இந்த பயிரில் கொழுப்பின் அளவு குறைவாகவும், லினோலிக் அமிலம் (64 சதவீதம்) அதிகமாக உள்ளதால் இருதய நோயாளிகளுக்கு உகந்தது. சரியான தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் அதிக வருமானம் பெறலாம்.
கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 2500 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் நன்கு வளரும். சராசரியாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்க வேண்டும். பூக்கும் நேரத்தில் அதிகளவு காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிக மழை பெய்தால் மகசூலை பாதிக்கும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண், கரிசல் நிலங்களில் வளரும்.
எந்த ரகம் ஏற்றது
தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள கோ 3 வீரிய ஒட்டுரகம் எக்டேருக்கு 2214 கிலோ சராசரியாக மகசூல் தரும். 90 முதல் 95 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். இதில் 42 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. அடி சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்தன்மை உடையது.
சூரியகாந்தி பயிருக்கு ஏற்றவாறு 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழு உரம், 12.5 கிலோ நுண்ணுாட்டகலவையை 40 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் இடவேண்டும். நாட்டு கலப்பை கொண்டு பார்கள் மற்றும் பாத்திகளை தயார் செய்ய வேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு பார்களின் இடைவெளி 60 செ.மீ., செடிகளுக்கான இடைவெளி 30 செ.மீ., அளவிலும் இருக்க வேண்டும்.
ஒரு எக்டேருக்கு சாதாரண ரகம் எனில் 7 கிலோவும் வீரிய ஒட்டு ரகமாக இருந்தால் 4 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை கலந்து விதைக்க வேண்டும். அல்லது ஒரு எக்டேருக்கு தேவையான விதையை 600 கிராம் அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போபாக்டீரியாவை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைநேர்த்தி செய்தபின் 15 நிமிடம் உலர்த்தி உடனடியாக விதைக்க வேண்டும்.
குழிக்கு 2 விதைகள் என்ற அளவில் பாரின் பக்கவாட்டில் 3 செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும். நடவு செய்த 10 வது நாளில் வளர்ச்சி இல்லாத செடிகளை களைந்து ஒரு குழிக்கு ஒரு தரமான செடி இருக்குமாறு பராமரிக்க வேண்டும். பயிருக்கு பயிர் போதுமான இடைவெளி இருந்தால் பயிருக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து, காற்று கிடைத்து அதிக பலன் தரும்.
ஊட்டச்சத்து மேலாண்மை
மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட வேண்டும். இல்லாவிட்டால் வீரிய ஒட்டு ரகத்திற்கு 60 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து மற்றும் 60 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். சாதாரண ரகத்திற்கு 60 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். உரங்களை மூன்று பங்காக பிரித்து 50 சதவீதம் அடியுரமாகவும் 25 சதவீதம் 20 முதல் 25 வது நாளிலும் மீதியை 45 முதல் 50 வது நாளிலும் இடவேண்டும். மண்வளத்தை அதிகரிக்க 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ தொழுஉரம், 25 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் இட வேண்டும்.
விதைத்தவுடன் ஒரு தண்ணீர், 2வது தண்ணீர் 7 ம் நாளில், 3வது தண்ணீர் 20 முதல் 25 நாளில், 4வது தண்ணீர் மொட்டு விடும் பருவத்திலும் பாய்ச்ச வேண்டும். பூபிடிக்கும் தருணத்தில் 2 முறை, விதை பிடிக்கும் தருணத்தில் 2 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
விதைத்த 15 வது நாளில் ஒரு முறையும், 30 வது நாளில் ஒருமுறையும் களை எடுக்க வேண்டும். விதைப்பதற்கு முன் களை அதிகமாக இருந்த நிலமென்றால் 500 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் ப்ளுகிளரொளின்' அல்லது பென்டிமெத்தலினை' ஒரு எக்டேருக்கு கலந்து தெளிக்க வேண்டும். பிறகு 30 முதல் 35 வது நாளில் கையால் களை எடுக்க வேண்டும்.
சூரியகாந்தி அயல்மகரந்த சேர்க்கை பயிராகும். மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க ஒரு எக்டேருக்கு 5 முதல் 10 தேன் பெட்டிகளை வைக்கலாம். பூக்கொண்டையின் வெளிவட்ட மஞ்சள் நிற பூக்கள் மலர ஆரம்பிக்கும் தருணத்தில் போரான் நுண்ணுாட்ட சத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கலந்து பூக்கொண்டை நனையுமாறு தெளிக்க வேண்டும். மகரந்தசேர்க்கை காலை 9:00 மணி முதல் 11:00 மணிக்குள் நடக்கும் என்பதால் மெல்லிய மஸ்லின் துணியால் நுண்ணுாட்டசத்தை தொட்டு ஒவ்வொரு பூக்கொண்டையையும் தேய்க்க வேண்டும். அருகருகே உள்ள பூக்கொண்டைகளை ஒன்றையொன்று முகம் சேர்த்து லேசாக தேய்த்துவிட்டாலும் நல்ல பலன் தரும்.
தலைத்துளைப்பான், பீகார் கம்பளிப்புழு, புகையிலை புழுக்கள் இப்பயிரை தாக்குகின்றன. ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டுமெனில் ஊடுபயிராக பச்சைப்பயிறு, உளுந்து, சோயாபீன்ஸ் பயிரிடலாம். மக்காசோளத்தை வரப்பு பயிராக நடவு செய்யலாம்.
ஒரு எக்டேருக்கு 15 இனக்கவர்ச்சிப்பொறிகள் வைத்து கட்டுப்படுத்தலாம். 5 சதவீத வேப்பஎண்ணெய் அல்லது வேப்பங்கொட்டைச்சாறை ஆரம்ப கட்டத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம். விளக்குப்பொறி வைத்து அந்துபூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பிவேரிய என்ற உயிர்பூச்சிகொல்லி மருந்தை தெளித்து புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
ஆல்டர்நேரியா கருகல், அடிசாம்பல் நோய், அழுகல் நோய்களை கட்டுப்படுத்த விதைநேர்த்தி செய்ய வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் மேங்கோசெப் மருந்தை கலந்து தெளித்தால் கருகல் நோய் கட்டுப்படும். பயிர்சுழற்சியை கடைபிடிக்க வேண்டும்.
சூரியகாந்தி பூவின் பின்புறம் மஞ்சள்நிறமாக மாறும். முன்புறம் விதைகள் கடினமானதாகி கருப்பு நிறமாக மாறும். பூக்களை மட்டும் அறுவடை செய்து காயவைத்து விதைகளை பிரிக்க வேண்டும். விதைகள் 8.9 சதவீத ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும்.
விதை உருவான உடனே கிளிகள் மற்றும் பறவைகள் உண்ண வரும். ஒலி எழுப்பும் கருவிகளை கொண்டு சத்தம் செய்தால் பறவைகள் ஓடிவிடும். கலர் ரிப்பன்களையும், ஒளி எதிரொலிக்க கூடிய வண்ண கண்ணாடிகளை ஆங்காங்கே கட்டி விடுவதன் மூலம் பறவைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.
- மகேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) அருண்ராஜ், சபரிநாதன், தொழில்நுட்ப வல்லுநர்கள் வேளாண் அறிவியல் மையம், தேனி அலைபேசி: 96776 61410