மொழியைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், சிலரிடம் சில முறையீடுகளைக் காணலாம். “மொழியை மாற்றியமைத்தால் என்ன? வேற்றுமொழிச் சொற்களைக் கலந்து எழுதினால் என்ன கெட்டுப்போய்விடும்? இலக்கணம் சொல்கிறபடி ஏன் பயன்படுத்த வேண்டும்? இலக்கணத்தை மீறித்தான் பார்ப்போமே. படிப்பவருக்கு எப்படியோ பொருள் புரிந்தால் போதாதா?”
இத்தகைய கேள்விகளை எழுப்புவோரிடம், ஒரேயொரு கேள்வியைக் கேட்கலாம். 'சூரியன் கிழக்கில் தோன்றுகிறது, மேற்கில் மறைகிறது' என்பது நாமறிந்த அறிவியல். முதன்முதலாக, இயற்கையை ஆராய்ந்த மனிதன், சூரியனுக்கும் திசைகளுக்கும் பெயர் வைத்தான். அது தோன்றுவதையும் மறைவதையும் உணர்ந்தான். பிறகு, தன் மொழியில் அவ்வாறு எழுதி வைக்கிறான். இப்போது ஒருவர் கேட்கலாம்.
“இப்படி எழுதி வைத்தபடிதான் சூரியன் தோன்ற வேண்டுமா? ஒரு நாள் திசை மாறித்தான் தோன்றட்டுமே, என்ன கெட்டுப்போய்விடும்?”
அவருடைய அறியாமையை என்னென்பது? சூரியன் கிழக்கில் தோன்றுகிறது என்று எழுதி வைத்ததால், சூரியன் கிழக்கில் தோன்றவில்லை. சூரியனுடைய இயற்கைச் செயல் என்னவோ அதனை எழுதி வைத்திருக்கிறோம். எழுதி வைத்தபடி சூரியன் தோன்றுவதில்லை. அப்படி மாற்றி எழுதி வைத்தாலும், சூரியனின் இயல்பு மாறாது.மொழி என்பது சூரியன். அதைப் பற்றி எழுதி வைக்கப்பட்டவை அனைத்தும் சூரியனைக் கூர்ந்து நோக்கி எழுதி வைக்கப்பட்டதைப் போன்ற மாறா இயல்புகள். எழுதியதற்கு எதிராகச் செயற்படுவதால், மொழி தன் இயற்கையிலிருந்து வெளிவராது. இலக்கணம் என்பதும் அத்தகையதுதான். மொழியைப் பற்றிய இயற்கைகளை ஆராய்ந்து எழுதப்பட்டதுதான் அது. மொழி இவ்வாறெல்லாம் இயங்குகிறது என்கிற திட்டவட்டமான வரையறை. அதற்கு எதிராகச் செய்யப்படுபவை அனைத்தும், மொழியின் இயற்கைக்கு எதிரானவை. ஒன்று அதனை மொழி ஏற்காது. அல்லது அவை காலப்போக்கில் புறந்தள்ளப்படும்.
எனில், புதியன படைப்பதற்கு மொழியில் வழியில்லையா? ஆயிரம் வழிகள் இருக்கின்றன. மனிதன் தோன்றியவுடன் ஊறுகாய் என்ற உண்பொருள் வந்திருக்காது. அவன் முதலில் காய் என்ற பொருளைக் கண்டான். பிறகு, ஊறுதல் என்ற வினையைக் கண்டான். பிற்காலத்தில் அப்பொருள் அவன் வாழ்க்கையில் வந்தவுடன் ஊறுகாய் என்று பெயரிட்டான். பிறகு ஊறுகாய் நிலைத்துவிட்டது.
மொழி இவ்வாறுதான் வலிமையாகச் செயற்படுகிறது. மெல்ல மெல்ல வளர்ந்து செழிக்கிறது.
- மகுடேசுவரன்