ஆந்திர மாநிலத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக, அனந்தகிரி மலைத்தொடர் இருக்கிறது. இத்தொடரில் வியப்பூட்டும் பொர்ரா குகைகள் (Borra Caves) உள்ளன. அங்கு, பல நூற்றாண்டு வரலாற்றை, நாம் நேரில் பார்க்கலாம். பலப்பல தலைமுறைகளாக இங்கு என்ன நடந்திருக்கிறது என்பதை, அறிவியலின் துணையோடு உணர்ந்து வியக்கலாம்.
ஒடிய மொழியில், பொர்ரா என்றால், 'துளை' என்று பொருள். அதற்கு ஏற்றார்போல் தரையில் உண்டான பெரிய துளையைப்போல்தான் இந்தப் பிரமாண்டமான குகைகள் உள்ளன. அதற்குள் மக்கள் நன்றாக நடந்து திரும்பும் வகையில் படிக்கட்டுகள், பாதுகாப்பு வசதிகளைச் செய்துள்ளார்கள். குகைகளுக்குள் பல வண்ண விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் ஒளியும் எதிரொளியும், புதுமையான ஒளியமைப்பை உண்டாக்குகின்றன. அங்கு புகைப்படம் எடுத்துக்கொள்ளச் சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள்.
ஆனால், இந்தக் குகைகளை வெறுமனே புகைப்படம் எடுக்கும் அழகிய பின்னணிகளாகக் கருதினோம் என்றால், நாம் மிகப் பெரிய வரலாற்று அனுபவத்தை இழந்து விடுவோம். ஒவ்வொரு மூலையிலும், புதுமையான வடிவங்கள் உருவாகியிருப்பதைக் கண்டு வியக்கலாம். இயற்கையான ஒளி எங்கிருந்து வருகிறது, இங்குள்ள குளிரின் தன்மை என்ன, அது எப்படி உண்டாகிறது, ஆங்காங்கு நீரோட்டம் தெரிவது எப்படி என்றெல்லாம் யோசிக்கலாம்.
இயற்கையாக உருவான பொர்ரா குகைகளுக்கு வயது 15 கோடி ஆண்டுகள் என்கிறது இங்குள்ள அரசாங்க அறிவிப்புப் பலகை. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், இங்கு ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் தண்ணீர், இங்கிருந்த பாறைகளோடு வேதி வினை புரிந்திருக்கிறது. அதனால் பாறை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துபோய், குகைகள் உருவாகியிருக்கின்றன. இப்போது அந்த ஆறு வற்றிவிட்டதால், குகைகளை நாம் முழுமையாகக் காணமுடிகிறது.
இங்கு வாழும் பழங்குடியின மக்கள், இந்தக் குகைகளை ஒரு புனிதத் தலமாகவும் பார்க்கிறார்கள், குகைகளுக்கு வெளியிலும் உள்ளும், பல வழிபாட்டு அமைப்புகளைக் காணலாம். மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் முதலில் கண்டறிந்ததாக, இந்தக் குகைகளைப் பற்றிக் கதை சொல்கிறார்கள்.
1807ஆம் ஆண்டு, வில்லியம் கிங் என்ற பிரிட்டிஷ் புவியியலாளர், இந்தக் குகைகளை முறைப்படி கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார். அதன்பிறகு, இங்கு பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கல் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.விசாகப்பட்டினத்திலிருந்து பொர்ரா குகைகள் செல்ல, சாலை வசதி உள்ளது. பேருந்து, கார் ஆகியவற்றுடன், பொர்ரா குகைகளுக்கு மிக அருகில், ஒரு இரயில் நிலையம் இருப்பதால், அந்த வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- என். சொக்கன்