மூன்று விளக்கு ஜாலம்!
கம்பத்தில், சிகப்பு, மஞ்சள், பச்சை நிற விளக்குகளை உடையது, சாலை சிக்னல். இது, போக்குவரத்தை முறைப்படுத்துகிறது. இது உருவான விதம் பற்றி பார்ப்போம்...
போக்குவரத்து சிக்னலின் நோக்கம் சாலையில் வாகன ஓட்டத்தை ஒழுங்கு படுத்துவதுதான். ஆனால், வாகனம் கண்டுபிடிக்கும் முன்பே, போக்குவரத்து சிக்னல் நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் பார்லிமென்ட் மாளிகை அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விளக்கு டிசம்பர் 10, 1868 அன்று நிறுவப்பட்டது. எரிவாயுவில் இயங்கிய இதை, பிரிட்டிஷ் ரயில்வே பொறியாளர் ஜே.பி.நைட் உருவாக்கினார்.
அப்பகுதியில், குதிரை வண்டி போக்குவரத்து பெருகியதால், முறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சாலையில் நடந்து செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக செயல்படுத்தப்பட்டது. போலீஸ் அதிகாரி ஒருவர் கையால், இந்த விளக்கு சிக்னலை இயக்கினார்.
வண்டியை நிறுத்த சிகப்பு விளக்கும், தொடர பச்சை விளக்கும் ஒளிரவிடப்பட்டன.
தொழில் புரட்சிக்கு பின், உலகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்தது. நகரங்கள் பெருகின. சாலைகள் மேம்பட்டன. மோட்டார் வாகன கண்டுபிடிப்பால் போக்குவரத்து கணிசமாக உயர்ந்தது. முறைப்படுத்தும் அமைப்பு தேவைப்பட்டது.
அமெரிக்க காவல்துறை அதிகாரி லெஸ்டர் வயர், 1912ல், போக்குவரத்தை முறைப்படுத்த மின்சாரத்தில் இயங்கும் விளக்கை கண்டறிந்தார். அது, 1914ல் செயல்பட துவங்கியது.
போக்குவரத்தை முறைப்படுத்தும் மின்சார சிக்னல், அமெரிக்கா, ஓஹியோ, கிளீவ்லேண்ட் நகரில் முதன்முதலில் அமைக்கப்பட்டது.
இதிலும், சிகப்பு மற்றும் பச்சை விளக்குகள் மட்டுமே இருந்தன. தற்போதுள்ளது போல் மஞ்சள் விளக்கு இல்லை. அதற்கு பதிலாக, ஒரு பஸ்ஸர் ஒலியை கொண்டிருந்தது. இது சமிக்ஞை விரைவில் மாறும் என்பதை குறிக்கப் பயன்பட்டது.
மின்சாரத்தில் இயங்கிய போதும், விளக்கின் வண்ணங்களை கையால் மாற்ற வேண்டியிருந்தது. அதில் ஏற்பட்ட சிரமம் தான், தானியங்கி சிக்னல் முறையை கண்டுபிடிக்க துாண்டியது.
சிகப்பு, மஞ்சள், பச்சை என, மூன்று வண்ணங்களில் போக்குவரத்தை முறைப்படுத்திய தானியங்கி சிக்னல் அமைப்பு, அமெரிக்கா டெட்ராய்டு நகரில், 1920ல், நான்கு வழி சாலையில் நிறுவப்பட்டது. காவல்துறை அதிகாரி வில்லியம் போட்ஸ் இதை உருவாக்கினார். இது, போக்குவரத்தை முறைப்படுத்துவதில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
கணினி கண்டுபிடிக்கப்பட்ட பின், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு நகர நெரிசலை கணித்து, மென்பொருள் துணையால், தேவைக்கு ஏற்ப முறைபடுத்தும் பணியை செய்ய முடிகிறது.
தற்போது, உலகம் முழுதும் போக்குவரத்தை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க முடியும். எந்த இடத்தில் அதிக நெரிசல் உள்ளது என அறிந்து அதற்கேற்ப விளக்கு தானாக இயக்கி, போக்குவரத்தை முறைப்படுத்தும்.
தானியங்கி விளக்கில், கவுன்டவுன் டைமர், 1990ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சிக்னலில், விளக்கு நிறம் மாறும் முன், சாலையைக் கடக்க நடந்து செல்வோருக்கு போதிய நேரம் இருக்கிறதா என்பதை அறிய இது உதவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப போக்குவரத்தை முறைப்படுத்தும் தானியங்கி விளக்கு அமைப்பும் மேம்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மதித்து மேன்மையாக வாழ்வோம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.