மார்ச் 23, பகத்சிங் நினைவு நாள்
இன்றைய பாகிஸ்தான் பகுதியில் உள்ளது லாகூர். இங்குள்ள மத்திய சிறை வளாகம், மார்ச் 23, 1931 அன்று பரபரப்பாக இருந்தது. அன்று மாலை 4:00 மணிக்கே கைதிகள் அறைக்குள் அடைக்கப்பட்டனர். இது, சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சிறை அதிகாரிகள், 'மேலிடத்து உத்தரவு...' என்பதை தவிர, எதையும் கூறவில்லை. தேச விடுதலைக்காக போராடிய பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் அந்த சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே துாக்கில் இடப்போவதாக கூறினர் முடி திருத்தும் பணியாளர்கள். கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு இருந்தது. கைதிகள் முன் கூட்டியே அறைக்குள் அடைக்கப்பட்டு இருந்தனர்.
துாக்குமேடை தயாராக இருந்தது.
விடுதலை வீரர்கள், பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர். சுதந்திர தாகம் உடைய பாடல்களை அவர்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
'அந்த நாள் கண்டிப்பாக வரும்...
இந்த மண்ணும், வானமும், நம்முடையதாக இருக்கும்...'
இந்த பொருளில் பாடினர்.
மூவரின் உடல் எடையும் பரிசோதனை செய்யப்பட்டது.
துாக்கு தண்டனைக்கு உத்தரவு பிறப்பித்த தினத்தில் இருந்ததை விட, கூடுதல் எடையுடன் இருந்தனர். முதலில் துாக்கு மேடைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தார் சுக்தேவ்.
கடவுளை போற்றி துதிக்கும் சீக்கியர்களின் புனித வார்த்தையை நினைவில் கொள்ள, பகத்சிங்கிடம் வலியுறுத்தினார், சிறை வார்டர் சரத்சிங்.
அதை மறுத்து, 'வாழ்க்கையில் நான் ஒரு போதும் கடவுளை போற்றவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரம் கண்டு, கடவுளை விமர்சித்துள்ளேன். அதற்காக, இப்போது மன்னிப்பு கேட்டால், என்னை விட கோழை யாரும் இருக்க முடியாது. இறுதிகாலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என மக்கள் துாற்றுவர்...' என உறுதியுடன் கூறினார் பகத்சிங்.
சிறை கூடத்தில் காலணிகளின் கனமான ஓசை கேட்டது.
தொடர்ந்து, 'தியாகத்தின் ஆசையே, எங்கள் இதயத்தில் உள்ளது...' என்ற பொருள் உடைய பாடலை பாடினர்.
'இன்குலாப் ஜிந்தாபாத்...'
'ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ..'
இந்த முழக்கங்கள் எழுந்தன.
இவற்றுக்கு, புரட்சி ஓங்குக, இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்பதே பொருள்.
உலக வரலாற்றில், துாக்கு மேடையில் வீரர்கள் பலர் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். ஆனால், துாக்கு கயிரை கழுத்தில் மாட்டிய போது, 'கருப்பு துணியை அவிழ்த்துவிடுங்கள்; என் கண்கள், தாய் மண்ணை பார்த்தவாறே உயிர் பிரியட்டும்...' என்றார் மாவீரர் பகத்சிங்.
இந்திய வரலாற்றில், புதிய சிந்தனையின் துவக்கமாக உள்ள அவரது நினைவை போற்றுவோம்!
- எம்.அசோக் ராஜா