நண்பரின் சேவை!
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய நண்பர், ஐ.ஏ.எஸ்., தேர்வை ஆறு முறை முயன்றும், அவரது முயற்சி கைகூடவில்லை. அதற்காக வருந்தினாரே ஒழிய, சோர்ந்து விடவில்லை. தன் அனுபவத்தை, மற்றவர்களுக்கு பயன்படுத்த முடிவெடுத்தார்.
அரசு தேர்வுகள் மற்றும் வங்கிப் பணி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவவும், அந்த வேலைவாய்ப்பின் மூலம், தனக்கான வருமானத்தை பெறவும், பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சமீபத்தில், அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அவரின் பயிற்சி நிலைய முகப்பில் வைத்திருந்த பலகையில், 'இந்த பயிற்சி நிலையத்தில், ஏழை மாணவ, மாணவியருக்கும், பெற்றோர் அல்லது தந்தையை இழந்தவருக்கும், ஆதரவற்றோர் மற்றும் திருநங்கையருக்கும், இலவசமாக பயிற்சியளிக்கப்படும்...' என, எழுதி வைத்திருந்தார்.
இதுகுறித்து கேட்டபோது, 'அரசுப் பணியும், தேர்வெழுதி பெறும் மற்ற பணிகளும், வசதி படைத்தவர்களுக்கு மட்டுமானதல்ல; அதில், ஆர்வமுள்ள அனைவரையும் ஊக்குவித்து, உதவும் பொருட்டும், அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்திலும், 'இலவச பயிற்சி' என்ற சேவையை, செய்யத் துவங்கியிருக்கிறேன்...' என்றார்.
நண்பரின் நல்லெண்ண சேவையை, மனதார வாழ்த்தி வந்தேன்!
- வெ.பாலமுருகன், திருச்சி.
ஐஸ் விற்பனையில் அசத்தும் பட்டதாரி!
எம்.பி.ஏ., பட்டதாரியான, உறவினர் மகன், பட்டம் வாங்கியவுடன், ஐஸ் கம்பெனி வைப்பது குறித்த பயிற்சி எடுத்தார். பயிற்சி முடித்து, வங்கிக் கடன் பெற்று, ஐஸ் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார்.
பல வகையான சுவைகளில் குல்பி மற்றும் வகை வகையான ஐஸ் கிரீம்களை தயாரித்து, நடமாடும் விற்பனையகங்கள் மூலம், விற்பனைக்கு அனுப்பி வருகிறார். தற்போது அவரிடம், ஆண்கள், பெண்கள் என, 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். வியாபாரமும் அமோகம்.
அவரிடம், படித்த படிப்பிற்கு, ஏதேனும் நிறுவனத்தில் வேலைக்கு சேராமல், சுயதொழிலை தேர்வு செய்ததற்கான காரணத்தை கேட்டேன். 'அடுத்தவரிடம் வேலை பார்த்தால், என் வருமானமும், வாழ்க்கையும், வளர்ச்சியும், அவர்களின் கைகளில். சுயதொழிலிலோ, அவையனைத்துமே, என் எண்ணத்திற்கும், உழைப்புக்கும் ஏற்றவாறு இருக்கும்.
'மாத ஊதியத்திற்கு ஓர் எல்லை உண்டு. ஆனால், சுயதொழிலில் கிடைக்கும் வருமானத்திற்கு, முதலீடு, உழைப்பு, உற்பத்தி, விற்பனை, இவையே எல்லை. அவை அதிகரிக்க அதிகரிக்க, வருமானமும் அதிகரித்துக் கொண்டே போகும். அதனால் தான், சுயதொழிலை தேர்ந்தெடுத்தேன்...' என்றார்.
இன்றைய இளைய தலைமுறையினர், படித்த படிப்புக்கேற்ற வேலை தான் வேண்டுமென, வயதையும், காலத்தையும் வீணாக்காமல், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, சுயதொழிலில் ஈடுபட்டு வருவதை எண்ணி மகிழ்ந்து, வாழ்த்தினேன்!
- பொ.தினேஷ்குமார், மறைமலைநகர், செங்கல்பட்டு.
சுற்றுலா செல்லும்போது...
கோடை வந்தாலே, பலரும் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல, 'பிளான்' போடுவர். அவ்வாறு செல்லும்போது, முக்கியமான சில விஷயங்களை பின்பற்ற மறந்து விடக்கூடாது.
* சொந்த காரில் செல்வோர், அவர்களுக்கு காரோட்ட தெரிந்திருந்தாலும், பாதுகாப்பான பயணம் மற்றும் சுற்றுலாவை ரசித்து மகிழ வசதியாக, அனுபவமுள்ள ஓட்டுனரை அழைத்துச் செல்வது நல்லது
* அறிமுகமில்லாத நபர்களிடம், எதையும் வாங்கி உண்பதை தவிர்க்கவும்
* குடியிருப்புகளை விட, அனுமதி பெற்ற தங்கும் விடுதிகளில் தங்குவதே சட்டப்பூர்வமானது
* சுற்றுலா தலங்களில் கலந்துகொள்ளும் அபாயகரமான விளையாட்டுகளின் போது, மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது சிறப்பு
* படகு பயணங்களின் போது, நீச்சல் தெரிந்தவர்களாக இருந்தாலும், 'லைப் ஜாக்கெட்'டை கட்டாயமாக அணிந்து கொள்வது பாதுகாப்பானது
* நெகிழி மற்றும் கண்ணாடி பொருட்களை தவிர்க்கவும். குப்பைகளை உரிய இடங்களில் போட, மறக்காதீர்கள்
* ஆபத்தான மலைப் பகுதிகளில், உள்ளூர்வாசிகளின் பணத்தாசையில் ஏற்படுத்தித் தரும் கூடாரங்களில் தங்குவதை தவிருங்கள்; அது சட்டவிரோதம்
* வனவிலங்கு சரணாலயங்களில், அங்குள்ள உயிரினங்களிடம் தேவையற்ற குறும்புகளை செய்வதை தவிருங்கள்.
இவற்றை அவசியம் பின்பற்றி நடந்து, சுற்றுலாவின் மகிழ்வை, பூரணமாக அனுபவியுங்கள்!
— வி.சங்கர், சென்னை.