மதுரை, சவுராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில், 1954ல், 7ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
அன்று வகுப்பு இடைவேளையின் போது, வெளியில் விற்ற தின்பண்டங்கள் வாங்க நண்பர் ஆர்.ஜி.தேசிகாச்சாரியுடன் சென்றேன். கீற்றுகளாக இருந்த மாங்காய் துண்டுகளை வாங்கியதும், பள்ளியில் மணி ஒலித்தது. அவசரமாக வாயில் போட்டபடி வகுப்பறைக்கு ஓடினோம்.
முதல் வரிசையில் அமர்ந்திருந்த என் வாய் வித்தியாசமாக இருந்ததை கண்ட தமிழாசிரியர் லட்சுமணாச்சாரி, ஒரு கேள்வி கேட்டார். வாயில், மாங்காய் துண்டு இருந்ததால் விடை கூற இயலாமல் தத்தளித்தேன். அருகில் அழைத்து, தலையில் ஓங்கி குட்டு வைத்து தண்டித்தார். அதனால் ஏற்பட்ட வலி சரியாவதற்கு ஆறு நாட்கள் ஆனது.
படிப்பை முடித்து, தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் பணியில் சேர்ந்தேன். ஒருநாள், அமைச்சரிடம் ஒரு கோப்பை சமர்ப்பிப்பதற்காக சென்று கொண்டிருந்தேன். எதிரில் அந்த தமிழாசிரியர் நண்பருடன் வந்து கொண்டிருந்தார்.
ஏதோ பிரச்னையுடன் இருப்பதை கவனித்தேன். உடனே, அவரை அணுகி சுய அறிமுகம் செய்தேன். வெகுவிரைவாக அடையாளம் கண்டு கொண்டார். அவரது பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வகையில், வேண்டிய உதவிகளை செய்தேன். என்னை அணைத்து, ஆனந்த கண்ணீர் விட்டார்.
மதுரைக்கு திரும்பியதும், வகுப்பு மாணவர்களிடம் இந்நிகழ்வை கூறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததை பின்னர் அறிந்து மகிழ்ந்தேன்.
எனக்கு, 81 வயதாகிறது; அந்த ஆசிரியரை இன்றும் நினைவில் கொண்டுள்ளேன்!
- கே.ஆர்.ரெங்காராம், சென்னை.