மார்ச் 22 - தெலுங்கு புத்தாண்டு
ஒரு பண்டிகையை முன்னோர் வகுத்திருக்கின்றனர் என்றால், அதற்குள் ஆயிரம் அர்த்தங்களைப் பொதிந்து வைத்திருப்பர். அந்த பண்டிகை நடக்கும் கிழமை, நட்சத்திரம், திதி என, எல்லாவற்றுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.
ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், மார்கழி திருவாதிரை என, நட்சத்திரங்களுக்கும்; ஆடி அமாவாசை, சித்ரா பவுர்ணமி என, திதிகளுக்கும்; கார்த்திகை சோமவாரம் - திங்கள் கிழமை, ஆடி வெள்ளி, தை செவ்வாய் என, கிழமைகளுக்கும் சிறப்பு சேர்ப்பவை சில.
இந்த விழா நாட்களில், எல்லாராலும் ஒதுக்கப்படும் சில நட்சத்திரங்களும், திதிகளும் கூட பங்கெடுத்துக் கொள்கின்றன. அதில் ஒன்று, பாட்டிமை எனப்படும் பிரதமை. இந்த திதியில் சுபநிகழ்ச்சிகள் செய்வதை தவிர்க்கின்றனர். ஆனால், இந்த திதியைத் தான், உலகத்தைப் படைக்கவே தேர்ந்தெடுத்தார், பிரம்மா.
அதாவது, எல்லாமே நல்லது தான். நாம் எதைத் துவங்க வேண்டும் என நினைக்கிறோமோ, அதை சற்றும் தாமதமின்றி, நாள் நட்சத்திரம் பார்க்காமல் துவங்கினாலும் அதுவும் வெற்றி பெறும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
இதைத்தான், 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்...' என்கிறார், திருவள்ளுவர்.
தெய்வத்தால் மட்டுமல்ல, நாள் நட்சத்திரங்களால் முடியாதது கூட முயற்சியால் வெற்றி பெறும் என்பது, இதன் உட்கருத்து. இதனால் தான், பிரதமையில் துவங்கும் யுகாதியை, மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர், தெலுங்கு, கன்னட மக்கள்.
ஒரு யுகம் முடிந்ததும், உலகம் அழிந்து விடும். சில காலத்துக்குப் பிறகு, புதிய உலகம் படைக்கப்படும். அவ்வாறு படைக்கப்படும் நாளே, யுகாதி எனப்படுகிறது. யுகாடி என்பதே யுகாதியாகத் திரிந்தது.
யுகம் என்றால் ஆண்டு அல்லது வயது. அடி என்றால் ஆரம்பம் - அடியெடுத்து வைத்தல். ஒரு ஆண்டின் ஆரம்பம் என்பதே, யுகாதியின் பொருள்.
இன்னொன்றையும் பார்க்க வேண்டும். தெலுங்கு புத்தாண்டின் முக்கிய உணவு, 'ஒப்பட்டு!' தமிழகத்தில் இதை போளி என்கிறோம். இதை நெய்யில் தொட்டு சாப்பிடுவர்.
மதிய உணவுக்கு இவர்கள் சேர்ப்பது வேப்பம்பூ பச்சடி. வேப்பம் பூ, புளி, மாங்காய், உப்பு, மிளகாய் மற்றும் வெல்லம் சேர்த்து இதை சமைப்பர். இதில், இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம், உவர்ப்பு என, அறுசுவையும் கலந்திருக்கும்.
புதிய ஆண்டில் எல்லாமே, ஒப்பட்டு போளி போல இனிமையாக இருக்க வேண்டும் என்று தான், மக்கள் விரும்புவர். ஆனால், நடைமுறையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி தான் வரும். அது அளவில் தான் மாறுபடும். இதைத்தான் வேப்பம் பூ பச்சடி குறிக்கிறது.
புதிய ஆண்டில் நாம், நம் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருப்போம். அதில் வரும் இனிப்பான, கசப்பான அனுபவங்களை நுகர்ந்தபடியே வெற்றிப் படிக்கட்டில் ஏறுவோம். நிச்சயமாக, சிகரத்தை அடைவோம்.
தி. செல்லப்பா