறுத்த, ''ஏம்மா, திருச்செந்துாருக்கு போகலாம்ன்னு சொல்றியா?'' என்றார்.

இதையெல்லாம் பார்த்த நாவிற்கினியோனின் அம்மா, ''டேய், எதுக்குடா அத்தனை துாரம் போகணும்... நம் குல தெய்வம் கந்தமலைசாமி இருக்குடா... உங்க அப்பனும், நீயும், நாத்திகம் பேசியே குல தெய்வத்தை பல வருஷமா மறந்து தொலைச்சுட்டீங்க... நீ, நம்ப கந்தமலையான்கிட்ட என் பேத்தியை கூட்டிட்டு போ, எல்லாம் சரியாயிடும்,'' என்றாள்.

உடனே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார், நாவிற்கினியோன்.

விரதம் இருப்பது எப்படி என்ற விபரத்தை கூறி, அபிஷேக ஆராதனைக்கு ஏற்பாடு செய்து விடுவதாகவும், ஒரு குறிப்பிட்ட நாளில் வருமாறும் கூறினார், பூசாரி.

தைப்பூச திருநாளில், முருகன் சன்னதியில் நாவிற்கினியோனின் குடும்பம் உட்கார்ந்திருக்க, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வெறும் கல்லு, அதுக்கு பாலா என்று விதண்டாவாதம் செய்து கொண்டிருந்தவருக்கு, தெய்வீக மணம் கமழும் சூழல், இனம் புரியாத மனமாற்றத்தை தந்தது, இதமாக இருந்தது.

தன் மகளுக்காக, எதிரே காண்பது கல் அல்ல, கண் கண்ட தெய்வம் என்ற உணர்வோடு வேண்டினார். தீபாராதனை தட்டுடன் நெருங்கிய பூசாரி, இப்படியும் அப்படியும் ஆட ஆரம்பிக்க, அவரிடமிருந்து தீபாராதனை தட்டை வாங்கிக் கொண்டார், பூசாரியின் உதவியாளர்.

ஆடியபடியே ஆவேசமாக, ''நான் தான்டா, உன் குலதெய்வம் கந்தசாமி... உன் பொண்ணை பேச வைக்க வந்திருக்கேன்டா. பேச்சுன்றது ஒரு வரம்டா... நா இனிக்க பேசணும், நா காத்து பேசணும்...'' என்று சத்தமிட்டபடியே, தீபாராதனை தட்டிலிருந்து விபூதியை எடுத்து, செல்வியிடம், ''வாயை திற...'' என்று அதட்டி, நாக்கில் போட்டார், பூசாரி.

உடனே மயக்கமுற்றாள், செல்வி; பயபக்தியோடு நின்றார், நாவிற்கினியோன்.

பூசாரியும் சகஜ நிலைக்கு வந்து, திகைத்து நின்ற நாவிற்கினியோனிடம், ''பயப்படாதீங்க... முருகன் காப்பாத்துவார்...'' என்று ஆறுதல் கூறினார்.

அப்போது, ''அப்பா... முருகன் என்னை பேச வைச்சிட்டாருப்பா,'' என்ற கணீர் குரல், அவர் காதில் தேனாய் வந்து பாய்ந்தது.

மயக்கம் தெளிந்து எழுந்து, அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினாள், செல்வி.

''முருகா... முருகா...'' என்று, நாவிற்கினியோனும் கன்னத்தில் போட்டுக் கொண்டதை, அனைவரும் பார்த்து, வியந்தனர்.

இந்த அதிசய சம்பவம், நாவிற்கினியோனை, ஆன்மிகவாதி ஆக்கியதோடு, சிறந்த சமய சொற்பொழிவாளராகவும் மாற்றி இருந்தது. இனி, அவருடைய நா, நல்லதையே பேசி, செல்வியின் வாழ்க்கைக்கும் நல்லதே செய்யும்!

(பின் குறிப்பு:- உறுதியான தெய்வ நம்பிக்கையோடு படிப்பவருக்கெல்லாம் இதோடு இந்த கதை முடிந்து விட்டது. 'இப்படியெல்லாம் நடக்குமா?' என்ற, அரைகுறை நம்பிக்கையோடு படித்தவர்களுக்கு கதை தொடர்கிறது).

நாவிற்கினியோனின் சமய சொற்பொழிவை கேட்டுவிட்டு, தன் அம்மாவுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள், டாக்டர் மாலதி.

''ரொம்ப நல்லா சொல்றாருல்ல,'' என்றார், மாலதியின் அம்மா.

''இத்தனை ஜோரா பேசுவார்ன்னு நானும் எதிர்பார்க்கல. அம்மா, இவர் முன்பு எப்படி இருந்தார்ன்னு உனக்கு தெரியாது. அரசியல்ல ரொம்ப கீழ்தரமான பேச்சாளராக இருந்தவரா இப்படி மாறியிருக்கார்ன்னு தோணுது.

''இவரை இப்படி மாத்த, இவர் பொண்ணு ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கா. என்கிட்ட, 15 நாள், சிகிச்சைக்கு வந்தபோது, இவளோட காதலர் தயாளனும், இவளும் என்கிட்ட கெஞ்சி கேட்டதால, ஒரு நல்ல காரியத்துக்காக, 'செல்விக்கு பேச்சு வராது, 'ஸ்பெஷலிஸ்ட்'டெல்லாம் பார்த்து கைவிரிச்சுட்டாங்க'ன்னு ஒரு பொய் ரிப்போர்ட் கொடுத்து, டிஸ்சார்ஜ் செஞ்சேன்.

''அதுக்கப்புறம் அந்த பொண்ணு ரொம்பவும் கஷ்டப்பட்டு, ஒரு மாசத்துக்கு மேல ஊமையா நடிச்சு, 'வாட்ஸ் ஆப்' தகவல், பூசாரியின் சாமி ஆட்டம்ன்னு, ஒரு பெரிய நாடகத்தை காதலரின் உதவியோட நடத்தியிருக்கா...

''கல்யாண பத்திரிகையை கொடுக்க வந்த அந்த ஜோடி, இதை விபரமா சொன்னபோது, ஆச்சர்யமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. இத்தனை சிறப்பா பேசற ஒருத்தரை, நல் வழியில திருப்ப நானும் உதவியிருக்கேன்னு நினைச்சா, பெருமையா இருக்கு,'' என்று மனநிறைவோடு கூறியபடி, காரை ஓட்டினாள், டாக்டர் மாலதி.
அகிலா கார்த்திகேயன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
15-மார்ச்-202305:44:47 IST Report Abuse
Prasanna Krishnan To all DMK party 🐷.
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
13-மார்ச்-202304:33:01 IST Report Abuse
கதிரழகன், SSLC பின் குறிப்பு தேவையே இல்ல. நாத்திகனுங்க வாய்க்கு வந்தபடி கேவலமா எங்க சாமிய பத்தி பேசுறாக... ஆனா அவங்க மனசு புன்படாதிக்கு கதையா... கேவலமா இருக்கு, சாமி இருக்கு, சாமி அருள் கிடைக்கும். நம்புங்க. நம்பாட்டி இந்தமாதிரி வெத்து கதை எல்லாம் எழுதாதீய
Rate this:
Cancel
13-மார்ச்-202304:17:58 IST Report Abuse
 கிரிஜா         சென்னை நம்பிடலாம். இல்லாட்டி இன்னொரு பின் கதை வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X