அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டி...
என் வயது, 10; பிரபல பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவன். என் அம்மா, இல்லத்தரசியாக உள்ளார். தந்தை, மத்திய அரசு பணியில் உள்ளார். ஒரு வயதில் தங்கை இருக்கிறாள். அவள், வாலும், தோலுமாய் காட்சி தருகிறாள்.
எதை ஊட்டினாலும், வாந்தி எடுத்து விடுவாள். உணவு ஊட்டும் போது, பெரும்பாலும், அழுகை தான். என் அம்மாவுக்கு, உணவு ஊட்டத் தெரியவில்லையா அல்லது எல்லா குழந்தைகளும், உண்ணாமல், அடம் பிடிப்பது இயல்பு தானா...
என் தங்கையை புஷ்டியாக்க வழி சொல்லுங்க ஆன்டி...
இப்படிக்கு,
ஆர்.முருகேச பாண்டியன்.
அன்பு மகனே...
சத்தான, எந்த உணவை கொடுக்க வேண்டும் என, முடிவு செய்வது தாயின் கடமை.
தரப்படும் உணவை, எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும் என, முடிவு செய்வது குழந்தையின் உரிமை.
இரண்டு வயது வரை, தாய்பால் கொடுப்பது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது. குழந்தைக்கான முதல் தடுப்பூசியே தாய்பால் தான்.
உலகில், எல்லா தாயும், குழந்தைக்கு, ஒரே நாளில், டன் கணக்கில் உணவு ஊட்டி, 'சிக்ஸ் பேக் பேபி' ஆக்க பேராசைபடுகின்றனர்; இது தவறு!
குழந்தையின் இரைப்பை மிக மிக சிறிது. ஒரு நாளைக்கு, நான்கு வேளையாக பிரித்து உணவு ஊட்டலாம். அதையும் சிறிது சிறிதாக தான் ஊட்ட வேண்டும்; வலுக்கட்டாயம் கூடாது.
வகை வகையான உணவுகளை மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட நேர இடைவேளையை உணவு ஊட்டுவதில் கடைபிடிக்க வேண்டும். வறுத்த, பொரித்த உணவை தவிர்த்து, நார்சத்துள்ளதை கொடுக்க வேண்டும்.
உணவுடன், சிந்திக்கும் திறன், கவனிக்கும் ஆற்றல், கூடி வாழும் கலை, நற்பண்புகளை சேர்த்து ஊட்ட வேண்டும். தேக்கரண்டியால், ஊட்டக் கூடாது; உணவு ஊட்டும் முன், குழந்தையின் கைகளையும், தாயின் கைகளையும் சுத்தபடுத்துவது மிகவும் அவசியம்.
பிஸ்கெட்டை, பாலில் மசித்து தருவது சரியான உணவல்ல; அதனால், மலச்சிக்கல் ஏற்படும்; பசியின்மை உருவாகும்.
உணவை அரைத்து கொடுக்கக் கூடாது. மிக்சி உணவு, பல் வளர்ச்சியையும், மென்று சாப்பிடும் பழக்கத்தையும் பாதிக்கும். கையால் பிசைந்து உணவை ஊட்டினால் சிறப்பு. உண்மையான சுவை தெரிய ஊட்ட வேண்டும்.
உணவு ஊட்டும் முன், பின் அல்லது ஊட்டும் போது, குழந்தையுடன், தாய் பேசியவாறு இருக்க வேண்டும். ஒரு வயது குழந்தை பேசாது; ஆனால், தாய் பேசியதை புரிந்துக் கொள்ளும். உணவு ஊட்டி முடித்த பின், சுட வைத்து, ஆறிய தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு, குழந்தை உடல்வாகு மாறுபடும். பிறர் குழந்தைகளுடன், ஒரு போதும் ஒப்பிடக் கூடாது. ஒல்லியாக இருக்கும் குழந்தையும், ஆரோக்கியமானது தான்.
அர்பணிப்பு உணர்வுடன் செய்தால், உணவு ஊட்டும் கலை, உன் அம்மாவின் கைவசமாகும்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.