புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி, நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 1970ல், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியராக இருந்தார் சுப்ரமணி ஐயர். பாடம் நடத்துவதுடன், பொய் சொல்வது, திருடுவது, அடுத்தவர் பொருளை எடுத்துக் கொள்வது எல்லாம் பெரிய பாவம் என, கற்று தருவார். அது மனதில் பதிந்து விட்டது.
ஒருநாள், பள்ளி செல்லும் வழியில், தங்க சங்கிலி ஒன்று கிடந்தது. எடுத்துச் சென்று, அவரிடம் கொடுத்து விபரம் சொன்னதும், 'வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், ஏன் என்னிடம் தந்தாய்...' என கேட்டார்.
நிதானமாக, 'அடுத்தவர் பொருளை எடுக்க கூடாது என்று கற்று தந்தீங்க... அதனால் தான், உங்களிடம் தந்தேன்...' என விளக்கினேன்.
சிறிது நேரத்தில், அழுதபடி ஒரு பெண் பள்ளிக்கு ஓடி வந்து, 'வழியில், என் தங்க சங்கிலி தவறி விட்டது. அந்த வழியாக வந்த குழந்தைகள் அதை பார்த்தனரா என, கேட்டு சொல்லுங்கள்...' என தவிப்புடன் கேட்டார்.
உடனே, அடையாளம் கேட்டு, அந்த சங்கிலியை ஒப்படைத்தார். மாணவர்கள் முன்னிலையில், என்னை பாராட்டி, பேனா பரிசாக தந்தார். அது மகிழ்ச்சி தந்தது.
தற்போது, என் வயது, 63; அந்த ஆசிரியர் போல், என் குழந்தைகளுக்கும் நல்லொழுக்கத்தை கற்பித்து, அதன் வழி நடக்க பயிற்சி தருகிறேன்.
- கே.ரஹிமா, விழுப்புரம்.
தொடர்புக்கு: 93842 34019