கொரோனா வைரஸ் பாதித்த சமயத்தில், 'அனோஸ்மியா' என்ற வார்த்தை, மருத்துவத் துறையில் அதிகம் பேசப்பட்டது. எந்த வாசனையும் தெரியாத நிலை இது.
கடந்த நான்கு ஆண்டுகளாக 2 ஆயிரத்து 690 பேரை ஆய்வு செய்ததில், இவர்களில், 20 சதவீதம் பேருக்கு வாசனையை நுகரும் திறன் இல்லாமல் இருந்தது. இவர்கள் யாருக்கும் சிகரெட் பழக்கம் கிடையாது. புகைப் பிடித்தால், நாளடைவில் வாசனை நுகரும் திறன் குறையும் என்பது தெரிந்த விஷயம்.
வேறு என்ன காரணம் இருக்கலாம் என்று ஆராய்ந்ததில், இவர்கள் வசிக்கும் இடத்தின் சுற்றுச்சூழலில் நுண்ணிய துகள்கள், காற்றில் அதிகமாக இருந்தது தெரிய வந்தது.
இதே போன்று வட இத்தாலி நாட்டில் செய்யப்பட்ட ஆய்விலும், வளர் இளம் பருவத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் வாசனை உணர்வை இழந்திருப்பதும், அங்கு சுற்றுச் சூழலில் கார், பைக் போன்ற வாகனங்களில் இருந்து வெளிப்படும் நைட்ரஜன் டை ஆக்சைடு வாயு அதிகம் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இது தவிர, பிரேசில் நாட்டில் செய்யப்பட்ட ஆய்வில், அதிக துாசு, மாசு நிறைந்த பகுதியில் வசிப்பவர்கள் நாளடைவில், வாசனையை நுகரும் திறனை இழப்பதும் உறுதி ஆகியுள்ளது.
எப்படி இது நடக்கிறது?
இரண்டு விதங்களில் இது சாத்தியம். ஒன்று, மூக்கின் உள்ளே செல்லும் மாசுக்கள், நுகர் உணர்வைத் தரும் நரம்பு செல்களின் வழியே நேரடியாக மூளைக்கு சென்று அங்கு அழற்சியை ஏற்படுத்தலாம். இன்னொருபுறம் மாசு, துாசுக்கள் தான் போக வேண்டும் என்பதில்லை. தினமும் மாசு நிறைந்த வாசனையை சுவாசித்தாலே, மூளையில் அவை அழற்சியை உண்டுபண்ணி, மூளை நரம்புகளை சிதைக்கலாம்.
இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும், வாசனையை நுகரும் தன்மையை இழப்பது என்பது மன அழுத்தம், மனப்பதற்றம், உடல் பருமன், எடை குறைவது, ஊட்டச்சத்து குறைபாடு, இவற்றுடன் நேரடி தொடர்பு உடையது.
வாசனையை நுகரும் தன்மையை இழந்தால், வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்களையும் இழக்க வேண்டியிருக்கும். நினைத்துப் பாருங்கள், சினிமா தியேட்டரில் பாப்கார்ன் வாசனை, மழை பெய்யும் போது மண்வாசனை, 'கேக், பிரட் பேக்கிங்' செய்யும் வாசனை இவையெல்லாம் தெரியாவிட்டால் எப்படி இருக்கும்?
டாக்டர் முருகப்பன் ராமநாதன்,
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் மெடிசின்,
அமெரிக்கா