வன்முறை என்றாலே ரத்தம் தெறிக்க வேண்டும் என்பதல்ல; சக உயிரை பொருளாதார ரீதியில் முடக்குவதும், உடல் மற்றும் உளவியல் ரீதியாக காயப்படுத்துவதும் வன்முறைதான்! இப்படியான குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் பால் புதுமையினருக்கு, தன் பி.சி.வி.சி., அமைப்பின் மூலம் உதவிக் கரம் நீட்டுகிறார் சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த பிரசன்னா கெட்டு.
குடும்ப வன்முறைக்கு காரணமே ஆண்கள்தானா?
'குடும்ப தலைவன்'ங்கிற பொறுப்பு திறன் சம்பந்தப்பட்டது; ஆனா, அது இங்கே அதிகாரமாத்தான் ஆண்களுக்கு சொல்லித் தரப்படுது! இந்த அதிகார மனநிலைதான் குடும்ப வன்முறைக்கு அடிப்படை காரணம். இதுக்கு காரணமாகுற ஆணுக்கும் மனஅழுத்தம் தவிர்க்க முடியாதது!
'தன்னை ஏவுற நபரையும் வன்முறை பாதிக்கும்'ங்கிற புரிதலோட இப்பிரச்னைகளை நான் அணுகுறதால ஆண்களை நான் வில்லன்களா சித்தரிக்கிறது இல்லை!
குற்ற செயல்களால் பாதிப்புற்றவர்கள் குறித்த தொழில்முறை கல்வியான, 'விக்டிமாலஜி' படிப்பை 20 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் சென்று பயின்றவர் பிரசன்னா கெட்டு!
குடும்ப வன்முறையின் வீரியம் எதுவரை?
எதிலும் குறை சொல்றது, தன் கருத்தை ஏற்கணும்னு அழுத்தம் தர்றது, பழிச்சொல் பேசி பலவீனமாக்குறது, கள்ள மவுனத்தால குற்றவுணர்வு ஏற்படுத்துறது, அச்சுறுத்தி காரியம் சாதிக்கிறது... இப்படியான உளவியல் வன்முறையால பெண்கள் பாதிக்கப்பட்டாலும், இதோட தாக்கம் குழந்தைகளையும் பாதிக்கும்! இந்த குடும்ப வன்முறைகள் பார்த்து வளர்ற மகன் மனம், 'இதெல்லாம் தவறே கிடையாது'ன்னு நினைக்கும்; மகளோட மனசு, 'இதை சகித்துக் கொள்'னு தப்பான பாடம் போதிக்கும்!
அழுத்தம் திருத்தமாய் சொல்லும் பிரசன்னா கெட்டு, இவ்வன்முறை சங்கிலியை உடைக்கும் பொருட்டு, கல்லுாரி, பணியிடங்களில் ஆரோக்கிய உறவுமுறை பேணுவது சார்ந்து விழிப்புணர்வு தருகிறார்.
'விக்டிமாலஜிஸ்ட்' என்பதன் கூடுதல் நன்மை?
கடுமையான வன்முறைக்கு உள்ளான ஒரு பெண்ணை, அவரோட கணவர் வீட்ல இல்லாத நேரத்துல மீட்க போயிருந்தேன். அந்த வலியில கூட கணவரோட துணிகளை அடுக்கி வைச்சுட்டுதான் வந்தாங்க! பாதிக்கப்பட்டவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதம். இவங்க எல்லாரையும் அவங்கவங்க சூழல்ல இருந்தே அணுகுற அறிவை என் கல்வி எனக்கு தந்திருக்கு!
குடும்ப வன்முறைக்கு அழிவு கிடையாதா?
தனக்கு நடந்ததை சொல்லி உதவி கேட்குறதுலேயே பெண்களுக்கு பல தடைகள் இருக்கு! 'இந்த சின்ன விஷயத்தையா பெருசு பண்றே'ன்னு குடும்ப உறுப்பினர்கள் சொன்னதும் பெண்கள் முடங்கிடுறாங்க. 'சக உயிருடன் எப்படி பழகணும்'னு ஒவ்வொரு உயிரும் உணரணும்; இது சாத்தியமானா மட்டும்தான் குடும்ப வன்முறை ஒழியும்.
போன் 1800 102 7282