தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
என் கணவரை நான் பிரிஞ்சு 10 வருஷமாகுது. 'ஜெராக்ஸ்' கடை வேலையில மாசம் 4,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். 'கவுரவமா வாழணும்'னு ஆசைப்படுற என்னை உங்க சமூக நலத்துறை அதிகாரிகளோட செயல்பாடுகள் ரொம்ப பலவீனமாக்குதுய்யா!
கடந்த 1997ம் ஆண்டு எனக்கு பெண் குழந்தை பிறந்தது; 2005ம் ஆண்டு அடுத்த பெண் குழந்தை. முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்துல, 2007ம் ஆண்டு இரண்டு பிறப்புகளையும் பதிவு பண்ணினேன். தலா 15 ஆயிரத்து 200 ரூபாய் வைப்புநிதியை அரசு ஒதுக்குச்சு!
இப்போ, 2015ம் ஆண்டு என் மூத்த மகளுக்கு 18 வயது பூர்த்தியானதும், வைப்புநிதியில இருந்து 10 சதவீத கூட்டு வட்டியோட சேர்த்து முதிர்வுத் தொகை கிடைச்சிருக்கணும்; ஆனா, இப்போ வரைக்கும் கிடைக்கலை! அந்த ரசீது எண்: சிஏஏ 9016345.
'அலுவலகத்துல ஏற்பட்ட தீ விபத்துல உங்க விண்ணப்பம் எரிஞ்சிருச்சு!' - இது, முதல்ல சொன்ன காரணம்; 'வரிசைப்படி தான் பலன் கிடைக்கும்!' - இது அடுத்தது; 'உங்க விண்ணப்பம் கணினியில பதிவு செய்யப்படலை!' - இது, நவம்பர் 2022ல்; வெறுத்துப் போச்சுய்யா!
'மனுக்கள் என்பது காகிதம் அல்ல; அது ஒரு மனிதனின் வாழ்க்கை!' - சமீபத்துல நீங்க சொன்னது ஞாபகம் இருக்குங்களா?
- மூத்த மகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைத் தொகைக்காக சமூக நலத்துறையுடன் போராடும் 48 வயது பாண்டீஸ்வரி, விருதுநகர்.