பயிர்கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக மண்ணை வெட்டும் சுழல்கத்திகளைக் கொண்ட சுழல் கலப்பை மூலம் உழவு செய்யலாம்.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயிர் அறுவடை முடிந்த நிலையில் நிலங்களில் மக்காச் சோளத்தட்டை, சோளத்தட்டை, பருத்திச் செடி மற்றும் இதர பயிர்களின் கழிவுகள் எஞ்சி நிற்கும். இவற்றுக்கு சிலர் தீ வைப்பதால் முதலில் மண்ணிலுள்ள நன்மை செய்யும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள் இறப்பதோடு மண்வளமும் கெடும். மற்ற நிலங்களிலும் பரவி சில கிலோ மீட்டர் துாரம் வரை புகைமூட்டம் ஏற்பட்டு வளிமண்டலத்தை மாசுபடுத்தும். சிலநேரங்களில் வனவிலங்குகள் மற்றும் பட்டிகளில் அடைக்கப்பட்ட ஆடுகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மற்ற கலப்பைகளை கொண்டு பயிர்கழிவுகள் உள்ள நிலத்தை உழுவது சிரமமான வேலை. பயிர்கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக மண்ணை வெட்டும் சுழல்கத்திகளைக் கொண்ட சுழல் கலப்பை மூலம் உழவு செய்யலாம். இக்கலப்பையால் இருமுறை உழும்போது பயிர்கழிவுகளை சிறு துண்டுகளாக வெட்டி மண்ணில் புதைக்கிறது. இவை வேகமாக மட்கி மண்ணிற்கு உரமாக மாற்றப்படுகிறது. இதனால் மண்ணின் கரிமச்சத்து அதிகரிக்கும். மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருக்கம் அடையும்.
- மகாலட்சுமி விதைப் பரிசோதனை அலுவலர், மதுரை ராமசாமி, சாய்லெட்சுமி சரண்யா வேளாண் அலுவலர்கள், விருதுநகர் அலைபேசி: 99528 88963