கடந்த ஆண்டில், உலகளவில் அதிகம் விற்பனை ஆன 'டாப்-10' போன்களில், இரண்டு மட்டுமே 'ஆண்ட்ராய்டு' போன்கள்; மற்ற அனைத்தும் 'ஆப்பிள்' நிறுவனத்தின் 'ஐபோன்'களே என, ஆராய்ச்சி நிறுவனமான 'கவுன்டர் பாயின்ட்' தெரிவித்து உள்ளது.
உலகளவிலான விற்பனையில், 'சாம்சங்' நிறுவனத்தின் 'கேலக்ஸி ஏ03, கேலக்ஸி ஏ13' ஆகிய இரண்டு போன்கள் மட்டுமே டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மீதி அனைத்துமே ஐபோன்கள் தான். ஐபோன்களில் முதலிடத்தில் 'ஐபோன் 13' உள்ளது.
ஆப்பிள் நிறுவனம், ஓராண்டில் மிக சில மாடல்களை மட்டுமே அறிமுகம் செய்கிறது. எனவே வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புகள் குறைவு. இதனால், அடுத்த மாடல் ஐபோனுக்காக காத்திருந்து, அதை வாங்கிவிடுகின்றனர்.
ஆனால், ஆண்ட்ராய்டு சந்தையில் ஏகப்பட்ட போன்கள் அறிமுகம் ஆகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். மேலும், விரும்பும் பட்ஜெட்டில், கேமரா செட் அப்பில், பேட்டரி திறனில் என அவர்களுக்கு ஏற்ற வகையில் போன்கள் கிடைக்கின்றன.
இந்த போக்கு, ஐபோனுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இதனால், கடந்த ஆண்டில் டாப்-10 போன்களில், 8 போன்கள் ஐபோனாக அமைந்து விட்டன. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, முதலிடத்தில் ஐபோன் 13 இருந்தது. பின் அடுத்தடுத்த மாதங்களில், ஐபோன் 14 முதலிடத்தில் இருந்தது.
கடந்த 2022ல், உலகளவிலான சந்தையில், மொத்தம் 3,600 வகை ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்திருந்தன.
இருப்பினும், இது, அதற்கு முந்தைய ஆண்டை விட 14 சதவீதம் குறைவு தான். 2021ம் ஆண்டில், 4,200 வகை போன்கள் சந்தைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.