அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார் அக்பர்; அரச சபை பிரதானிகளில் ஐந்து பேர், அவரோடு நடந்தனர். மன்னர் முன்னே நடந்த சமயத்தில் சற்று பின்தங்கி, தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர்.
மன்னர் திரும்பிப் பார்த்ததும், அவர்கள் பேச்சு நின்றது.
'ஏதாவது பிரச்னை என்றால், என்னிடம் சொல்லலாமே...' என்றார் மன்னர்.
இதை எதிர்பார்த்தது போல், ஐவரும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
அதில் ஒருவர், சற்று முன்னால் வந்து, 'மன்னா... தவறாக நினைக்க கூடாது; பீர்பால் பணியில் சேருவதற்கு முன்பிருந்தே நேர்மையாகவும், திறமையாகவும் உங்களிடம் பணியாற்றுகிறோம்... ஆனால், பின்னால் வேலைக்கு வந்த பீர்பாலுக்கு மட்டும், அதிக சலுகை காட்டுகிறீர். அதுதான் எங்கள் ஆதங்கம்...' என்றார்.
'உங்க நாணயம், திறமை மீதும் என்றும் எனக்கு சந்தேகம் வந்ததில்லை; ஆனால், பீர்பால் அனைவரையும் விட திறமைசாலியாக இருக்கிறாரே...'
'உரிய வாய்ப்பளித்தால், அவரை விட திறமை வாய்ந்தவர்கள் என்பதை நாங்கள் நிரூபிப்போம்...'
'நல்லவேளை... பீர்பால் இங்கே இல்லை; உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன்; யார் அதற்குரிய பதிலை சொன்னாலும், அவருக்கு பீர்பாலின் பதவியை தந்து விடுகிறேன்... என்ன சம்மதமா...'
'சம்மதம் மன்னா... கேளுங்க...'
மன்னர் கையை கீழே நீட்டிக்காட்டி, 'இதோ இங்கே முளைத்திருக்கும் புல்லின் விதைகளை எங்கே பார்க்க முடியும்...' என்று கேட்டார்.
எவருக்கும் விடை தெரியவில்லை; குழப்பத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அச்சமயம் மன்னரை தேடி வந்தார், பீர்பால்.
'சரியான நேரத்தில் தான் வந்துள்ளீர்; பிரதானிகளிடம் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கு, உம்முடைய அமைச்சர் பதவியை தந்து விடப் போகிறேன்; அதற்காக பதிலை தேடிக் கொண்டிருக்கின்றனர்...' என்றார்.
'அப்படியானால் நல்லது மன்னா... என்னிடமும் கேளுங்கள்; பதில் தெரிகிறதா என்று பார்க்கிறேன்...' என்றார் பீர்பால்.
'ஒன்றுமில்லை... இதோ முளைத்திருக்கும் புல்லின் விதைகளை எங்கே கண்டுபிடிக்கலாம் என்று தான் கேட்டேன்...' என்றார் மன்னர்.
'ஒன்றும் கஷ்டமான கேள்வியில்லையே...'
கூறியபடியே, பீர்பால் அருகிலிருந்த குளத்தில் நீரைக் எடுத்து வந்து கட்டாந்தரையில் தெளித்து, 'விதை எங்கிருக்கிறது என்பது தெரிய, சில நாட்கள் ஆகும் மன்னா...' என்றார்.
அரசவை பிரதிநிதிகள் ஒன்றும் புரியாமல் மன்னரைப் பார்த்தனர்.
இதைக் கண்ட பீர்பால், 'மண்ணில் புதைந்துள்ள புல்லின் விதைகள் கண்ணில் தென்படாது... ஆனால், துளி நீர்பட்டால் போதும், வெடித்து கிளம்பி துளிர்த்து தலை காட்டி விடும்; விதை இருக்கும் இடம் தெரிந்து விடும்...' என்றார்.
மன்னர் ஆமோதித்து தலையசைக்க, மற்றவர்கள் வாயடைத்தனர்.
குழந்தைகளே... சிந்தித்து அறிவை பெற்று அதன்படி செயல்படுங்கள்.
- பாவலர் மலரடியான்